shadow

மறைத்து வைக்கப்படும் மின்கம்பிகளால் ஏற்படும் சாதக, பாதகங்கள்

வீட்டைக் கட்டிவிட்டு அது பற்றிப் பிறகு கவலைப்படாமல் சிலர் இருந்துவிடுகிறார்கள். ஆனால், பராமரிப்பு என்ற விஷயம் ஒன்று இருக்கிறது. பராமரிப்புக் கோணத்தில் வீடு கட்டும்போதே சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக வெளியில் தென்படாத, மறைந்துள்ள மின்கம்பிகள் தொடர்பாக.

வீட்டில் வெளிப்புறமாக மின்கம்பிகள் செல்லும்போது அது கண்ணுக்கு உறுத்தல் தரும். எனவே, அவற்றை மறைவாகப் பதிக்கும்முறை பலராலும் பின்பற்றப்படுகிறது. இதை Concealed Conduit Electrical Wiring System என்பார்கள். சுருக்கமாக Concealed Wiring என்பதுண்டு.

இந்த வகை வயரிங்கில் மற்றொரு நன்மையும் உண்டு. எலிகள் கடித்துக் குதறுவதிலிருந்து மின்கம்பிகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த மின்கம்பிகள் பொதுவாக PVC பைப்புக்குள் இடம் பெற்று, சுவர்களில் உரிய துளையிடப்பட்டு அந்த பைப்புகள் அங்கே பொருத்தப்படுகின்றன.

ஈரப்பதம், புகை போன்றவற்றிலிருந்தும் இப்படிப் பொருத்தப்படும் மின்கம்பிகள் பாதுகாப்பு பெறுகின்றன. ஷாக்கடிக்கும் பிரச்சினை இல்லை. பழைய மின்கம்பிகளை எளிதில் மாற்றியமைக்கலாம். பாதுகாப்புக் கோணத்திலும் இது சிறந்த முறைதான்.

எனினும், இதில் சில பாதகங்களும் உண்டு. இதற்கு அதிக செலவாகும். மின்கம்பிகளில் பழுது ஏற்படும்போது அது எந்த இடத்தில் என்று கண்டறிவது சற்றுச் சிரமம்.

மேலும், சில மின்கம்பிகளை இணைக்க வேண்டுமென்றால் சுவரில் குறிப்பிட்ட பகுதியை உடைக்க வேண்டியிருக்கும். பிறகு பார்வைக்கு அந்த இடம் உறுத்தலாக இருக்கும். ‘சுவிட்சு’களை வேறு இடத்துக்கு மாற்றுவது என்பதெல்லாம் கொஞ்சம் கஷ்டமான விஷயம்.

மறைக்கப்படும் மின்கம்பிகள் எனில் நல்ல தரமான மின்கம்பிகளைப் பயன்படுத்துவது முக்கியம். அப்படிப் பயன்படுத்தினால் சுமார் இருபது வருடங்களுக்கு அதுபற்றிக் கவலை இல்லாமல் இருக்கலாம். இவற்றில் பிரச்சினை ஏற்படும்போது ஜங்ஷன் பாக்ஸை எலக்ட்ரீஷியன் சோதிப்பார். மின்கம்பி வளையுமிடத்தில் இது போன்ற ஜங்ஷன் பாக்ஸ்களைப் பொருத்துவது நல்லது. அதிக அளவில் ஜங்ஷன் பாக்ஸ் இருந்தால் மிகவும் நல்லது.

தரமற்ற பொருள்களைப் பயன்படுத்த வேண்டாம். பின்னர் மின் விபத்துகள் ஏற்படக்கூடும். இவை செல்லும் வழியில் எந்த இடத்திலும் நீர்க்கசிவு இல்லாததை உறுதி செய்து கொள்ளுங்கள். தண்ணீரும் ஈரப்பதமும் மின் இணைப்புக்கு எதிரிகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சுவர்களின் மூலமாக மட்டுமல்ல; தரைப் பகுதிக்குக் கீழ் வழியாகக்கூட இந்த முறையில் மின்கம்பிகள் எடுத்துச் செல்லப்படலாம். இது பாதுகாப்பில்லாத முறை என்ற அச்சம் கணிசமானவர்களுக்கு இருக்கிறது (மின்சாரத்தை மிதித்துக்கொண்டு செல்வது அபாயம்!). ஆனால், தரமான PVC பைப்புகளைப் பயன்படுத்தும்போது இது குறித்துக் கவலைப்பட வேண்டாம் எனக் கட்டிடக்கலை வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

ஐ.எஸ். தர நிர்ணயப் பரிந்துரைப்படி மின்கம்பிகளின் எண்ணிக்கையும் அது செல்லும் PVC பைப்பின் அகலமும் போதுமான அளவுக்கு இருப்பதைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள். மின்கம்பிகளிலிருந்து கொஞ்சம் வெப்பம் வெளியேறும். அதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பொய்க் கூரைக்கு (False ceiling) மேலாக இந்த வகையில் மின்கம்பிகள் எடுத்துச் செல்லப்பட்டால் மேலும் கவனம்தேவை. இந்தக் கூரை தாங்கும்படி PVC பைப்புகள் பொருத்தப்படக் கூடாது.

Leave a Reply