shadow

பிரதமர் மோடியின் அனைவருக்கும் சொந்த வீடு என்பது சாத்தியமா?

பிரதமர் நரேந்திர மோடியின் ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் 2022-ம் ஆண்டுக்குள் நகர்ப்புறங்களில் இரண்டு கோடி வீடுகள் கட்டப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், 2018-ம் ஆண்டு நடந்துகொண்டிருக்கும் நிலையில், இதுவரை குறைந்த அளவிலேயே இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தக் குறைந்த விலை குடியிருப்புத் திட்டத்தில் நுழையும் கட்டுநர்களுக்கு எந்தச் சிறப்பு சலுகையையும் அரசு இன்னும் தெளிவாக அறிவிக்கவில்லை.

ஒரு சாதாரணக் குடியிருப்புத் திட்டத்துக்குச் செய்யப்படும் அதே செலவுதான் இந்தக் ‘குறைந்த விலை குடியிருப்புப்’ பிரிவுத் திட்டங்களுக்கும் ஆகும் என்பதால், கட்டுநர்கள் இந்தத் திட்டத்தைத் தொடங்கத் தயங்குகிறார்கள். இந்நிலையில் ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தைப் பற்றி சமீபத்தில் ‘அசோசாம்’ ஒருங்கிணைத்த தேசிய மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது.

2016-ம் ஆண்டு ஜூன் 1 அன்று மத்திய அரசு ‘அனைவருக்கும் வீடு 2022’ என்னும் திட்டத்தை அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக 9 மாநிலங்களில் 305 நகரங்களைக் கண்டறிந்து அங்குள்ள ஏழை மக்களுக்கு வீட்டு வசதி செய்துதருவதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்த முயற்சியால் நகரங்களில் வாழும் ஏழைகள் உள்ளிட்ட பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்கள், குறைந்த வருவாய்ப் பிரிவினர் ஆகியோரும் பயன்பெற உள்ளனர்.

‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டு வசதித் திட்டத்தின் மூலம் 2022-க்குள் அனைவருக்கும் வீட்டு வசதி தர ஏற்படுத்தித்தரஇலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த இலக்கை எட்டுவது எந்த அளவு சாத்தியம் என்பது கேள்விக்குறியாகியுள்ளதாகச் சொல்கிறார்கள் துறைசார் நிபுணர்கள்.

குறைந்த விலை குடியிருப்புப் பிரிவில் கட்டுநர்களுக்கு ஊக்கத்தொகை வழங்காமல் இருப்பது, ‘குறைந்த விலை’ என்பதைத் தெளிவுபடுத்தாமல் இருப்பது போன்ற பிரச்சினைகளையும் நிபுணர்கள் எழுப்பியிருக்கிறார்கள். அத்துடன், மெட்ரோ நகரங்களில் நிலங்களின் விலை அதிகமாக இருப்பதால், இந்தக் குறைந்த விலை வீட்டுத் திட்டங்களுக்கான இடங்கள் புறநகரில் ஒதுக்கப்படுகின்றன. இந்த இடங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பதால், விற்பனை குறைவாக இருக்கிறது.

ஆனால், சதவீதத்தை மட்டும் வைத்து இந்தத் திட்டத்தை எடைபோடக் கூடாது. குறைந்த விலை குடியிருப்புத் திட்டத்தால் கிடைக்கும் நன்மைகளைக் காலப்போக்கில்தான் தெரிந்துகொள்ள முடியும். தற்போது முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தில் ஆர்வத்துடன்தான் செயல்பட்டுவருகின்றனர் என்ற கருத்தும் இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்டது.

இந்த ‘Pmay Urban’ திட்டத்தின் கீழ், தேசிய குடியிருப்பு வங்கி (NHB) 1,40,943 குடியிருப்புகளுக்கு ரூ. 3,018 கோடியை வழங்கியிருப்பதாக அசோசாம் தேசிய குடியிருப்பு வங்கியின் நிர்வாக இயக்குநரும் செயல் இயக்குநருமான கல்யாணராமன் தெரிவித்திருக்கிறார். குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு ரூ. 2,436 கோடியில் 1,13,081 குடியிருப்புகளும், நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு ரூ. 582 கோடியில் 27, 862 குடியிருப்புகளும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

தற்போது இந்தக் குறைந்த விலைக் குடியிருப்புப் பிரிவின் வளர்ச்சி குறிப்பிடத்தகுந்ததாக இருந்தாலும், இனிவரும் காலத்தில் இந்தப் பிரிவு குடியிருப்புத் திட்டங்களின் வளர்ச்சி அதிகரிக்க வேண்டும். நிதிமுதலீட்டாளர்கள், கட்டுநர்கள், வங்கிகள் என அனைத்துத் தரப்பினரும் இந்த ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தை வெற்றியடையவைக்க ஒன்றிணைய வேண்டும் என்று இந்த மாநாட்டில் நிபுணர்கள் தெரிவித்தனர். ஆனால், இந்தத் திட்டத்துக்கான இலக்கை அடைய நான்கு ஆண்டுகளே உள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

Leave a Reply