shadow

பிரதமர் மோடியின் ‘தனிப்பட்ட ஊழல்’ குறித்த ஆவணங்கள் ராகுல் காந்தியிடம் இருந்தால் மோடியை ஏன் அம்பலப்படுத்தவில்லை என்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

“ராகுல் காந்தியிடம் மோடிஜியின் தனிப்பட்ட ஊழல் குறித்த ஆவணங்கள் இருந்தால் நாடாளுமன்றத்திற்கு வெளியே அதனை வெளியிட வேண்டியதுதானே? பாஜக கூறுகிறது காங்கிரஸுக்கு எதிராக அகஸ்டாவெஸ்ட்லேண்ட் காப்டர் ஊழல் தங்கள் வசம் இருக்கிறது என்று, காங்கிரஸ் கட்சியோ சஹாரா/பிர்லா விவகாரம் பாஜகவுக்கு எதிராக உள்ளது என்று கூறுகிறது. இது ஏதோ நட்பு ரீதியான ஆட்டமாக தெரிகிறது. இருவரும் அம்பலப்படுத்தப் போவதேயில்லை” என்றார்.

ரூ.500, 1000 செல்லாது என்று அறிவித்த நடவடிக்கையினால் வியாபாரிகள் தாங்கள் பாஜக அரசினால் சுரண்டப்படுவதாக காட்டத்தில் உள்ளனர் என்று கூறிய அரவிந்த் கேஜ்ரிவால், “நாட்டின் வணிகர்கள் பாஜக தங்களிடமிருந்து பணத்தை பறித்துள்ளது, வாக்கைப் பறித்துள்ளது, ஆனால் எங்களை திருடர்கள் என்று கூறிவிட்டு உணமியான திருடர் பிரதமருடன் உணவருந்தி வருகிறார்” என்று ட்வீட் செய்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் ஆஷிஷ் கேத்தன் தனது ட்வீட்டில், “நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச அனுமதிக்கப்படவில்லை என்றால் அவைக்கு வெளியே பேசி மோடிக்கு எதிரான தகவலை வெளியிட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்ற விவகார மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் கூறும்போது, “பொய்யானது, ஆதாரமற்றது. இது வேறு வழியில்லாமல் தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டு இதற்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

Leave a Reply