shadow

பெண்களே பலசாலிகள்!

women1_2415665gஆண் என்றாலே முரட்டுக் காளை, சிங்கம், சிறுத்தை, புலி என்று பலம் பொருந்திய விலங்குகளோடும் பெண் என்றால் மயில், மைனா, குயில், மான் என்று மென்மையான விலங்கு, பறவைகளோடும் ஒப்பிட்டுப் பார்க்கும் மனிதர்கள் இங்கே அதிகம்.

வெளித் தோற்றத்தை வைத்துப் பார்த்தால், பெண்களைவிட ஆண்கள் உயரத்திலும், எடையிலும், பலத்திலும் அதிக சக்தி வாய்ந்தவர்களாகத் தெரிந்தாலும், ஆரோக்கியத்தை வைத்துப் பார்க்கும் போது, ஆண்கள், பெண்களைவிட பின்தங்கியவர் களாகத்தான் இருக்கிறார்கள் என்பதே பல மருத்துவ ஆய்வுகளின் முடிவாக இருக்கிறது.

ஆரோக்கியமான பெண் சிசு

கருவில் இருக்கும் போதே பெண் சிசு, ஆண் சிசுவைவிட எதிர்ப்பாற்றல் கொண்டதாக வளர்கிறது. இயற்கையான உடல் வாகு, பழக்கவழக்கங்கள், குடும்பப் பின்னணி இப்படிப் பல காரணிகளையும் அலசி ஆராய்ந்து பெண்கள் பலவிதங்களிலும் ஆண்களைவிட ஆரோக்கியமானவர்களாக இருப்பதை உறுதிசெய்கின்றன பல மருத்துவ ஆய்வுகள்.

நீண்ட ஆயுள்

மாறிக்கொண்டே வரும் வாழ்வியல் சூழ்நிலையாலும், உணவுப் பழக்கவழக்கங்களினாலும் மனிதர்களின் ஆயுட்காலமும் அதிகரித்துக்கொண்டே போகிறது. குறிப்பாக ஆண்களைவிடப் பெண்களின் ஆயுட்காலம் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பதுதான் உண்மை.

உலக அளவில் 65 வயதைக் கடந்தவர்களில் 100 பெண்களுக்கு 77 ஆண்கள் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மூன்று பெண்களுக்கு 1 ஆண்தான், 85 வயதைக் கடந்து உயிர் வாழ்கிறார் என்று தெரிகிறது. நூறு வயதைக் கடந்தவர்களுள் 4:1 என்று பெண், ஆண் விகிதாச்சாரம் உள்ளது.

இந்தப் புள்ளிவிவரங்களிலிருந்து ஆண்களின் சராசரி வாழும் திறன், பெண்களைவிடக் குறைந்து காணப்படுகிறது. இறப்பு விகிதம், குறிப்பாகச் சிறுவயதிலேயே இறக்கும் விகிதத்திலும் பெண்களைவிட ஆண்களே அதிகம்.

ஆண்களின் இறப்புக்குக் காரணங்கள்

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி, உடல் அளவில் ஏற்படும் இதய நோய், இரைப்பை, குடல் நோய்கள், சிறுநீரகக் கற்கள், புற்று நோய், எச்.ஐ.வி. ஆகியவற்றின் பாதிப்பால் பெண்களைவிட ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

சாதகமான பெண் ஜீன்கள்

ஒவ்வொரு மனிதருக்கும் 22 ஜோடி குரோமோசோம்கள் பொதுவாக இருக்கும். 23-வது ஜோடிதான் ஒருவர் ஆணா, பெண்ணா என்பதைத் தீர்மானிக்கும் பாலியல் குரோமோசோமாக இருக்கும். XX என்றால் பெண். XY என்றால் ஆண். இதில் ஆராய்ச்சியின்படி ஆணின் XY குரோமோசோமில் உள்ள Y குரோமோசோம் சில குறைபாடுள்ள நோய்களை உண்டாவதற்கான ஜீன்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. அதேசமயம் பெண்ணுக்கு ஒரு X ஜீனில் குறைபாடு இருந்தாலும் இன்னொரு X ஜீன் அந்தக் குறைபாட்டைச் சமன் செய்துவிடுகிறது.

ஹார்மோன் குறைபாடுகள்

மருத்துவ ஆராய்ச்சிகளின்படி பெண்களுக்குச் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் HDL (High Density Lipoprotein) நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பதால் அவர்களுக்கு மாரடைப்பு வருவது தடுக்கப்படுகிறது. மாதவிடாய் நின்ற பிறகும் ஈஸ்ட்ரோஜனை மருந்தாக எடுத்துக் கொள்ளலாம். அதேசமயம் ஆணின் டெஸ்ட்டோஸ்டிரான் ஹார்மோன் அவர்களுக்கு அவசர புத்தியையும் பரபரப்பையும் ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவே ஆண்களில் பெரும்பாலோர் குடித்துவிட்டு அதிவேகமாக வண்டி ஓட்டுவது, ஆபத்தான விளையாட்டுகளில் ஈடுபடுவது, போதைப் பழக்கத்துக்கு அடிமையாவது எனத் தங்களுக்கான முடிவைத் தாங்களே தேடிக் கொள்வதில் பெண்களை முந்துகிறார்கள்.

உடல் பருமன்

உடல் பருமன் பிரச்சினை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான பிரச்சினையாக இருந்தாலும், அதனால் ஏற்படும் விளைவுகளால் ஆண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதே பல ஆய்வுகளின் முடிவுகளாக உள்ளது. உடல் பருமன் பிரச்சினையில், பெண்களுக்கு இடுப்பிலும், தொடையிலும் சதை போடும். ஆண்களுக்கு அடிவயிறில் தொந்தி விழும். இந்த அடிவயிறு தொந்தியால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

பணியில் ஏற்படும் மன அழுத்தம்

பணி சார்ந்த சுமைகளைத் திறமையுடன் சமாளிப்பதன் மூலம் மனப் பதற்றம், கோபம், வலிப்பு போன்ற நோய்களிலிருந்து பெண்கள் தப்பிக்கின்றனர். அலுவலக பணிச் சுமைகளைப் பெரும்பாலும் அலுவலகத்தோடே நிறுத்திக் கொள்ளும் மனப்பக்குவம் பெண்களுக்கு உள்ளது. இதனால் மனதளவில் பணியின் காரணமாக ஏற்படும் மன அழுத்தங்கள் பெண்களுக்கு ஏற்படுவதில்லை.

பெண்களின் உடல் நலம் குறித்து மகப்பேறு மருத்துவர் சாதனா, “உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெண் பலவீனமானவளாக இருந்தாலும் இயற்கையான சில அமைப்புகளால், ஆண்களைவிட நோயின் தாக்கம் குறைந்தவளாகப் பெண் இருக்கிறாள். இந்தியச் சூழ்நிலையில் புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற கெட்ட பழக்கங்களுக்கு அதிகம் அடிமையானவர்களாக ஆண்களே இருக்கிறார்கள். இதனால் பலவிதமான நோய்களுக்கும் ஆண்கள் ஆளாகிறார்கள். ஆண்களின் ஆயுட்காலம் பெண்களைவிடக் குறைகிறது. பெண்களின் உடலில் உருவாகும் இயற்கையான சுரபிகளாலும் அவர்களுக்கு மாரடைப்பு போன்ற நோய்கள் உண்டாவதில்லை. பெரும்பாலான பெண்களுக்கு ஹோட்டல் போன்ற வெளியிடங்களில் தொடர்ச்சியாக உணவு சாப்பிடும் வழக்கம் இல்லை. இதனால் அதிகக் கொழுப்பு, குடல் புற்று போன்ற நோய்கள் வருவது குறைவு” என்கிறார். பெண்களே பலசாலிகள் என்று இதற்கு மேலும் சொல்ல வேண்டுமா என்ன?

Leave a Reply