shadow

முன்னணி டெலிகாம் நிறுவனங்களுக்கு டிராய் போட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள்

இந்தியாவில் டெலிகாம் சேவையை பயன்படுத்தும் பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் போதுமான பேலன்ஸ் வைத்திருக்கவில்லை என்றாலும் அவர்களது இணைப்பினை துண்டிக்கக்கூடாது என மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக பல்வேறு டெலிகாம் நிறுவனங்களும் போதிய பேலன்ஸ் வைத்திருக்காத வாடிக்கையாளர்களின் இன்கமிங் அழைப்புகள் துண்டிக்கப்படும் என குறுந்தகவல் அனுப்பி வந்தன. இதைத் தொடர்ந்து மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வாடிக்கையாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அதிகமாக அனுப்பப்பட்டன.

குற்றச்சாட்டுகளில், பல வாடிக்கையாளர்கள் தாங்கள் போதுமான பேலென்ஸ் வைத்திருந்தாலும், டெலிகாம் நிறுவனங்கள் அதிகளவு குறுந்தகவல்களை அனுப்பி ரீசார்ஜ் செய்யக் கோருவதாக தெரிவித்திருந்தனர். இவற்றுக்கு பதில் அளிக்கும் வகையில் டிராய் புதிய உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

அதன்படி டெலிகாம் நிறுவனங்கள் போதுமான பேலென்ஸ் வைத்திருக்காத வாடிக்கையாளர்களின் இன்கமிங் அழைப்புகளை துண்டிக்கக்கூடாது என தெரிவித்துள்ளது.

இதேபோன்று வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் வைத்திருக்கும் சரியான பேலென்ஸ் தொகை, அதன் சரியான வேலிடிட்டி தேதி உள்ளிட்டவற்றை தெளிவாக அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் இதனுடன் குறுந்தபட்ச ரீசார்ஜ் தொகையை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என டிராய் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற அனைத்து விவரங்களும் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலம் 72 மணி நேரத்திற்குள் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகையை தங்களது பிரீபெயிட் அக்கவுன்ட்டில் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் இணைப்பை துண்டிக்கக்கூடாது என்றும் டிராய் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply