shadow

பி.இ. படிப்புக்கு ஆர்வம் குறைந்துவிட்டதா? 1 லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் காலி

be_counsellingஒரு காலத்தில் பி.இ. படிப்புக்கு மாணவர்களிடம் இருந்த ஆர்வம் தற்போது வெகுவாக குறைந்துவிட்டது என்பதை இந்த ஆண்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமான பி.இ. இடங்கள் காலியாக இருப்பது நிரூபித்துள்ளது.

தரமான பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்தால் மட்டுமே சேருவோம், இல்லையென்றால் கலை அறிவியல் கல்லூரிகளே பெட்டர் என்ற மனப்பான்மைக்கு மாணவர்களும், பெற்றோர்களும் எடுத்த முடிவே இதற்கு காரணம் என தெரிகிறது.

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அதிகமாக தமிழத்தில் தான் அதிக பொறியியல் கல்லூரிகள் உள்ளனர். தமிழகத்தில் 527 பொறியியல் கல்லூரிகள் இருந்தாலும், பாதிக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் மாணவர்கள் சேர முன்வரவில்லை. இதற்கு அந்த கல்லூரியின் உள் கட்டமைப்பு சரியில்லாததே காரணம்.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறியதாவது: பி.இ படிப்பின் மீதான ஆர்வம் குறைந்துவிட்டது என ஒரேயடியாகச் சொல்ல முடியாது. எண்ணிக்கை குறைந்து போனதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. பொதுவாக, கிராமப்புற மாணவர்கள்தான் பொறியியல் படிப்பை அதிகளவில் தேர்வு செய்து வந்தனர். இதுவரையில், 68 சதவீத இடங்கள் அவர்களால் நிரம்பின. பெரும்பாலும், தகவல் தொழில்நுட்பம், கணிப்பொறி அறிவியல் பாடப்பிரிவுகளை அவர்கள் விரும்பி தேர்வு செய்தனர்.

காரணம், படிப்பை முடித்தவுடன் உறுதியான வேலைவாய்ப்பு கிடைத்து வந்ததுதான். படிப்பை முடித்ததும் 25 ஆயிரம் ரூபாய் வரையில் சம்பளம் கிடைத்தது. அதேவேளையில், கலை அறிவியல் கல்லூரிகளில் பி.எஸ்சி கணிப்பொறி அறிவியல் மற்றும் பி.எஸ்சி தகவல் தொழில்நுட்பம் படித்து வந்த மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தன. ‘ இவர்களுக்கு 15 ஆயிரம் சம்பளம் கொடுத்தால் போதும்’ என பெரிய நிறுவனங்கள் எண்ணத் தொடங்கின. உதாரணமாக, டி.சி.எஸ் நிறுவனத்தில் 25 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்கிறார்கள் என்றால், அதில் பத்தாயிரம் பேர் கலை அறிவியல் மாணவர்களாக இருக்கிறார்கள். நான்காண்டு பி.இ படிப்பில் ஏற்படும் செலவுகளைவிடவும், பி.எஸ்சி படிப்பிற்கு ஆகும் செலவு குறைவு என்பதும் முக்கியக் காரணம்.

அதேநேரத்தில், பொறியியல் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகரித்து வருகின்றன. கடந்தாண்டு 20 ஆயிரம் பேரை வேலைக்கு எடுத்த நிறுவனங்களுக்கு, இந்த ஆண்டு முப்பதாயிரம் பேர் தேவைப்படுகின்றனர். அதற்கேற்ற தரமான பொறியியல் கல்லூரிகளைத் தேடும் மாணவர்கள் அதிகரித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் டாப் 50 கல்லூரிகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதுவரையில், 120 இடங்களை நிரப்பி வந்த பெரிய கல்லூரிகள், 180 முதல் 240 சீட்டுகள் வரையில் கூடுதலாக நிரப்புவதற்கு அனுமதி வாங்கிவிட்டன. எனவே, மாணவர்கள் இந்த டாப் 50 கல்லூரிகளில் சேருவதையே விரும்புகின்றனர். இதனால், புதிதாகத் தொடங்கிய கல்லூரிகள், உள்கட்டமைப்பு வசதி இல்லாத கல்லூரிகள் சரிவைச் சந்தித்து வருகின்றன.

கடந்த ஆண்டு அகில இந்தியத் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்திடம், ‘ எங்களால் நடத்த முடியவில்லை. மூடுவதற்கு அனுமதி கொடுங்கள்’ என 22 கல்லூரிகளின் உரிமையாளர்கள் மனு செய்திருந்தனர். இந்த ஆண்டு எவ்வளவு விண்ணப்பங்கள் வரப் போகின்றன என்று தெரியவில்லை. தரமான பொறியியல் பட்டதாரிகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கல்லூரிகளைத் தேர்வு செய்வதில் மாணவர்களும் பெற்றோரும் அதிக விழிப்பு உணர்வோடு இருக்கிறார்கள்” என்றார் விரிவாக.

கூகுளில், ‘ பொறியியல் கல்லூரிகள் விற்பனைக்கு’ என்ற விளம்பரத்தை அதிகளவில் பார்க்க முடிகிறது. இதற்கு தரமான கல்லூரியை நோக்கிய மாணவர்களின் தேடல் முக்கிய காரணமாக இருக்கலாம்.

Leave a Reply