shadow

மக்களுக்கு துரோகம் செய்தது தி.மு.க. ஆட்சிதான்: ஜெயகுமார்

ஸ்டெர்லைட் விஷத்தில் மக்களுக்கு துரோகம் செய்தது திமுக ஆட்சிதான் என்று நேற்று சட்டமன்றத்தில் அமைச்சர் ஜெயகுமார் பேசினார்.

மிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்தவுடன் மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் எழுந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நேற்றைய தினம் முதல்-அமைச்சர் ஸ்டெர்லைட் ஆலை குறித்து விரிவாக பேசினார். மக்கள் விரும்பாத எதையும் இந்த அரசு ஏற்காது. ஆலையை தி.மு.க. திறப்பதற்கும், அதை நடத்துவதற்கும் அனுமதி அளித்ததை புள்ளி விவரங்களோடு முதல்-அமைச்சர் இங்கே பட்டியலிட்டார். மத்திய சுற்றுச்சூழல் மந்திரியாக இருந்த ராஜா, தமிழகத்தில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த மைதீன்கான் ஆகியோர் ஸ்டெர்லைட் ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதியளித்தனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது, மக்களுக்கு துரோகம் செய்தது தி.மு.க. ஆட்சிதான் என்று முதல்-அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதில் இருந்து யார் தவறு செய்தார்கள் என்று தெரியமுடிகிறது. அதேபோல், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு 320 ஏக்கர் நிலம் கொடுத்ததும், தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது தான். அதை ரத்து செய்தது முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா.

எங்கே தமிழக மக்கள் நம்மை புறக்கணித்து விடுவார்களோ என்ற அச்சத்தில், இன்று சட்டசபை ஜனநாயக மாண்பை பற்றி பேசுகிறார்கள். 22 ஆண்டுகளுக்கு பிறகு, பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் பெற்றதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. எப்படியாவது இந்த அரசை கவிழ்த்துவிட வேண்டும் என்று சதி செய்கிறார்கள். அந்த சதி முறியடிக்கப்பட்டு இந்த ஆட்சி வெற்றி நடைபோடுகிறது.

முதல்-அமைச்சர் தெளிவான விளக்கம் கொடுத்த பிறகும், சட்டசபையை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இது சாத்தான் வேதம் ஓதுவது போன்று உள்ளது. 2006-ம் ஆண்டு அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, எங்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியே போட்டனர். அப்போது ஜெயலலிதா மட்டும் தன்னந்தனியாக சட்டசபைக்கு வந்தார். சிங்கம் எப்போதும் தனியாகத்தான் வரும். 40 நிமிடங்கள் பேசினார். அப்போது, 37 முறை குறுக்கீடு இருந்தது.

தற்போது சபாநாயகர் ஆசனத்தில் உட்கார்ந்து இருக்கும் சபாநாயகர் ப.தனபால், அனைவருக்கும் சம வாய்ப்பை வழங்கி ஜனநாயக மாண்பை கட்டிக்காத்து வருகிறார். அன்றைய சபாநாயகர் ஆவுடையப்பன் ஜனநாயக மரபுகளை புறக்கணித்து எங்களை ஒருமையில் பேசி உட்காரச்சொன்னார்.

கடந்த ஆண்டு இந்த அரசின் மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டுவந்தபோதுகூட, தி.மு.க. உறுப்பினர்கள் மரபுகளை மீறி நடந்துகொண்டார்கள். நான்கூட பேரவை தலைவராக இருக்கும்போது கோபம் வரும். ஆனால், தற்போதைய சபாநாயகர் அமைதியின் சொரூபமாக விளங்குகிறார்.

ஜனநாயகத்திற்கு குழி தோண்டப்பட்டது தி.மு.க. ஆட்சியில் தான். இன்று அனைவருக்கும் சட்டசபையில் பேச வாய்ப்பு வழங்கப்படுகிறது. தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவதுபோல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. தமிழக மக்களுக்கு இதை உணர்த்தத்தான் இந்த கருத்தை பதிவு செய்கிறேன்.

இவ்வாறு ஜெயகுமார் பேசினார்

DMK speaks about assembly demoractic natures says Jayakumar

Leave a Reply