shadow

பெண் அரசியல் 3: படத்துக்குக்கூட அனுமதியில்லை!

தமிழக அரசியலில் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் யார்? அந்த வரலாற்றுப் பெருமையைப் பெறுகிறார் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. அவர் எதிர்க்கட்சியின் முதல் பெண் துணைத்தலைவரும்கூட. தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், இருதார மண ஒழிப்புச் சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வந்த மகத்தான தலைவரும்கூட.

சட்டமன்றம் என்றாலே அனல் பறக்கும் விவாதங்களும் இருக்கும்தானே! தேவதாசி ஒழிப்புச் சட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றினார். இது தெய்வப் பணி, புனிதமானது என்பதால் தேவதாசி முறையை ஒழிக்கக் கூடாதென்றும் வலியுறுத்தினார். அதற்கு முத்துலட்சுமி அம்மையார் பளீரெனக் கேட்டார். “அத்தகைய தெய்வப் பணியை நீங்கள் விரும்பினால் உங்கள் உயர் பிரிவில் ஏற்றுக்கொள்ளுங்கள். பிற்படுத்தப்பட்ட எங்கள் பெண்கள் மீது மட்டும் ஏன் சுமத்துகிறீர்கள்?” இந்தக் கேள்விக்கு அவரால் என்ன பதில் கூறிவிட முடியும்?

சட்டமன்றத்தில் மட்டுமல்ல ஆணாதிக்கப் பழமைவாதக் கண்ணோட்டமுடைய சமூகத்தின் பல பிரிவினர் கடுமையாக இந்தச் சட்டத்தை எதிர்த்தார்கள். அவை அனைத்தையும் எதிர்கொண்டே இந்தச் சட்டம் முழுமையான முன்னேற்றத்தை அடைந்தது.

குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட குழந்தைகளைத் தேடிக் கண்டறிந்து அவர்களை வளர்ப்பதற்கான ‘அவ்வை இல்லம்’ என்ற தொட்டில் குழந்தைத் திட்டத்தை முதலில் தொடங்கியவரும் இவரே. இத்தனை சிறப்புகளைக் கொண்ட இவரின் உருவப்படம் தமிழக சட்டப்பேரவையின் அலங்கரிக்கப்பட்ட சுவர்களில் அனைத்துத் தலைவர்களின் படங்களுக்கு மத்தியிலோ அல்லது ஓர் ஓரத்திலோகூட இடம்பெறவில்லை என்பது கசப்பான உண்மை.

தமிழக சட்டப்பேரவைக்குள் நுழைபவர்களை முதலில் ஈர்ப்பவை அங்குள்ள படங்கள்தான். செவ்வக வடிவத்தில் அமைந்த அந்தப் பேரவையின் சுவர்களில் காந்தி, அம்பேத்கர், பெரியார், அண்ணா, காயிதேமில்லத், எம்.ஜி.ஆர். உள்ளிட்ட பல முன்னாள் தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அந்த வரிசையில் ஒரு பெண் தலைவர் படம்கூட இடம்பெறவில்லை.

2004-2005-களின் கூட்டத் தொடர்களில் டாக்டர் முத்துலட்சுமி அவர்களின் சிறப்புகளை நினைவுகூர்ந்து அவர் படம் சட்டமன்றத்தில் இடம்பெற வேண்டும் என்ற எனது கோரிக்கையையும் முன்வைத்தேன். அப்போது முதலமைச்சராக இருந்தவரும் ஒரு பெண் என்பதால் என் கோரிக்கை சுலபமாக நிறைவேறிவிடும் என்றும் காத்திருந்தேன். ஆனால் அரசுத் தரப்பில் பரிசீலிப்பதாகக்கூட தெரிவிக்கவில்லை. இது எனக்கு அதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது.

பிறகு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. திமுக ஆட்சியின்போது வெட்டுத் தீர்மானத்தின் வாயிலாகவும் இந்தக் கோரிக்கையை முன்வைத்தேன். அவர்களும் அதே மெளனத்தையே கடைபிடித்தார்கள். இத்தனைக்கும் நான் இடதுசாரி இயக்கத் தலைவரின் உருவப்படத்தை வைக்கச் சொல்லிக் கேட்கவில்லை.

பெண்கள் கூட்டங்களில் இது குறித்துப் பேசவும் ஆரம்பித்தேன். எப்படியோ ஒரு வழியாக இந்தப் பிரச்சினை முடிவை எட்டியது. புதிய சட்டமன்றக் கட்டடத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் படம் இடம்பெற்றிருந்தது.

புதிய கட்டிடத்தை அதிமுக உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். எண்ணெய்க் கிணறு போல் இருப்பதாக ஓர் உறுப்பினர் வர்ணிக்கவும் செய்தார். ஆளும் திமுகவினர் அந்தக் கருத்துக்கு மறுப்பளித்தனர். இப்படியான அரசியல் இங்கு நிகழாமல் இருந்தால்தான் அதிசயம்.

முத்துலட்சுமி அவர்களின் படம் இடம்பெற்றது குறித்த மகிழ்ச்சியை புதிய கட்டிட வரவேற்போடு நானும் பதிவுசெய்தேன். அரசு நிறைவேற்றியதாக இருந்தாலும் முதன் முதலாக அங்கு ஒரு பெண் தலைவர் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறி உள்ளதல்லவா? இந்த மகிழ்ச்சி சில மாதங்கள்கூட நீடிக்கவில்லை. மீண்டும் ஆட்சி மாற்றம். காட்சி மாற்றம். பழைய பேரவைக் கட்டடத்துக்கே திரும்ப வேண்டிய நிலைமை. டாக்டர் முத்துலட்சுமி அவர்களின் உருவப்படம் மாண்புகள் பொருந்திய மகா சபையில் இடம்பெறவில்லை.

பெண்களுக்காக எங்கே சட்டம் இயற்றினாரோ அங்கே பெயரளவுக்குக்கூட அவரது படம் இல்லை என்ற வருத்தம் இப்போதுவரை தொடர்கிறது

Leave a Reply