shadow

பிப்ரவரி 17: திருநள்ளாறு சிறப்பு ஆராதனை

திருநள்ளாறு, தர்பாரண்யேஸ்வரர் கோயில் என்னும் பாடல்பெற்ற தென்னாட்டு சிவத்தலமானது சனி தோஷ நிவர்த்தி அளிக்க வல்லது. லட்சக்கணக்கானோர் வருகை தரும் இத்திருநள்ளாறு திருக்கோயிலில் சனி பகவானுக்குச் சிறப்பு ஆராதனை வரும் நிகழவிருக்கிறது. இதைக் காணும் பக்தர்களுக்குக் கூடுதல் நன்மை கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

நளன் செய்த குற்றம்

நிடத நாட்டு மன்னன் நளன், நள பாகம் என்று தனது சமையலின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் விற்பன்னன். விதர்ப நாட்டு மன்னன் வீரசேனன் மகளான தமயந்தியை மணந்தார். இந்தப் பேரழகியை மணக்கத் தேவர்களும் விரும்பினர். அவள் நளனை மணந்ததால் தேவர்களில் ஒருவனான சனி பகவான் கடுங்கோபம் கொண்டார்.

நளன் ஏதேனும் குற்றம் செய்தால் அவனை வாட்டி வதைத்துவிடலாம் என்ற எண்ணத்தில் பன்னிரண்டு ஆண்டு காலம் முயன்றான். ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால், அதன் பிறகு ஒரு நாள், நளன் தன் கால்களைக் கழுவும்பொழுது, அவனது பின்னங்காலில் நீர் படவில்லை. இதனையே குற்றமாகக் கருதி அவனைப் பீடித்தது சனி.

நளனின் சந்தோஷ வாழ்க்கை தொலைந்தது. மனைவியைப் பிரிந்தான். ஓடி ஒளிந்து வாழும் நிலைகூட ஏற்பட்டது. பிறகு துன்பங்கள் தீர்ந்து நாடாளத் தொடங்கினான் நளன். மழை விட்டும் தூவானம் விடாது என்பதற்கு ஏற்ப, சனியால் பட்ட துன்பங்கள் தொடரத்தான் செய்தன.

இவற்றையும் போக்கிக்கொள்ள நாரதரின் அறிவுரைப்படி நளன் தீர்த்த யாத்திரைக்குச் சென்றான். அவனை வழியில் கண்ட பரத்வாஜ முனிவர் சனி தோஷம் நீங்க திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சிவனை வழிபடுமாறு அறிவுறுத்தினார். அதன்படி அத்திருக்கோயிலுக்குள் நளன் செல்ல, ஈஸ்வரனைக் கண்டு அஞ்சி, அவனைத் தொடர முடியாத சனி பகவான் வெளியில் நின்றார். இந்நிகழ்வு இங்கு மட்டுமே நடந்தது. இன்றும் அப்படியே நின்ற வண்ணமே காட்சி அளிக்கிறார் சனி பகவான். இவரைத் தரிசித்து பின்னர் சிவ பெருமானைத் தரிசித்தால் சனி தோஷம் விலகும் என்பது ஐதீகம்.

திருஞான சம்பந்தர் பாடிய திருப்பதிகம்

இத்திருக்கோயிலில் உள்ள மரகத லிங்கத்துக்கு உச்சி கால அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேகப் பாலையும் பிரசாதமாகத் தரப்படும் வாழைப் பழத்தையும் உண்டால் மகப்பேறு உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருஞான சம்பந்தர் இயற்றிய பச்சைத் திருப்பதிகம் இத்திருத்தலத்தைக் குறிக்கும் பாடலாகும். அம்பாள் திருநாமத்தைக் குறிக்கும் போகமார்த்த பூண்முலையாள் திருப்பதிகமும் அம்பாளைச் சிறப்பித்துக் கூறுகிறது.

வள்ளல் பிரான்

இத்திருத்தலத்தில் சனி பகவான் அனுக்கிரக மூர்த்தியாக விளங்குகிறார். திருமால், பிரம்மன், இந்திரன், திசைப் பாலகர்கள், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனன், நளன் ஆகியோர்கூட இவனது அருள் கிடைத்து உய்த்தனர் என்கிறது இத்திருத்தல வரலாறு.

சனி தரிசனம் செய்யும்போது, பக்கவாட்டில் நின்றே வணங்க வேண்டும். அவரது நேர் பார்வைக்கு ஆளாதல் கூடாது என்பதற்கு, ராவணன் குறித்த கதை ஒன்று உண்டு. மகா பலசாலியான ராவணன் நவகிரக நாயகர்களை வென்று அவர்களைப் படிபோல் வரிசையாகப் படுக்கவைத்து, ஒவ்வொரு நாளும் அவர்கள் முதுகில் கால் பதித்து சிம்மாசனம் ஏறுவானாம்.

நவகிரகங்களில் ஒருவரான சனி பகவான் மட்டும் ராவணனிடம் தன்னை மல்லாக்கப் போட்டு தன் நெஞ்சை மிதித்து செல்லுமாறு கேட்டுக்கொண்டாராம். அதுவே ராவணனுக்குப் பெருமை என்றும் நம்பவைத்தாராம். அவ்வாறே ராவணன் செய்ய, அப்போது அவனை நேர் பார்வை பார்த்தது சனி. இந்தப் பார்வை பட்ட தோஷம் ராவணன் சீதையைக் கடத்தினான். பின்னர், காகுத்தன் கையால் மாண்டான் என்பது கதை தரும் கருத்து.

சனி பகவானுக்கு ‘மந்தன்’, ‘சனைச்சரன்’ என்னும் பெயர்களுண்டு. சனைச்சரன் என்பதே ‘சனீஸ்வரன்’ என்றாயிற்று. சிவனுக்கும் இவருக்கும் மட்டுமே ஈஸ்வர பட்டம் உண்டு. ஒருகால் நொண்டியாகவும் ஒரு கண்ணும் மட்டுமே கொண்டவர் இவர். காக்கையை வாகனமாகக் கொண்டவர். நான்கு கைகளைக் கொண்டவர். இவருடைய மனைவியின் பெயர் ஜேஷ்டா தேவி.

ஒவ்வொரு ஜாதகத்திலும் ஆயுள்காரனாக விளங்கும் இவர், கொடுத்தால் தடுப்பார் யாருமில்லை என்பதால் இவரை வள்ளல்பிரான் என்பது சாலப் பொருந்தும்.

Leave a Reply