shadow

பழைய ஓய்வூதியத் திட்டமே மீண்டும் தேவை: நிபுணர் குழுவிடம் அரசு ஊழியர்கள் வலியுறுத்தல்

13
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டுமென, தமிழக அரசின் நிபுணர் குழுவிடம் அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து ஆராய ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் அறிக்கை

பெறப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், முதல்வர் அலுவலக சிறப்புப் பணி அலுவலர் சாந்தா ஷீலா நாயர் தலைமையிலான இந்த வல்லுநர் குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலகச் சங்கம் தனது கருத்தை முதலாவதாகப் பதிவு செய்தது.
சங்கத்தின் தலைவர் கணேசன், செயலாளர் வெங்கடேசன், இணைச் செயலாளர் மோகனவள்ளி, இணைச் செயலாளர் ஹரி சங்கர், பொருளாளர் மகேந்திரன் தலைமையிலான குழு நிபுணர் குழுவிடம் மனு அளித்தது.
பல்வேறு பிரிவினரின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசு ஒய்வூதியத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், இந்த நலத் திட்டங்களை எல்லாம் செயல்படுத்திவரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் ஏற்கனவே பெற்று வந்த ஒய்வூதியத்தை, 1.4.2003 முதல் புதியதாகப் பணியில் சேர்பவர்களுக்கு வழங்க இயலாது என்பது முற்றிலும் சமூகப் பாதுகாப்பிற்கு எதிரானது. அரசு ஊழியருக்கு முற்றிலும் கேடு விளைவிக்கும் திட்டமான பங்களிப்புடன் கூடிய புதிய ஒய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு, பழைய ஒய்வூதிய திட்டத்தினையே நடைமுறைப்படுத்த

வேண்டும் என்று தலைமைச் செயலக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதேபோன்று, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளன. வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு தொடங்கிய கருத்து கேட்புக் கூட்டம் மாலை 5.30 வரை நடைபெற்றது.

Leave a Reply