shadow

whatsapp_2215218f
கடந்த மாதம் 25-ம் தேதி தனது பிரைவசி பாலிசியை 4 வருடங்களில் முதன்முதலாக மாற்றியது வாட்ஸ்அப். “உங்களுக்கு அளிக்கும் சேவைகளை மேம்படுத்துவதற்காக, வாட்ஸ்அப் நம்பர் உள்ளிட்ட தகவல்களை ஃபேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளப்போகிறோம்” என அறிவித்திருந்தது. இதனை விரும்பாதவர்கள் வாட்ஸ்அப் சேவையை இன்னும் 30 நாட்களுக்குப் பிறகு பயன்படுத்த முடியாது என செக் வைத்திருந்தது. அந்த 30 நாட்கள் கெடு முடிந்து 3 நாட்களாகிவிட்டன. ஆனால் இப்போதும் எந்தவித சலனமும் இன்றி வாட்ஸ்அப் பயன்படுத்துகிறீர்களா? அந்த பிரைவசி பாலிசி என்ன ஆனது?

வாட்ஸ்அப் – ஃபேஸ்புக் கூட்டணி:

கிட்டத்தட்ட நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் என்னும் ஆப் உலகம் முழுதும் பெரும் வரவேற்பை பெற, அதனை 19 பில்லியன்கள் கொடுத்து வாங்கியது ஃபேஸ்புக் நிறுவனம். பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப்பை கையகப்படுத்திய உடனேயே அதன் நம்பகத்தன்மையின் மீதான சந்தேகம் மேலோங்க தொடங்கியது. ஆனாலும் உடனே பெரிதாக எந்தவித மாறுதல்களும் ஏற்படவில்லை.

மாறிய பிரைவசி பாலிசி:

வாட்ஸ்அப் செயலியின் மாற்றியமைக்கப்பட்ட பிரைவசி பாலிசியை கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி வெளியிட்டது அந்நிறுவனம். அதன்படி வாட்ஸ்அப் பயன்படுத்துபவரின் கைபேசி எண் மற்றும் கடைசியாக செயலியை பயன்படுத்திய நேரம் உள்ளிட்ட தகவல்களை தனது குழும நிறுவனங்களான பேஸ்புக், அட்லஸ், லைவ்ரைல், இன்ஸ்டாகிராம், அக்குலஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளும். இந்த புதிய திருத்தியமைக்கப்பட்ட பிரைவசி பாலிசியை ஏற்க விரும்பாத வாடிக்கையாளர்கள் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் செப்டம்பர் 25ம் தேதி வரை 30 நாட்கள் தத்தமது கைப்பேசிகளில் நிறுவப்பட்டுள்ள வாட்ஸ்அப் செயலியில் சென்று விருப்பத்தை தெரிவிக்கும் ஆப்ஷன் இருந்தது.

இதனை செப்டம்பர் 25-ம் தேதி முதல் நீக்கிவிட்டது வாட்ஸ்அப். அதன்படி செப்டம்பர் 25ம் தேதிக்கு பிறகு அந்த விருப்பத்தேர்வு நீக்கப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் இனி இந்த வாட்ஸ்அப் – ஃபேஸ்புக் தகவல் பரிமாற்றத்திற்கு ஒப்புக்கொண்டால், வாட்ஸ்அப்பை பயன்படுத்தலாம். இல்லையெனில் பயன்படுத்த வேண்டாம். இந்த அறிவுறுத்தலை புதிதாக ஒருவர் செயலியை இன்ஸ்டால் செய்யும் போதே, கறாராக சொல்லிவிடுகிறது வாட்ஸ்அப்.

இதனால் பேஸ்புக்குக்கு என்ன பயன்?

வாட்ஸ்அப் பயனாளர்களிடம் இருந்து பெறப்படும் இந்த தகவல்கள் மூலம் ஃபேஸ்புக் உள்ளிட்ட அதன் குழும நிறுவனங்களின் சேவையை பயன்படுத்தும் போது சரியான பரிந்துரைகள், விளம்பரங்கள் போன்றவற்றை அளிக்கவும், ஸ்பேம் எனப்படும் தேவையற்ற தகவல்களை குறைக்கவும் பயன்படும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப்புக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமைக் கொள்கையை எதிர்த்து லண்டனில் வாழும் கர்மண்யா சிங் சரீன் மற்றும் ஷ்ரேயா சேதி என்னும் இந்திய மாணவர்கள் தனது தாயார் உதவியுடன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கைத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் செப்டம்பர் 25-ம் தேதிக்கு முன்பு பயனாளர்கள் உருவாக்கிய, பகிர்ந்த தகவல்களை எவ்வகையிலும் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டனர். அப்போது பதிலளித்த வாட்ஸ்அப் தரப்பு வழக்கறிஞர், நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்றுக்கொள்வதாகவும் , மேலும் இதன் பிறகு செயலியை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் விரும்பாவிட்டால் அவர்கள் தாராளமாக தங்கள் கணக்கை நீக்கிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர். அதாவது செப்டம்பர் 25-க்கு முன்பான இந்தியாவின் வாட்ஸ்அப் பயனாளர்களின் தகவல்களை ஃபேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது.

வாட்ஸ்அப்புக்கு குட்டு வைத்த ஜெர்மனி:

வாட்ஸ்அப்பின் புதிய திருத்தியமைக்கப்பட்ட தனியுரிமைக்கொள்கைக்கு இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில் ஜெர்மனியின் ஹம்பேர்க் நகர தகவல் பாதுகாப்பு ஆணையம், வாட்ஸ்அப் பயனாளர்களிடம் இருந்து தகவல்களை பெறுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுவரை 35 மில்லியன் ஜெர்மானிய வாட்ஸ்அப் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை அழிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா என்ன செய்ய வேண்டும்?

வாட்ஸ்அப் மட்டுமல்ல. ஃபேஸ்புக், மெசஞ்சர், அலோ, ட்விட்டர் போன்ற எல்லா முன்னணி சேவைகளின் பிரைவசி பாலிசியையும் இந்தியாவில் முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய குடிமக்களின் டேட்டா என்பது தனிப்பட்ட விஷயம் மட்டுமல்ல. தேசத்தின் பாதுகாப்புடன் தொடர்புடைய விஷயமும் கூட!

Leave a Reply