shadow

பத்தே நாட்களில் விவசாய கடன் தள்ளுபடி: ராஜஸ்தான் மக்களுக்கு வாக்குறுதி கொடுத்த ராகுல்காந்தி

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் வரும் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினர் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பத்தே நாட்களில் விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின்போது மேலும் அவர் கூறியதாவது:

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 15 தொழிலதிபர்களுக்கு மட்டும் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் வங்கிக்கடனை தள்ளுபடி செய்துள்ளது. இந்த தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் வேலையில்லாமல் இருக்கும் கோடிக்கணக்கான இளைஞர்கள் சுயதொழில்களை தொடங்கவும், அதன் மூலம் மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் வங்கிக் கடன்களை அளிப்போம்.

வாக்களர்களாகிய நீங்கள் எங்களை இங்கே ஆட்சியில் அமர வைக்கப் போகிறீர்கள். ஆட்சி அமைந்த பத்தே நாட்களில் விவசாயிகளின் வங்கிக்கடன்களை எங்கள் அரசு தள்ளுபடி செய்யும். இதற்கு முன்பு இதே வாக்குறுதியை கர்நாடகம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் அளித்திருந்தது. கொடுத்த வாக்குறுதியின்படி கடன்களை நாங்கள் தள்ளுபடி செய்திருக்கிறோம்.

நான் தவறான வாக்குறுதிகளை தர மாட்டேன். இந்த மேடையில் இருந்து நானோ, சச்சின் பைலட், அசோக் கேலாட் போன்றவர்கள் தரும் வாக்குறுதிகள் எதுவானாலும் அதை நிறைவேற்றியே தீருவோம்.

 

Leave a Reply