shadow

மார்பகப் புற்றுநோய்: நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்!

breast-cancer-mainபெண் உலகில் அதி தீவிரமான நோயாக உருவெடுத்து வருகிறது மார்பகப் புற்றுநோய். கடந்த பத்து ஆண்டுகளாகப் பெண்களைத் தாக்கிய கர்ப்பப்பை வாய் புற்றுநோயைப் பின்னுக்குத் தள்ளி, முதலிடத்தைப் பிடித்துள்ளது.

புற்று நோயின் தீவிரத்தைப் பறைசாற்றி, அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தவே ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தற்காப்பு முறைகள் குறித்து பகிர்ந்துகொள்கிறார் திருச்சியைச் சேர்ந்த புற்றுநோய் நிபுணர் கோவிந்தராஜ்.

என்ன காரணம்?

புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் இன்னும் முழுமையாகக் கண்டறியப்படவில்லை. ஆனால் அதற்கான சூழ்நிலைகளை அதிகரிக்கும் காரணிகளை மருத்துவ உலகம் அடையாளம் காட்டியிருக்கிறது.

1. வாழ்க்கை முறை மாற்றம்

2. மேற்கத்திய உணவுப் பழக்கங்கள்

3. அதிகக் கொழுப்புள்ள உணவுகள்

யாரைத் தாக்கலாம்?

1. உடல் பருமனாக இருப்ப வர்களுக்கு வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்.

2. நாற்பது வயதைக் கடக்கும் பெண்களைத் தாக்கலாம்.

3. உறவினர்களில் யாருக்கேனும் புற்று நோய் இருந்தால் வரலாம். குறிப்பாகத் தாய்க்கு இருந்தால் மகளுக்கு வருவதற்கான சாத்தியம் உண்டு.

4. குழந்தைப் பேறு இல்லாதவர்கள்.

அறிகுறிகள் என்னென்ன?

1. மார்பகத்தில் கட்டி.

2. மார்பகக் காம்புகளில் திரவம் வெளியேறுவது

3. மார்பகங்களில் வீக்கம், சிவந்து காணப்படுதல்.

5. மார்பகத்தில் குழி விழுதல்.

6. மார்பகத்தில் வலி தோன்றுதல்.

7. மார்பகக் காம்புகள் உள் அமுங்கிப்போகுதல்.

8. மார்பு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நெறி கட்டுதல்.

9. அசவுகரியமான வலி.

இதுபோன்ற அறிகுறிகள் இருக்கும்போது, கண்டிப்பாக மார்பகப் புற்றுநோய்தான் என்று பயம் கொள்ளாமல் முதலில் பரிசோதனை செய்ய வேண்டும். எல்லாக் கட்டிகளும் புற்றுநோய் கட்டிகள் அல்ல என்பதை உணர வேண்டும்.

எப்படிக் கண்டறிவது?

1. முப்பது வயதுவரை உள்ள பெண்கள் மாதத்துக்கு ஒரு முறையாவது மார்பக சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

2. மார்பில் கட்டி, வீக்கம், தடிப்பு ஆகியவை இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும்.

3. முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் மாதவிடாய் முடிந்த ஐந்தாவது நாள் சுயபரிசோதனை மேற்கொண்டு, அதில் கட்டி போன்று தென்பட்டால் டாக்டரிடம் செல்ல வேண்டும்.

4. நாற்பது வயதுக்கு மேல் உள்ள பெண்கள் வருடத்துக்கு ஒரு முறையாவது மாமோகிராம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

தேவையற்ற பயத்தை நீக்குங்கள்

1. ஆரம்ப நிலையில் கண்டறியப்படும் மார்பகப் புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்த முடியும்.

2. எல்லோருக்கும் மார்பகத்தை அகற்ற வேண்டிய அவசியமில்லை.

3. கீமோதெரபி மேற்கொள்ளும்போது முடி உதிர்ந்தால், முழுமையான சிகிச்சைக்குப் பின் முடி வளர்ந்து விடும்.

4. கீமோதெரபி எடுத்துக்கொண்டால் கறுப்பாகி விடமாட்டார்கள். சிலருக்குக் கதிர்வீச்சு காரணமாகத் தோல் நிறத்தில் மாற்றம் ஏற்படலாம்.

சிகிச்சை முறைகள்

1. மார்பகப் புற்றுநோய்க்கு மும்முனை சிகிச்சை வழங்கப்படுகிறது.

2. அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, கீமோதெரபி ஆகிய இந்த மும்முனை சிகிச்சைகள் புற்றுநோயின் நிலைகளைக் கணக்கிட்டே வழங்கப்படுகின்றன.

3. சிகிச்சைகள் முடிந்தபின், 3 முதல் 6 மாதம்வரை தொடர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

4. மருத்துவர் குறிப்பிடும் நாள்வரை மருந்து, மாத்திரைகளை உட்கொள்ள வேண்டியது கட்டாயம்.

என்னென்ன உணவுகள்?

காய்கள், கீரைகள் சாப்பிடுவது நல்லது. ஆன்ட்டி- ஆக்ஸிடென்ஸ் நிறைந்த உணவு உடலுக்கு மிகவும் ஏற்றது. குறிப்பாக மாதுளம் பழம் நல்லது.

என்ன செய்யலாம்?

1. உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ளுங்கள்.

2. உடற்பயிற்சி, நடைப்பயிற்சி கட்டாயமாக மேற்கொள்ளுங்கள்.

3. ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுங்கள்.

4. அதிக அளவு காய், கீரை, பழம் நல்லது.

5. சரியான நேரத்தில் உணவு உட்கொள்வது மிக அவசியம்.

தன்னம்பிக்கையுடன் உடல்நலத்தைப் பாதுகாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு, மார்பகப் புற்றுநோயை எதிர்த்துப் போராட உறுதியேற்க வேண்டிய பிங்க் மாதம் இது!

Leave a Reply