shadow

பைபிள் கதைகள் 10: துரத்தி வந்த தாய் மாமன்
bible
ஆபிரகாமின் பேரனும் ஈசாக்கின் மகன்களில் ஒருவரும், ஏசாவின் சகோதரருமாகிய யாக்கோபு தனது தந்தையாகிய ஈசாக்கிடமிருந்து தனது சகோதரன் ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைத் தந்திரமாகப் பெற்றுக்கொண்டதால், ஏசாவின் கோபத்துக்கு ஆளானார்.

“யாக்கோபுவை ஒருநாள் கொல்வேன்” என்று ஏசா கூறியதைக் கண்டு அஞ்சிய யாக்கோபுவின் தாயாகிய ரேபேக்காள் தனது இரண்டு மகன்களையும் இழக்க விரும்பவில்லை. இதனால் யாக்கோபுவை ஏசாவிடமிருந்து அப்புறப்படுத்த விரும்பினார். தனது சகோதரன் லாபானிடம் யாக்கோபுவை அனுப்பி, அவரது மகளை மணந்துகொண்டு அவரோடு தங்கிவிடும்படி பணித்தாள். தாயின் சொல்லைக் கேட்டுத் தந்தையிடம் ஆசிபெற்றுக் கிளம்பிய யாக்கோபுவை கடவுள் தொடர்ந்து ஆசீர்வதித்தார். ஆபிரகாம், ஈசாக்கு ஆகியோரைத் தொடர்ந்து யாக்கோபுவிடமுடம் கடவுள் பேசினார்.

பதினோரு மகன்கள்

தனது தாய்மாமன் லாபானுக்காக முதலில் 14 ஆண்டுகள் மேய்ப்பனாக வேலைசெய்து அவரது மகள்களான லேயாள், ராகேல் ஆகிய இருவரையும் மணந்துகொண்டார். ரூபன், சிமியோன், லேவி, யூதா, தாண், நப்தலி, காத், ஆசேர் இசக்கார், செபுலோன் ஆகிய பத்து மகன்கள் பிறந்தனர்.

தீனாள் என்ற மகளையும் லேயேள் பெற்றெடுத்தாள். குழந்தை இல்லாமல் வருந்திவந்த ராகேலின் கர்ப்பத்தையும் கடவுள் ஆசீர்வதித்தார். தனது கர்ப்பத்தின் மூலம் முதல் மகனைப் பெற்று அவனுக்கு யோசேப்பு என்று பெயரிட்டாள். இப்படியாக யாக்கோபு தனது மாமன் லாபானிடம் வேலை செய்துவந்த காலங்களில் அவருக்கு பதினோரு மகன்கள் பிறந்தனர்.

துரத்தி வந்த மாமன்

காலப்போக்கில் தாய்மாமனின் அன்பு தன் மீது குறைந்து வருவதையும் உணர்ந்த யாக்கோபு, லாபானை விட்டுப் பிரிந்து தனது முன்னோர்களின் தேசமாகிய கானானுக்குத் திரும்பிச் செல்ல தீர்மானித்தார். என்றாலும் தனது சகோதரன் ஏசாவின் கோபத்தை எண்ணி 20 ஆண்டுகளுக்குப் பிறகும் கலங்கினார். இறுதியில் தனது கடவுளாகிய யகோவா தேவன் தன்னை வழிநடத்துவார் என்ற துணிவுமிக்க விசுவாசத்துடன் தனது நாடோடி வாழ்வை முடித்துக்கொள்ள விரும்பிக் கிளம்பினார்.

எனவே, தன் பெரிய குடும்பத்தையும் மந்தைகளையும் பணியாட்களையும் கூட்டிக்கொண்டு தன் பயணத்தைத் தொடங்கினார். லாபானிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினால் அவர் தன்னை விட மறுக்கலாம் என்பதைக் கடவுள் மூலம் அறிந்திருந்த யாக்கோபு சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பினார். நீண்ட பயணத்துக்குப்பிறகு கீலேயாத் என்ற மலை நகரில் யாக்கோபு முகாமிட்டிருந்தார். கோபத்துடன் யாக்கோபுவைத் துரத்திக்கொண்டு வந்த லாபான் அந்த மலைநகரில் அவரைப் பிடித்து தடுத்து நிறுத்தினார்.

லாபானுடன் ஒப்பந்தம்

கடுங்கோபத்துடன் யாக்கோபுவிடம், “என்னிடம் சொல்லாமல் ஏன் ஓடிப்போகிறாய்? ஏன் என் மகள்களைப் போரில் கைப்பற்றிய பெண்களைப் போன்று கவர்ந்துகொண்டு போகிறாய்? என்னிடம் நீ சொல்லியிருந்தால் உனக்கு ஒரு விருந்து கொடுத்திருப்பேனே. நான் என் மகள்களையும் பேரப்பிள்ளைகளையும் முத்தமிட்டு வழியனுப்பும் வாய்ப்பையும் நீ கொடுக்கவில்லையே.. உன்னைத் துன்புறுத்தும் அளவுக்கு எனக்கு வல்லமை இருக்கிறது” என்று லாபான் கொந்தளித்தார்.

அதற்குப் பதிலளித்த யாக்கோபு, “நான் செய்த தவறு என்ன? எந்தச் சட்டத்தை உடைத்துவிட்டேன்? எதற்கு என்னைப் பின்தொடர்ந்து வந்து தடுத்து நிறுத்த வேண்டும்? நான் எதுவும் சொல்லாமல் வந்துவிட்டேன். ஏனென்றால் எனக்குப் பயமாக இருந்தது. ஒருவேளை நீங்கள் உங்கள் பெண்களை என்னிடமிருந்து பிரித்துவிடலாம் என்று நினைத்தேன். நான் உமக்காக 20 ஆண்டுகள் உழைத்திருக்கிறேன்.

அப்போது எந்த ஆட்டுக்குட்டியும் பிறக்கும்போது இறக்கவில்லை. எந்தக் கடாவையும் உமது மந்தையிலிருந்து எடுத்து நான் உண்டதில்லை. காட்டு விலங்குகளால் ஆடுகள் அடிபட்டு இறந்திருக்குமானால் அதற்குரிய விலையை நானே தந்திருக்கிறேன். இறந்த ஆடுகளைக் கொண்டுவந்து உமக்கு முன் காட்டி இதற்குக் காரணம் நானில்லை என்று சொன்னதில்லை.

ஆனால் நானோ பகலிலும் இரவிலும் திருடப்பட்டேன். பகல் பொழுது என் பலத்தை எடுத்துக்கொண்டது. இரவுக் குளிர் என் கண்களிலிருந்து உறக்கத்தைத் திருடிக்கொண்டது. ஒரு அடிமையைப் போன்று 20 ஆண்டுகளாக உமக்காக உழைத்திருக்கிறேன்.

இந்நாட்களில் எனது சம்பளத்தைப் பத்து முறை மாற்றி இருக்கிறீர். என் கடவுளாகிய யகோவா மட்டும் என்னோடு இல்லாமல் போயிருந்தால் நீர் என்னை ஒன்றும் இல்லாதவனாக ஆக்கி அனுப்பி இருப்பீர்” என்றார்.

யாக்கோபுவைக் கடவுள் தன் உள்ளங்கையில் வைத்துக் காத்து வருவதைக் கண்ட லாபான், இனி அவரைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதை உணர்ந்துகொண்டார். எனவே அவருடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டார்.

“நாம் இங்கே ஒரு கல்லை நட்டு, அதை நமது ஒப்பந்தத்திற்கு நினைவுச் சின்னமாகக் கருதுவோம்”என்றார் லாபான். அதை யாக்கோபும் ஒப்புக்கொண்டு ஒரு பெரிய கல்லை ஒப்பந்தத்துக்கு அடையாளமாக நட்டு வைத்தார். பிறகு லாபான், “ நாம் பிரிந்துவிட்டாலும் கடவுள் நம்மைக் கண்காணிக்கட்டும். இந்தக் கல்லைத் தாண்டி வந்து நான் உன்னோடு போரிட மாட்டேன்.

நீயும் இதைக் கடந்து வந்து என்னோடு போரிடக் கூடாது” என்றார். யாக்கோபு கடவுளின் பெயரால் வாக்குறுதி அளித்தார். பிறகு லாபான் எழுந்து தன் மகள்களையும் பேரப் பிள்ளைகளையும் முத்தமிட்டு ஆசீர்வதித்தார். பின் தன் ஊருக்குத் திரும்பிப் போனார். யாக்கோபு நிம்மதியடைந்து பிறகு தன் சகோதரன் ஏசாவிடன் சமாதானம் செய்துகொள்ள கானான் நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

Leave a Reply