shadow

முப்பரிமாண தரைத்தளங்கள் குறித்து கேள்விப்பட்டதுண்டா?

வீட்டை கலாபூர்வமாகவும் புதுமையாகவும் தனிப்பட்ட ரசனையுடனும் வடிவமைப்பதையே பலரும் விரும்புகின்றனர். இதற்காகப் புதுமையான வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இப்படிப் புதுமையான வடிவமைப்புகளைத் தேடுபவர்களுக்காகச் சென்னையில் ‘முப்பரிமாண தரைத் தள’ங்களை (3டி ஃப்ளோரிங்) அறிமுகம் செய்திருக்கிறது ‘ஷாடோஸ்’ என்னும் நிறுவனம். இந்நிறுவனத்தை வக்காஸ், முஃபீத் என்ற இரண்டு பொறியாளர்கள் இணைந்து தொடங்கியிருக்கின்றனர். வீட்டின் கூரைகள், சுவர்கள், மேசைகள் போன்றவற்றை முப்பரிமாண வடிவமைப்பில் உருவாக்குகிறது இந்நிறுவனம். சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இந்த வடிவமைப்பு நடைபெற்றுவருகிறது.

பாதுகாப்பான தரைத் தளம்

இந்த முப்பரிமாண வடிவமைப்பில், ஒரு காட்சியையோ ஒளிப்படத்தையோ அப்படியே அசலான தோற்றத்துடன் தரைத் தளமாக வடிவமைக்க முடியும். ‘டைல்ஸ்’, ‘மார்பில்ஸ்’ போன்ற கற்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் தரைத் தளங்களுக்கு மாற்றாக இந்த முப்பரிமாண தரைத் தளத்தைப் பயன்படுத்த முடியும்.

“இந்த ‘3டி ஃப்ளோரிங்’ வடிவமைப்பு முதன்முதலில் வளைகுடாவில் அறிமுகமானது. நான் அங்கே பணியாற்றியதால் அதை அறிந்துகொண்டேன். இதை ஏன் நம்முடைய நாட்டில் அறிமுகப்படுத்தக் கூடாது என்ற யோசித்தேன். ஏனென்றால், இங்கே 3டி வடிவமைப்பில் சுவரொட்டிகள் மட்டுமே பிரபலமாக இருந்தன. அதனால், என் நண்பர் முஃபீத்துடன் இணைந்து ‘ஷாடோஸ்’ நிறுவனத்தைத் தொடங்கினேன்” என்று சொல்கிறார் ஏ. வக்காஸ். இந்நிறுவனத்தின் இணைநிறுவனரான முஃபீத் கணினிப் பொறியாளர்.

இந்த முப்பரிமாண தரைத் தளத்துக்கான தரமான ரசாயனங்களைத் தயாரிப்பதற்காக நிறுவனர்கள் இருவரும் ஆறு மாதங்கள் களத்தில் இறங்கிப் பணியாற்றியிருக்கிறார்கள். “தரைத் தளம் அமைப்பதற்கான சரியான ரசாயனங்களை உருவாக்குவது ஆரம்பத்தில் சவாலானதாக இருந்தது. சென்னையில் இயங்கும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ரசாயன விஞ்ஞானிகளின் உதவியுடன் தரைத் தளத்துக்கான ரசாயனத்தைச் சோதனை செய்தோம். ஆறு மாதங்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு, கான்கிரீட்டில் நீர்புகாத் தன்மையுடனும் அமிலத்தால் பாதிக்கப்படாத் தன்மையுடனும் வழுக்காத தன்மையுடனும் உணவு தரச் சான்றிதழ் போன்ற அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கினோம். ‘டைல்ஸ்’, ‘மார்பில்ஸ்’ தரைத் தளங்கள் போலவே இந்தத் தரைத் தளமும் 15 ஆண்டுகள் ஆயுள் கொண்டது. இதுவரை, இந்த முப்பரிமாண வடிவமைப்பில் சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 50 திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம்” என்று விளக்குகிறார் வக்காஸ்.

படைப்பாற்றல் மிளிரும் தரைத் தளங்கள்

இந்த முப்பரிமாணத் தரைத் தளங்களைத் தனிப்பட்ட ரசனையும் படைப்பாற்றலும் வெளிப்படக்கூடிய கருப் பொருள்களில் மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். “கடல், காடு, தோட்டம், போன்ற காட்சிகளை வாடிக்கையாளர்கள் தற்போது அதிகமாகத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்தக் காட்சிகளைத் தரைத் தளத்துக்கு மட்டுமல்லாமல் வீட்டின், கூரைகள், சுவர்கள், கழிப்பறைகள், படிக்கட்டுகள், மேசைகள் போன்றவற்றுக்கும் தேர்ந்தெடுக்கிறார்கள்” என்கிறார் வக்காஸ். இவரது வடிவமைப்புகள் www.shadoz.in என்ற அவர்களது இணையதளத்தில் பார்க்கக் கிடைக்கிறது.

இந்த முப்பரிமாண வடிவமைப்பில், ஒரு சதுர அடிக்கு ரூ. 450 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. பத்துக்குப் பத்து அளவு கொண்ட அறையின் முப்பரிமாண தரைத் தள வடிவமைப்புக்கு ரூ. 45, 000 செலவாகும். அதுவே வீடு முழுக்க வடிவமைக்க வேண்டுமென்றால், 700 சதுர அடி வீட்டுக்கு 3.5 லட்ச ரூபாய் வரை செலவாகும்.

Leave a Reply