shadow

புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தில்லியில் உள்ள தேசிய கட்டட நிறுவனத்துக்கு வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 2014-2015 ஆம் ஆண்டு முதல் வீட்டு வசதி திட்டம் குறித்து சில விவரங்களை சேகரித்து இணையத்தள பதிவு மேற்கொள்ளும் வகையில் தாற்காலிக புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர் பதவி ஒன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பதவி முற்றிலும் தாற்காலிகமானதே என்ற போதிலும் மாதம் ஒன்றுக்கு தொகுப்பூதியமாக ரூ.15,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேறு ஏதும் படிகள் கூடுதலாக வழங்கப்படமாட்டாது. இந்தப் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதன்படி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கணினியில் பட்டயப் படிப்பு, சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 1.7.2015 அன்றைய நிலையில் 35 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும்.

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 26 ஆம் தேதிக்குள் மாவட்ட புள்ளியல் துணைஇயக்குநர், 3 ஆவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தூத்துக்குடி-628101 என்ற முகவரிக்கு உரிய கல்வி சான்றின் நகல் மற்றும் சுய முகவரியுடன் கூடிய அஞ்சல் அட்டையினை இணைத்து அனுப்ப வேண்டும்.

தேர்வு தேதி உரிய முறையில் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்பட்டு தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியுடைய புள்ளி விவர ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply