shadow

arun jaitleyவரும் 2016-17 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 29-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய-கொரிய வர்த்தக உச்சி மாநாடு டெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய நிதித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறியதாவது:

அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் அடுத்த மாதம் 29-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதற்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளோம். இந்த பட்ஜெட் அடுத்த 3 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

இந்த அரசு தெளிவான பொருளாதார கொள்கைகளை பின்பற்றி வருவதால், நீண்டகால அடிப்படையில் நீடித்த, நிலையான பொருளாதார வளர்ச்சியை நம்மால் எட்ட முடியும். ஏழை மக்ககளின் நலனுக்காக செயல்பட்டு வரும் மத்திய அரசு, தொழில் துறை வளர்ச்சியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தொழில் துறை வளர்ந்தால்தான் வரி வருவாய் அதிகரித்து வறுமையை ஒழிக்க முடியும்.

இதுமட்டுமல்லாமல் வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, இயற்கைச் சீற்றம் காரணமாக பயிர்கள் சேதமடைந்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்வதற்காக புதிய தேசிய பயிர் காப்பீட்டு திட்டம் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

2014-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 2-வது முறையாக முழு ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக 7 முதல் 7.5 சதவீதமாக தேங்கி உள்ள நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் அதிகரிக்க இந்த பட்ஜெட்டில் முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிகிறது.

பட்ஜெட் தயாரிப்பதற்கான நிதியமைச்சர் ஜேட்லி தலைமையிலான குழுவில் இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா, தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் மற்றும் நிதி ஆயோக் துணைத்தலைவர் அர்விந்த் பனகாரியா ஆகியோர் உள்ளனர்.

இதுபோல், நிதித் துறை செயலாளர் ரத்தன் வட்டாள் தலைமையிலான அதிகாரிகள் குழுவில் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ், வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா மற்றும் பங்கு விலக்கல் துறை செயலாளர் நீரஜ் குப்தா ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply