பிகில் திரைவிமர்சனம்

நல்ல வாய்ப்பை மிஸ் செய்துள்ளார் அட்லி

விஜய் நடித்த பிகில் திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் எதிர்பார்ப்பை நிறைவு செய்ததா? என்பதை தற்போது பார்ப்போம்
ஒரு ரவுடி கதை என்றாலே ஒரு அப்பா ரவுடியாக இருப்பார், அவர் அவருக்கு ஏகப்பட்ட எதிரிகள் இருப்பார்கள், அந்த எதிரிகளால் அவர் எந்நேரமும் கொல்லப்பட வாய்ப்பு இருக்கும், இதனால் அந்த அப்பா தனது மகனை வெளிநாட்டிலோ அல்லது வேறு இடத்திலோ பத்திரமாக வேறு துறையில் வல்லவராகத் வளர்த்து வருவார். இந்த நிலையில் திடீரென எதிரிகளால் கொல்லப்படுவார், அதனை அடுத்து வெளியூரில் அல்லது வெளிநாட்டில் இருக்கும் மகன், தனது அப்பாவின் பொருப்பை கையில் எடுத்து ரவுடியிஸத்தையும், மக்களையும் காப்பாற்றுவார். இதுதான் பெரும்பாலான கேங்க்ச்டார் படங்களில் பார்த்து வருகிறோம். அந்த படத்தின் கதை தான் பிகில் படத்தின் கதையும். இன்னும் கொஞ்சம் ஆழமாக சொல்லப்போனால் இந்த படம் விஜய் நடித்த தலைவா படத்தின் ரீமேக் என்றே சொல்லலாம்

விஜய்க்கு இந்த படத்தில் நடிப்பதற்கு ஓரளவுக்கு வாய்ப்பிருக்கிறது. ராயப்பன் கேரக்டரில் அவர் உண்மையிலேயே அசத்தி உள்ளார் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் மைக்கேல் விஜய் அநியாயத்திற்கு வெறுப்பு ஏற்றுகிறார். அவருடைய அலட்டலும் மாஸ் காட்சிகளும் கொஞ்சம் கூட எடுபடவே இல்லை. முழுக்க முழுக்க ரசிகர்களின் கைதட்டல் பெறுவதற்காக மாஸ் காட்சிகள் வலிய திணிக்கப்பட்டுள்ளன,

நயன்தாரா போன்ற பெரிய நடிகை இந்த படத்திற்கு தேவையா? என்ற அளவுக்கு உள்ளது அவரது கேரக்டர். இரண்டு பாடலுக்கு நடனமாடி ஒரு சில காட்சிகளுக்கு மட்டுமே வரும் நயன்தாராவுக்கு இத்தனை கோடி கொடுக்க வேண்டுமா? என்பதே கேள்வியாக உள்ளது

விவேக் மற்றும் யோகிபாபு ஆகிய இருவரும் இந்த படத்தில் காமெடி செய்துள்ளார் ஆனால் சிரிப்பு தான் வரவில்லை என்பது ஒரு சோகமான விஷயம். படத்தின் ஒரே நல்ல அம்சம் என்றால் கால்பந்தாட்ட வீரர் வீராங்கனைகளை நடிப்பு என்று கூறலாம். குறிப்பாக ரோபோ சங்கரின் மகள் கலக்கியுள்ளார். அதேபோல் ரெபா மோனிகா,வர்ஷா, இந்துஜா ஆகியோர் நன்றாக நடித்துள்ளனர்

ஒரு படத்தின் வில்லன் கேரக்டர் மாஸ் ஆக இருந்தால்தான் அந்த படத்தில் ஹீரோவுக்கு வேலை இருக்கும். வில்லன் கேரக்டர் டம்மியாகிவிட்டால் அதை விட டம்மியாக ஹீரோ கேரக்டர் தானாகவே மாறிவிடும் என்பதற்கு பல உதாரணங்கள் தமிழ் சினிமாவில் உள்ளன. அந்த பட்டியலில் பிகில் படத்தையும் சேர்த்து கொள்ளலாம் ஜாக்கி ஷெராப் மற்றும் டேனியல் பாலாஜி இருவரும் டம்மி

இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானின் இசையில் சிங்கப் பெண்ணே பாடல் மட்டும் கேட்கும் வகையில் உள்ளது. அதை படமாக்கிய விதம் மிகவும் அருமை. குறிப்பாக ஏஆர் ரகுமான் மற்றும் அட்லி இந்த பாடலில் ஒரு காட்சியில் தோன்றி இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியமான ஒன்றாகும். மற்ற பாடல்கள் சுமாராக இருப்பதுபோலவே பின்னணி இசையிலும் ரகுமானின் முழு திறமையை வெளிப்படுத்தவில்லை என்றே கூறலாம்

ஒளிப்பதிவாலர் விஷ்ணுவின் பணியில் எந்த குறையும் சொல்ல முடியாது.உண்மையிலேயே அவர் அசத்தி உள்ளார் என்று கூறலாம். ஆனால் எடிட்டர் ரூபன் படத்தின் நீளத்தை அநியாயமாக 3 மணி நேரம் ஆக்கியுள்ளார். முதல் பாதியில் தேவையில்லாத காட்சிகள் மிக அதிகம், இரண்டாம் பாதியிலும் ஆங்காங்கே ஒரு சில காட்சிகள் தேவையில்லை என்பதால் படத்தின் நீளத்தை இன்னும் 30 நிமிடத்திற்கு கட் பண்ணலாம் என்றே தோன்றுகிறது

இயக்குனர் அட்லீ விஜய்யை மாஸ் ஆக திரையில் காண்பித்து விட்டால் போதும், வெற்றி பெற்றுவிடலாம் என்ற நினைப்புடன் படத்தின் திரைக்கதையில் கவனம் செலுத்தாமல் உள்ளார். படத்தின் முதல் 10 நிமிடங்கள் படத்திற்கு தேவையில்லை என்றாலும் விஜய் ரசிகர்களுக்காக வைக்கப்பட்ட மாஸ் காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்காங்கே பல ஸ்போர்ட்ஸ் படங்களில் பார்த்த திரைக்கதை தான் இந்த படத்தில் இருக்கின்றது என்பதால் படம் முழுக்க ஒரு கட்டத்தில் சலிப்பு தட்டுகிறது

மொத்தத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பிகில், விஜய் ரசிகர்களுக்கு மட்டுமான படமாக உள்ளது

2.25/5

Leave a Reply