shadow

பெண் தடம்: குருவை வென்ற முதல் பெண்

18இந்தியாவில் துணிச்சலான பெண்களில் முதன்மையானவர்களாக மூன்று பேரைக் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் ஊர்வசி புட்டாலியா. அவர் குறிப்பிடும் முதல் பெண் கார்கி வாசக்னவி. நாம் அதிகம் கேள்விப்படாத இவர், இந்தியாவின் முதல் பெண் தத்துவ அறிஞர்.

அவர் வாழ்ந்த கி.மு. 7-ம் நூற்றாண்டில் பெண்கள் தத்துவவாதியாகத் திகழ்வது அபூர்வத்திலும் அபூர்வம். அப்படியே மாறினாலும்கூட, பண்டைக் காலத்தில் தத்துவத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆண் சிந்தனையாளர்களுக்குச் சவால்விடுத்திருக்க முடியுமா? ஆனால் கார்கி வாசக்னவி அதைச் சாதித்திருக்கிறார்.

கார்கியின் தந்தை வாசக்னு, ஒரு முனிவர். கார்கா வம்சத்தில் பிறந்ததால், கார்கி வாசக்னவி என்று பெயரிடப்பட்டார். அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. பிரகதாரண்யக உபநிடத்தில் அவரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

மிதிலையின் மன்னன் ஜனகர், தத்துவவாதிகளுக்கு இடையிலான பிரம்மயக்ஞம் என்ற தத்துவ மாநாட்டை ஒருங்கிணைத்தார். அக்கால வழக்கப்படி முனிவர்கள் அந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டனர். கார்கியும் அந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டதிலிருந்து அந்தக் காலத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட மதிப்பை உணரலாம். ஜனகரின் அரசவை நவரத்தினங்களில் ஒருவராகவும் அவர் மதிக்கப்பட்டார்.

அதற்கு முன்னர்வரை தத்துவ விவாதங்களில் பலரையும் வாயடைக்கச் செய்தவர் ஜனகரின் குருவாகக் கருதப்பட்ட யாக்ஞவல்கியர். அந்த மாநாட்டில் யக்ஞவல்கியரைத் தன் கேள்விக் கணைகளால் கார்கி துளைத்தெடுத்தார். ஆன்மாவுக்கான அடிப்படை தொடர்பாக பல்வேறு கேள்விகளை கார்கி கேட்டார். ஒரு நிலையில், அனைத்துக்கும் தொடக்கமான பிரம்மம் குறித்து கார்கி கேள்வி எழுப்பியபோது, கோபமடைந்த யாக்ஞவல்கியர், “இதற்கு மேல் கேள்வி கேட்காதே, உன் தலையே விழுந்துவிடும்” என்று கார்கியின் வாயை அடைத்துவிட்டார்.

யாக்ஞவல்கியரின் மனைவி மைத்ரேயியும் வேத காலத்தில் மதிக்கப்பட்ட பெண்தான் என்றாலும், யக்ஞவல்கியருக்குச் சவால் விடுத்தவர் கார்கிதான்.

வேதங்களில் சிறந்த இயற்கை தத்துவ ஞானியாக அவர் போற்றப் பட்டிருக்கிறார். பிறப்பின் தொடக்கம் பற்றி ‘கார்கி சம்ஹிதை’ என்ற நூலை அவர் எழுதியதாகவும், அவருக்கும் யாக்ஞவல்கியருக்கும் இடையே நடந்த யோகத்தைப் பற்றிய விவாதம் ‘யோகயஜ்னவல்கிய சம்ஹிதை’ என்ற பெயரிலும் பதிவாகியுள்ளது.

கார்கி வேதம் சார்ந்த மரபில் வந்தவர் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் வேதத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோமா, மறுக்கிறோமா என்பதைத் தாண்டி, தத்துவ ரீதியில் அன்றைக்குப் பெரிதாக மதிக்கப்பட்ட குருவை தன்னுடைய அறிவுத் திறத்தை நம்பி கேள்வி கேட்ட கார்கி என்ற பெண்ணின் துணிச்சலுக்கு நாம் முக்கியத்துவம் தந்தே ஆக வேண்டும்.

பெண்களின் அறிவுத்திறத்தையும், அந்த அறிவுத்திறனை மக்கள் அங்கீகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் கார்கி தொடங்கி பல பெண்கள் உலகுக்கு அறிவித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

Leave a Reply