shadow

பிரெக்ஸிட்… இந்தியாவை எப்படியெல்லாம் பாதிக்கும்?

1இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்த கிரேட் பிரிட்டன், உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தியாக உருவாகி உள்ள அமெரிக்காவையும், வளர்ந்து வரும் இந்தியா உட்பட 52 நாடுகளை ஆண்டது வரலாறு. கடந்த 43 ஆண்டுகளாக ஐரோப்பிய யூனியனிலிருந்த பிரிட்டன் தற்போது அதிலிருந்து வெற்றிகரமாகப் பிரிய அந்நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த முடிவு உலக நாடுகள் அனைத்திலும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து, ஜெர்மனி உட்பட பெரும்பாலான ஐரோப்பிய கண்ட நாடுகள் சின்னாபின்ன மாகின. அதிலிருந்து மீண்டுவர வேண்டிய கட்டாயத்தில்தான் ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு கூட்டமைப்பு 1951-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிறகு 1957-ல் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பெல்ஜியம், லக்ஸம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து ஐரோப்பிய பொருளாதார சமூகத்தை உருவாக்கின. இந்தக் கூட்டமைப்பில் 1973-ல் பிரிட்டனும் சேர்ந்தது. 1993-ல் ஐரோப்பிய யூனியனாக அதிகாரபூர்வமாக மாறியபோது அதில் 28 நாடுகள் உறுப்பினர் களாக இருந்தன.

அந்த நாடுகள் தங்களுக்குள் வர்த்தகம், தொழில் கொள்கைகளை வகுத்துக் கொண்டு தங்கள் பொருளா தாரத்தை உயர்த்த திட்டமிட்டன. யூரோ என்ற பொது கரன்சியை, ஐரோப்பிய யூனியன் நாடுகள் பயன்படுத்தி வந்தன, ஒரே ஒரு நாட்டைத் தவிர. பிரிட்டன் தனது பவுண்ட் ஸ்டெர்லிங்கையே நாணயமாகத் தொடர்ந்தது. ஐரோப்பிய யூனியனில் உள்ள உறுப்பு நாடுகளின் மக்கள், அந்த நாடுகளுக்குள் விசா இன்றி பயணம் செய்யவும், எந்த நாட்டிலும் தங்கி பணியாற்றவும் முடியும். இதனால் தடையற்ற வர்த்தகம் சாத்தியமானது. பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள நாடுகள் நலிந்த நாடுகளுக்கு ஆதரவாய் இருந்தன. அவ்வப்போது ஒப்பந்தங்களின் மூலம் தங்களது பிரச்னைகளைக் கூடி சரிசெய்துகொண்டன இந்த யூனியனில் இருந்த நாடுகள்.

பிரிட்டன் மட்டும் ஏன் வெளியேறுகிறது?

ஐரோப்பிய யூனியனில் வலிமையான நாடுகள் என்று பார்த்தால் பிரிட்டன், ஜெர்மனி, லக்ஸம்பர்க், பிரான்ஸ் ஆகியவை தான். மற்ற நாடுகளில் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளோ, வேலை வாய்ப்புகளோ அதிகம் இல்லை. ஐரோப்பிய யூனியன் தனது அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் சேர்த்துதான் பட்ஜெட்டை உருவாக்கும். இதனால் நலிவடைந்த நாடுகளின் சுமையை வலிமையான நாடுகள் ஏற்க வேண்டிய நிலை இருந்தது.

ஆனால், இது மட்டும் வெளியேறுவதற்கான காரணம் இல்லை. தற்போது ஐரோப்பிய யூனியனில் ஒரு பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் நாம் அறிந்ததே. நிலைமை அப்படி இருக்கும்பட்சத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளிலிருந்து மக்கள் பிரிட்டனுக்கு புலம் பெயர்ந்தார்கள். 1993-2014 காலகட்டத்தில் மட்டும் வெளிநாடுகளில் பிறந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தவர் களின் எண்ணிக்கை 8.3 மில்லியனாக இருந்தது.

பிரெக்ஸிட் முடிவுகள்!

இந்த நிலையில் ஜூன் 23-ம் தேதி நடந்த வாக்கெடுப்பில், 51.8 சதவிகிதத்தினர் பிரிட்டன் வெளியேற்றத்துக்கு ஆதரவாக வும், 48.2 சதவிகிதத்தினர் பிரிட்டன் வெளியேற்றத்துக்கு மறுப்பு தெரிவித்தும் வாக்களித்தனர். பெரும்பான்மை அடிப்படையில் பிரிட்டன் வெளியேறுவது உறுதியானது.
ஆனால், பிரிட்டனின் பகுதிகள் வாரியாகப் பார்க்கையில் வாக்கெடுப்பில் முரண்பாடுகள் இருந்தன. இங்கிலாந்து, வேல்ஸ் பகுதிகளில் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவாக வாக்குகள் காணப்பட்ட நிலையில், ஸ்காட்லாந்து, அயர்லாந்து பகுதிகளில் ஐரோப்பியக் கூட்டமைப்பில் பிரிட்டன் நீடிக்க அதிகளவில் ஆதரவு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தலைநகர் லண்டனில் 60% பேர் கூட்டமைப்பில் பிரிட்டன் நீடிக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், மொத்தமுள்ள 12 மாகாணங்களில் 9 மாகாணங்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியேற வாக்களித்தன. இந்த முரண்பாடான முடிவுகள் பிரிட்டனின் அரசியலில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது இனிவரும் நாட்களில்தான் தெரியும். தற்போது பிரதமராக உள்ள டேவிட் கேமரூன் தனது ராஜினா மாவை அறிவித்திருக்கிறார். ஸ்காட்லாந்தும் அயர்லாந்தும் இங்கிலாந்திலிருந்து பிரிந்துவிடவும் வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து முறைப்படி பிரிந்து தனக்கான பொருளாதார மற்றும் வர்த்தக கொள்கைகளை வகுத்து செயல்பட குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் ஆகலாம்.

இப்படி பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியனின் எதிர்காலமும் ஒரு நிலையற்ற தன்மையில் இருக்கும் சூழலில், உலக நாடுகளின் பொருளாதாரத் தில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும், இந்தியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்கிற கேள்விகளை பங்குச் சந்தை மற்றும் முதலீட்டு நிபுணரும், இன்வெஸ்டார்ஸ் ஆர் இடியட்ஸ்.காம் மற்றும் ஐஎன்ஆர் பாண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் நிறுவனர் அர்ஜுன் பார்த்தசாரதியிடம் கேட்டோம்.

“பிரெக்ஸிட் உலக அளவில் ஒரு முக்கியமான நிகழ்வு என்பதை மறுக்க முடியாது. ஏனெனில் அதன் வாக்கெடுப்பு முடிவுகள் வெளியான ஜூன் 24-ம் தேதி அன்று ஆசிய, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் அனைத்தும் கடும் இறக்கத்தைச் சந்தித்தன. பிரிட்டன் வெளியேறாது என்று அனைவரும் நம்பிக் கொண்டிருந்ததால், அது எதிர்பாராத முடிவாக இருக்கவே சந்தைகள் இத்தகைய இறக்கத்தைச் சந்தித்தன.

பிரிட்டனின் நாணயமான பவுண்ட்டின் மதிப்பு கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவில் 11 சதவிகிதச் சரிவைச் சந்தித்தது. லண்டன் பங்குச்சந்தை 8% சரிவு கண்டது. பர்க்லேஸ் வங்கி, ராயல் ஸ்காட்லாந்து வங்கியின் பங்கு மதிப்புகளும் 30% வீழ்ச்சி அடைந்தன. யூரோவுக்கு நிகரான பவுண்ட்டின் மதிப்பும் 3.3% வீழச்சி அடைந்தது. பிரிட்டன் அரசுப் பத்திரங்களின் மதிப்பும் சரிந்தது.

பிரெக்ஸிட் தாக்கம் ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் உணரப்பட்டது. யூரோ நாணயத்தின் மதிப்பும் 3.5% குறைந்தது. அதே சமயம், மதிப்பு உயர்வினால் அமெரிக்க டாலரும் ஜப்பானின் யென்னும் இதனால் நல்ல லாபம் பெற்றன. தங்கமும் 8%விலை ஏறியது. கச்சா எண்ணெய்யின் விலை பீப்பாய்க்கு 48 டாலராகக் குறைந்தது.

இந்தியப் பங்குச் சந்தையிலும் 3.5% வீழ்ச்சியைக் காண முடிந்தது. இந்திய ரூபாயின் மதிப்பும் 1.5% குறைந்தது. ஆனால் பிறகு பிரெக்ஸிட் முடிவு அவ்வளவு பெரிய பிரச்னை இல்லை என்பது உணர்ந்தபிறகு சந்தை சரிவிலிருந்து மீண்டது. அடுத்த வர்த்தக நாட்களில் சந்தைகள் அனைத்தும் பழைய நிலையை அடைந்தன. ஆனால், ஐரோப்பிய கூட்டணியில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதால், அந்த நாடுகளுக்கிடையில் வர்த்தக மற்றும் பொருளாதார இடைவெளி உருவாகும். மேலும், நாடுகளுக்கிடையே எல்லைப் பிரச்னை, புலம்பெயர்ந்தவர்கள் பாதிப்பு, பாதுகாப்பு போன்ற பல பிரச்னைகள் உருவாகும். எனவே, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதார நிலை ஒரு முடிவுக்கு வரும் வரையில் முதலீட்டாளர்கள் கவனமாக இருந்து முதலீட்டு முடிவுகளை எடுப்பது நல்லது.

இந்தியாவுக்கு சாதகமா, பாதகமா?

இந்தியாவைப் பொறுத்தவரை, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் சுமுகமான சூழல் நிலவுகிறது. அதனால் ஐரோப்பிய யூனியனில் ஏற்படும் அரசியல் பிரச்னைகளால் நமக்குப் பெருமளவிலான பாதிப்புகள் இருக்க வாய்ப்பு இல்லை. அதுமட்டுமல்லாமல் நம்முடைய பொருளாதாரம் பெரும்பாலான காரணிகளின் அடிப்படையில் வலுவான நிலையில் உள்ளது. இங்கு நிதி நெருக்கடி, பணவீக்கம் மற்றும் நடப்புக் கணக்கு பிரச்னைகள் அனைத்தும் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் நிதிச் சந்தைக்குப் பெருத்த பாதிப்பு வர வாய்ப்பு இல்லை. இங்கு அரசியல் நிலைமையும் நன்றாகவே உள்ளது. மேலும், ரிசர்வ் வங்கி சொல்வதன்படி நம்மிடம் அந்நிய செலாவணி இருப்பு போதுமான அளவு இருக்கும்பட்சத்தில் பெரிதாக பாதிப்பில்லை என்று உறுதியாக நம்பலாம்.

ஆனால், சில நிறுவனங்களின் பங்குகள், கரன்சி மற்றும் கமாடிட்டி ஆகியவற்றில் பிரெக்ஸிட்டின் தாக்கம் தொடர வாய்ப்புள்ளது. பல இந்திய நிறுவனங்கள் பிரிட்டனில் தொழில் செய்து வருகின்றன. இந்த நிறுவனங்களில் சுமார் 1,10,000 பேர் பணியாற்றுகின்றனர். பிரிட்டன் வெளியேறுவதால், அங்குள்ள பிற நாட்டு மக்கள் வெளியேறும்பட்சத்தில் அங்குள்ள தொழில்கள் பாதிக்கப் படும். அதனால் அந்த நிறுவனப் பங்குகள் இறக்கமடைய வாய்ப்புள்ளது.

மேலும், பிரெக்ஸிட் விளைவினால் உலக நாடுகளின் கரன்சி பரிமாற்றத்தில் நிச்சயம் ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து இருக்கும். அதனால் அமெரிக்கா ஃபெட் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு வாய்ப்பில்லை என்பது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருக்கும். மேலும், இந்திய ரிசர்வ் வங்கியும் ரூபாயின் மதிப்பை நிலையாக வைத்திருக்க தேவையான நடவடிக்கைகளை நிச்சயம் எடுக்கும்.

கமாடிட்டிகளைப் பொறுத்த வரை, பிரெக்ஸிட் முடிவு களுக்குப்பின் தங்கம் விலை ஏறி யிருக்கிறது. இதற்கு காரணம், ரிஸ்க்கைக் குறைப்பதற்காக தங்கத்தில் அதிகளவில் முதலீடு கள் குவிந்ததுதான். மேலும், கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு காரணம் சப்ளை அதிகமானது தானே தவிர, பிரெக்ஸிட் தாக்கத்தினால் அல்ல. ஆனால், கமாடிட்டி பொருட்களில் பிரெக்ஸிட்டின் தாக்கம் குறிப்பிடும் அளவில் தொடர்ந்து இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை” என்று முடித்தார்.

அவர் கூறுவது போல் இந்திய நிதி சந்தைக்குச் சாதகமான சூழலே நிலவும் என்றாலும் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டு முடிவுகளை சரியான ஃபண்டமென்டல் அடிப்படையில் மட்டுமே எடுக்க வேண்டும். சந்தை இறக்கத்தில் முதலீடு செய்வது சரியான முடிவு தான். ஆனால் எதில் முதலீடு செய்கிறோம் என்பது முக்கியம். எந்த முதலீடாக இருந்தாலும் நம்முடைய முதலீட்டுக் காலம் எவ்வளவு, அவ்வளவு காலமும் நாம் செய்யும் முதலீடு லாபம் தரும் நோக்கில் செயல்படுமா என்பதையெல்லாம் மறக்காமல் பார்க்க வேண்டியது அவசியம்

Leave a Reply