shadow

முன்வாசலில் போன அம்மி, பின் வாசலில் வருது…

ammiஇன்றைய சூழலில், இடப் பற்றாக்குறை காரணமாகத் தனி வீடு என்கிற தன்மை முற்றிலுமாக நீங்கிவிட்டது என்றே சொல்லலாம். எல்லாமே இரண்டு அல்லது மூன்று அறைகள் கொண்ட, நவீன வசதிகள் அமைந்த தளங்கள்தான் (ஏன், நான்கு படுக்கையறை கொண்ட தளம் என்றுகூட ஒரு விளம்பரம் வந்திருந்தது). அதே சமயம் இத்தகைய நவீன தளங்களிலும்கூட பழைய கால அம்சங்களை வேறு வகையில் பின்பற்றுகிறார்கள்.

ஊஞ்சலையே எடுத்துக் கொள்ளுங்கள். நான் அறிந்த வரையில் சென்னை போன்ற நகரங்களில் இது கிடையவே கிடையாது. கிராமங்களில், பண்ணையார் இல்லங்களில் நடுக் கூடத்தில் ஊஞ்சல் மாட்டியிருப்பார்கள். பிற்பகல் வேளைகளில், பண்ணை யாரோ மூதாட்டியோ ஊஞ்சலை ஆட்டியபடியே தின்பண்டங்கள் கொறித்துக் கொண்டிருப்பார்கள். விசேஷம் ஏதாவது வந்தால், கொக்கியைக் கழற்றி ஊஞ்சலைத் தனியே எடுத்து ஓரமாக வைப்பார்கள்.

அந்தப் பழைய கால ஊஞ்சல், இன்றைய தளங்களில் முக்கியமான ஒன்றாக அமைகிறது. மூன்று அறை கொண்ட தளம் என்றால், நிச்சயம் ஊஞ்சல் இருக்கும்; வரைபடத்திலேயே அதற்கென இடத்தைக் காட்டியிருப்பார்கள். ஆனால் வேகமாக அசைந்து அசைந்து ஆடும் காட்சியைக் காண்பது கடினம்தான். ஏனெனில், 18-க்கு 10 கூடத்தில் டி.வி., சோபாசெட்கள், டைனிங் டேபிள் எல்லாம் அடைத்துக் கொண்டுவிடுமே! சில வீடுகளில் 100 சதுர அடியிலேயே பூஜை அறை வேறு அடைத்துக் கொண்டுவிடும்.

அடுத்தது, திண்ணை, திண்ணைப் பேச்சு என்ற தலைப்பில் பிரபல வார ஏடு, ஒரு பகுதியையே வெளியிட்டு வந்தது. கிராமத்துத் திண்ணை இன்று குட்டி ஸிட்-அவுட் ஆகிவிட்டது. அதற்கு இடப் பற்றாக்குறை என்றால் சமையலறையின் பின்புறம் பால்கனி என்று ஒன்று கட்டுகிறார்கள். பாத்திரங்களைக் கழுவ ஸிங்க், துணி உலர்த்தக் கொடிகள், இவை அங்கு இருக்கும். சிறுவர்கள் ஏதாவது ஆட்டம்கூட ஆடுவார்கள்.

நாம் அம்மி ஆட்டுக்கல்லை ஓல்ட் டைப் என்கிறோமே! அவைகூட இன்றைய தளங்களில் இடம் பெறுகின்றன. சமையறையில் ஓரமாக அம்மியைப் பதித்துவிடுகிறார்கள். சில வட இந்தியர்கள் அம்மியில் மசாலா அரைத்தால்தான் ருசியாக இருக்கும் என்று நம்புகிறார்கள். ஆட்டுக்கல்லைக்கூடப் பின்புறம் பால்கனியில் வைத்துக்கொள்ளலாம். மின் வெட்டு அடிக்கடி நிகழ்கிற புறநகரிலும் இது ஒரு வசதிதான் என்பது சிலரின் கருத்து. ஆனால் ஒன்று, முற்ற முழுக்க மாடுலர் கிச்சன் இருந்தால், அதில் அம்மியைப் பதிக்க இயலாது.

நவீன மருத்துவ வசதிகளும்கூடப் பழமையை நோக்கித் திரும்பிச் செல்ல வைக்கின்றன என்றால் அது முரணாகத் தெரியலாம். ஆனால் அது உண்மை. மருத்துவ வசதிகளால் 80 வயது வாழ்கிறவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் எதிர்கொள்ளும் பெரிய இடர் குளியலறைதான்! வழுக்கி விழுந்தால் படுத்த படுக்கைதான். இதைத் தவிர்ப்பதற்காகவே இல்லத்தில் எலலா இடங்களிலும் டைல்ஸ் பதித்தாலும், குளியலறையில் மட்டும் சொரசொரப்பான சிமென்டையே பூசுகிறார்கள். அடையாறில் ஒரு வீட்டில், நவீன டைல்ஸ் பதித்த தரையை மாற்றி, மீண்டும் சொரசொரப்பான தரையை ஏற்படுத்தினார் நண்பர் ஒருவர்.

இவ்வளவு சொல்லிய பின், பழைய தளங்களில் புதிதாக நிலவும் ஒரு மாற்றத்தைக் குறிப்பிடாமலிருக்கலாமா? மின் தூக்கி வசதிதான் அது. 1978-ல்தான் மயிலை, அபிராமபுரம் போன்ற இடங்களில் 900 சதுரஅடி கொண்ட தளங்கள் அமைக்கப்பட்டன. பெரும்பாலான அந்தக் கட்டிடங்களில் மின் தூக்கி வசதி இல்லை. இன்று அங்கு வசிப்பவர்களுக்கு 70 வயதுக்கு மேலாகிவிட்டது. எனவே எல்லாக் குடித்தனக்காரர்களிடமும் ஒப்புதல் பெற்று மின் தூக்கி வசதி அமைக்கிறார்கள். ஆனால் இதற்குக் கட்டிட அமைப்பு பொருத்தமாக இருக்க வேண்டும்.

“முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே…”

என்று இறைவனைப் போற்றிப் பாடிய மாணிக்கவாசகர் ‘இன்னவகையே எமக்கெங்கோன் ஓங்குக’ என்று வேண்டுகிறார். அது இன்றைய கட்டிடங்களுக்கும் ஓரளவு பொருந்தும்போல; ‘இன்ன வகை’ என்று புரிந்து வாடிக்கையாளருக்கு ஏற்ற வகையில் கட்டிடங்களை ஒப்பந்தக்காரர்கள் அமைக்கிறார்கள்.

Leave a Reply