shadow

1அது ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி. பிரதமர் நரேந்திர மோடி ரூ.500, ரூ.1000 ஆகிய பணங்களின் மதிப்பை நீக்கி அறிவித்ததைத் தொடர்ந்து நடைபெற்றது. விவாதத்தின் ஒருங்கிணைப்பாளர் பங்கேற்பாளர்களைப் பார்த்து, இந்த அறிவிப்பு வந்த உடன் எந்தத் துறை பாதிக்கப்படும் என நினைத்தீர்கள் என்று கேட்டார். பங்கேற்பாளர்களில் ஒருவர் உடனடியாக ரியல் எஸ்டேட் துறை என்று சொன்னார். அது அதீதமான பதற்றமோ என்று தோன்றியது. ஆனால் அப்படி நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் மனதில் ஓர் எண்ணம் ஏற்படத்தான் செய்தது.

ஏனெனில், அதிகப்படியான ரொக்கப் பணம் புழங்கும் துறை இது. அதிலும் கறுப்பான பணம் தன் நிறத்தை வெள்ளையாக மாற்றிக்கொள்வதும் இந்தத் துறையில் மிகவும் சாதாரண நிகழ்வு என்பது அடித்தட்டு மனிதர்கள் வரை பரவியுள்ள செய்தி. அப்படி இருக்கும்போது, திடீரென்று நாட்டின் உச்சபட்ச மதிப்பு கொண்ட ரூ.500-ம், ரூ. 1000-ம் தம் மதிப்பை இழக்கும்போது ரியல் எஸ்டேட் துறையை அது பாதிக்கத்தானே செய்யும் என்ற எண்ணம் மனதில் நிலைபெற்றது.

மனதில் நிலைபெற்ற அந்த எண்ணத்துக்கு வலுச்சேர்ப்பதுபோல் ரியல் எஸ்டேட் தொடர்பான ஓர் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அடுத்த ஆறு மாதங்கள் முதல் ஓராண்டுக்குள்ளான காலகட்டத்தில் இந்தியாவிலுள்ள 42 நகரங்களில் வீடுகளின் விலை சுமார் 30 சதவீதம்வரை குறைய வாய்ப்பிருக்கிறது என்று புராப்ஈகுயிட்டி நிறுவனம் வெளியிட்டிருக்கும் அந்த ஆய்வறிக்கை ரியல் எஸ்டேட் துறையினரின் மனதைக் கலக்கியிருக்கிறது. இதனால், சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் இந்தத் துறைக்கு இழப்பு ஏற்படக்கூடும் என்றும் அது கணித்திருக்கிறது. இந்தப் பாதிப்பானது மும்பையில் அதிகமாகவும் அதைத் தொடர்ந்து பெங்களூரு, குர்கான் போன்ற நகரங்கள் இடம்பெறும் என்றும் அறிக்கை கூறுகிறது.

இந்த ஆய்வுக்காக இந்தியாவின் 42 நகரங்களில் சுமார் 22,202 கட்டுநர்கள் கையாளும் 83,650 கட்டுமானத் திட்டங்களின் விவரங்களைத் திரட்டியிருக்கிறது புராப்ஈகுயிட்டி நிறுவனம். இந்த 42 நகரங்களின் விற்கப்பட்ட, விற்கப்படாத குடியிருப்புத் திட்டங்களின் ஒட்டுமொத்த மதிப்பு 39,55,044 கோடி என்றால் அதில் 8,02,874 கோடி ரூபாய் குறைந்து அதன் மதிப்பு 31,52,170 கோடியாகிவிடும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட இந்த 42 நகரங்களில் 2008-ம் ஆண்டிலிருந்து சமீபத்தில் தயாராகியுள்ள, கட்டுமானம் நடைபெற்றுவருகிற அனைத்து கட்டுமானத் திட்டங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் மொத்தம் 49,42,637 அலகுகள் உள்ளன.

பண மதிப்பு நீக்க அறிவிப்பால் ஏற்படும் இந்தத் தாக்கம் ரியல் எஸ்டேட் துறையைப் பலமாகப் பாதிக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. ரியல் எஸ்டேட் துறையினருக்கு இது கவலை தரும் செய்திதான். ஆனால் வீடு வாங்க நினைப்பவர்களுக்கு இது மகிழ்ச்சி தரவே செய்யும். ஏனெனில் விலை குறைந்தால் வீடு வாங்க ஆசைப்படுவது சாமானியர்களின் எண்ணம்தானே. ஆனால் அவர்கள் நினைத்தது போல் வீடுகளை வாங்க இயலுமா அதற்கான பணத்தைப் புரட்ட இயலுமா என்பதை எல்லாமும் யோசிக்க வேண்டியதிருக்கிறது.

வங்கிக் கணக்கில் பணம் இருந்தாலும்கூட இப்போது வரை அதை நினைத்த உடன் எடுத்துவிட முடியாது என்பதே நிலைமை. இந்த நிலைமை மாறினால்தான் வீட்டை பணம் இருக்கும் வாடிக்கையாளர் வீட்டை வாங்க நினைத்தாலும் வாங்க முடியும் என்பதை மறந்துவிட முடியாது. இந்தப் பாதிப்பு என்பது குறுகிய காலம்தான் இருக்கும் என்றும் தொலைநோக்குப் பார்வையில் இதனால் பெரிய பாதிப்பு இருக்காது என்றும் அறிக்கை தெரிவித்திருக்கிறது என்பது ஓரளவு ஆறுதல் தரும் செய்தி. எது எப்படியோ இந்த நிலையிலிருந்து எப்படி மீண்டுவர வேண்டும் என்பதைக் குறித்து ரியல் எஸ்டேட் துறை யோசிக்க வேண்டிய தருணம் இது என்பதே யதார்த்தம்.

Leave a Reply