shadow

முழுமையான தேடல் குழு அமைப்பு

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணியிடத்துக்கு மூன்று பெயர்களைத் தெரிவு செய்வதற்கான தேடல் குழு முழுமையாக அமைக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ராஜாராமின் பதவிக் காலம் கடந்த ஆண்டு மே 26-ஆம் தேதியோடு முடிவுக்கு வந்தது. அதன் பிறகு, பல மாதங்களுக்குப் பின்னர் புதிய துணைவேந்தரை நியமிப்பதற்காக, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் தலைமையில் முதல் தேடல் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு பரிந்துரைத்த மூன்று பெயர்களை தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் நிராகரித்தார்.

அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டாவது தேடல் குழுவும் லோதாவின் ராஜிநாமா, பேராசிரியர் கே.அனந்த பத்மநாபன் நியமன சர்ச்சை உள்ளிட்ட காரணங்களால் கலைக்கப்பட்டது.
மூன்றாவது தேடல் குழு: துணைவேந்தர் இன்றி தொடரும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இப்போது புதிதாக மூன்றாவது தேடல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதில் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி.எஸ். சிர்புர்கர் ஒருங்கிணைப்பாளராகவும் தமிழக அரசுப் பிரதிநிதி ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி என். சுந்தரதேவன் மற்றும் பல்கலைக்கழக ஆட்சிக் குழுப் பிரதிநிதி பேராசிரியர் ஞானமூர்த்தி ஆகியோர் உறுப்பினர்களாகவும் இடம்பெற்றுள்ளனர். இந்தப் புதிய குழு அடுத்த நான்கு மாதங்களுக்குள் மூன்று பெயர்களை ஆளுநருக்குப் பரிந்துரை செய்யும். அதிலிருந்து ஒருவரை துணைவேந்தராக ஆளுநர் நியமிப்பார்.
கல்வியாளர்களின் எதிர்பார்ப்பு: திருச்சி பாரதிதாசன், சேலம் பெரியார் பல்கலைக்கழகங்களைப் பின்பற்றி அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்போரின் பெயர்கள் இணையதளத்தில் பகிரங்கப்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது.
இதை வேந்தராகிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply