shadow

மாங்கல்ய அருளும் குரு தட்சிணாமூர்த்தி

தென்முக தெய்வமாம் ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஞானத்தின் வடிவம். சனகாதி முனிவர்கள் சூழ்ந்திருக்க, சின்முத்திரை காட்டியருளும் இந்த ஆலமர் செல்வனை வழிபட்டால், அறியாமை நீங்கும்; கல்வி, கலைஞானம் ஸித்திக்கும்.

திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் என்னும் தலத்தில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் விசேஷக் கோலத்தில் அருள்கிறார் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி. 11 ராசிச் சின்னங்கள் (கும்பம் தவிர) திகழும் சிறு குன்று போன்ற அமைப்பின் மீது, நந்தி முழந்தாளிட்ட நிலையில் இருக்க, நந்தியின் மேல் கும்ப ராசியைப் பீடமாகக்கொண்டு புன்னகை தவழ அமர்ந்திருக்கிறார், ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி.

அவருக்கு வலப்புறம் அகத்தியரும், இடப்புறம் கோரக்க சித்தரும், திருமுடிக்கு மேலாக விநாயகப் பெருமானும் காட்சி தருவது விசேஷ அம்சம்!

வழிபாட்டுச் சிறப்பு!

விசேஷ திருக்கோலத்தில் அருளும் இந்த ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தியைச் சுமங்கலிப் பெண்கள் வழிபடுவது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

காரணம், ஐந்து தேவ சுமங்கலிப் பெண்கள் இங்குள்ள தட்சிணாமூர்த்தியுடன் ஐக்கியமானதாக அகத்தியர் நாடியில் சொல்லப்பட்டுள்ளதாம்.

சுமங்கலிப் பெண்கள், இந்தக் கோயிலை ஐந்து முறை வலம் வந்து ஐந்து நெய்தீபம் ஏற்றி, தட்சிணாமூர்த்தியை வழிபட்டால், தீர்க்க சுமங்கலியாகத் திகழ்வார்கள். தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம்,
அர்ச்சனை செய்து வழிபடுபவர்களுக்கு அனைத்துவிதமான கிரக தோஷங்களும் விலகி, சந்தோஷம் நிலைக்கும் என்பது ஐதீகம்.

எப்படிச் செல்வது?

திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில், திருவாரூரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது பூந்தோட்டம். நெடுஞ்சாலையின் அருகிலேயே அமைந்திருக்கிறது, அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம்.

Leave a Reply