shadow

மரப்பலகைக்கு மாற்றாகதெர்மோகோல்

அலுவலகங்களிலும், வீடுகளிலும் கான்கிரீட் கூரை வழியாக வீட்டுக்குள் இறங்கும் வெப்பத்தைக் குறைப்பதற்காகவும், அழகாக்கவும் பரவலாக தெர்மகோல் அடைப்பு பயன்படுத்தப்படுகிறது. ஓடுக் கூரை பரவலான பயன்பாட்டில் இருந்த காலகட்டத்தில் மரப் பலகையைத்தான் இதற்காகப் பயன்படுத்தினர். இப்போது மரப் பலகை அதிகமாக இருப்பதால் அதிக அளவில் தெர்மகோலைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

இந்தப் பலகை அடைப்பு முறையில் புதிதாக வந்துள்ள பொருள்தான் ட்ரோல்டுடெக்ட்(Troldtekt). டென்மார்க்கைச் சேர்ந்த நிறுவனம் இந்த வகைப் பலகையை உருவாக்கியுள்ளது. மரப் பலகைக்கு மாற்றாக அதே வடிவமைப்பில் இந்தப் புதிய பலகை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இயற்கையான மரப் பலகையுடன் சிமேண்டை இணைத்துப் புதிய முறையில் இதை உருவாக்கியுள்ளார்கள். மரப் பலகையுடன் சிமெண்டும் சேர்த்து உருவாக்கப்படுவதால் இந்தக் கட்டுமானப் பொருள் அதிக ஆயுள்கொண்டதாகவும் எளிதில் மக்கக்கூடியதாகவும் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

இந்த ட்ரோல்டுடெக்ட் பலகை சீரான மேல் பரப்புடன் வீட்டுக்கு அழகு கூட்டும். ஒலியை உட்கிரகிக்கக்கூடிய தன்மையும் கொண்டது. அதனால் வீட்டின் உள்ளே ஒலியை எதிரொலிக்காது. மரப் பலகை இருப்பதால் இது ஈரத்தையும் உறிஞ்சக்கூடியதும் வெளிவிடக்கூடியதுமாக உள்ளது. இதன் தீப்பற்றக்கூடிய தன்மை குறைவு. சிமெண்ட் இந்தப் பலகைக்கு உறுதியைத் தருவதுடன் மரப் பலகை நெகிழ்வுத் தன்மையையும் தருகிறது. இதன் ஆயுட்காலம் 75 ஆண்டுகள். படங்கள், அலமாரிகளுக்காக ஆணி அடிக்கும்போது மரப் பலகை உள்ளதால் எளிதாக இருக்கும். அதேசமயம் உறுதியானதாகவும் இருக்கும்.

சாம்பல் நிறப் பொதுவான சிமெண்ட் அல்லது வெள்ளை சிமெண்ட் ஆகிய இரண்டில் ஒன்றைப் பகுதிப் பொருளாகக் கொண்டு ட்ரோல்டுடெக்ட் தயாரிக்கப்படுகிறது. வெள்ளை, சாம்பல், சிவப்பு, கறுப்பு உள்பட 7 வண்ணங்களில் இப்போது ட்ரோல்டுடெக்ட் பலகைகள் கிடைக்கின்றன.போலந்து, இங்கிலாந்து, அயர்லாந்து, தென்னாப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், துருக்கி, இஸ்ரேல், ஹாங்காங், நார்வே, ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் இந்தப் புதிய பலகை விற்பனைக்கு வந்துள்ளது. விரைவில் இந்தியாவிலும் இந்த நிறுவனம் தன் விற்பனையைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply