shadow

படிப்பறிவு இல்லாமலே பல்லாயிரக்கணக்கில் வருமானம்!

p92cடிகிரி முடித்தவர்கள், ‘ஆட்கள் தேவை’ பகுதியை நாளிதழ்களில் துழாவிக்கொண்டிருக்க… பள்ளிக்கூடம் செல்லாத ஒரு கிராமத்துப் பெண், மாதம் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்து அசத்திக்கொண்டிருக்கிறார்!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்திலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கொளப்பளூர் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுளா, தன் கடுமையான உழைப்பாலும் விடாமுயற்சியாலும் தேன் பண்ணையில் லாபம் ஈட்டிவரும் சுயதொழில் முனைவோர்.

‘‘நான் படிப்பு வாசனையே இல்லாதவங்க…’’ என்றுதான் பேச்சை ஆரம்பிக்கிறார் மஞ்சுளா. ‘‘எங்க தாத்தா தேன் பண்ணை வெச்சு சம்பாதிச்சுக்கிட்டு இருந்தாரு. அதனால அதைப் பத்தி கொஞ்சம் தெரியும். 18 வருஷத்துக்கு முன்னாடி எனக்குக் கல்யாணம் ஆனப்போ, வீட்டு வேலையைத் தவிர வேறெதையும் பத்தி யோசிக்காம இருந்தேன். என் வீட்டுக்காரர் பார்த்திபன்தான், ஒன்பது வருஷத்துக்கு முன்னாடி, ‘நீ தேனீ வளர்க்குறியா?’னு கேட்டாரு. பயமா இருந்தாலும், வருமானத்துக்கு ஒரு வழி கிடைக்குமேனு `சரி’னு சொன்னேன்.

இங்க பக்கத்துல தேனீ வெச்சிருந்தவங்க கிட்ட கொஞ்சம் தேனீக்களை வாங்கி, கன்னியாகுமரியில இருந்து பெட்டி வரவழைச்சு அதுல வளர்க்க ஆரம்பிச்சேன். வேலை கொஞ்சம் பிடிபடவும், இன்னும் கூடுதலா தேனீ வளர்க்கலாம்னு நம்பிக்கை வந்துச்சு. உடனே மார்த்தாண்டம்ல இருக்குற ஒரு தேனீ பண்ணையில ஒரு வார பயிற்சி எடுத்துக்கிட்டு, தேனீயும் வாங்கிட்டு வந்தேன். முழுநேரமா தேனீ வளர்ப்புல இறங்கினேன். ஆரம்பத்துல தேனீக்களிடம் கொட்டு நிறைய வாங்கியிருக்கேன். உடனே எங்க வீட்டுல இருந்தவங்க, ‘எதுக்கு இந்த தேவையில்லாத வேலை?’னு சத்தம் போட்டாங்க. ‘ஆரம்பிச்சாச்சு… இதை எப்படியும் நல்லபடியா நடத்திக் காட்டிடணும்’னு வைராக்கியத்தோட இருந்தேன்’’ என்று சொல்லும் மஞ்சுளா, ஒவ்வொரு அடியாக முன்னேறியிருக்கிறார்.

‘‘நான் வெச்ச பெட்டியில இருந்து தேன் எடுக்க ஆரம்பிச்சப்போ, அதை எப்படி விக்கறதுனு தெரியல. ஒரு தொண்டு நிறுவனம் மூலமா, ஈரோடுல இருக்கிற வேளாண் அறிவியல் மையத்துக்குபோய் சேர்ந்தேன். அங்கதான் மார்க்கெட்டிங் கத்துக்கிட்டேன். ஒரு கிலோ தேன் 250 ரூபாய்னு விக்க ஆரம்பிச்சப்போ, பெரிசா ஒண்ணும் லாபமில்லைன்னாலும் பரவாயில்லைனு தோணுச்சு.

தேனீக்கள் வளர்க்குறதுக்கு இந்தப் பகுதியில போதுமான பூக்கள் இல்ல. அதனால கன்னியாகுமரி, கேரளானு எங்கயெல்லாம் பூந்தோட்டம் இருக்கோ அங்கயெல்லாம் பெட்டியை கொண்டுபோய் வைப்பேன். அதன்மூலமா ஒரு பெட்டிக்கு 30 – 40 நாட்களுக்குள்ள ஆறு கிலோவில் இருந்து பத்து கிலோ வரைக்கும் தேன் கிடைக்கும்.

இந்தியன் தேனீ, இத்தாலியன் தேனீ, கொசுத்தேனீனு மூணு வகையான தேனீக்கள் இருக்குது. இதுல இத்தாலியன் தேனீகிட்ட இருந்து குறைவான தேன்தான் எடுக்க முடியும்ங்கிறதால, அதோட தேன் கொஞ்சம் விலை அதிகம். தேனீக்கள் ஜனவரி மாசத்துல இருந்து செப்டம்பர் மாசம் வரைக்கும்தான் தேன் சேகரிக்கும். அதுக்கப்புறம் மழைக்காலத்துல தேன் சேகரிக்க வெளியில போகாது. அந்த நேரத்துல இத்தாலியன் தேனீக்களுக்கு தேங்காய் சிரட்டையில வாரம் ஒருமுறை சக்கரைத்தண்ணியை உணவாக ்கொடுத்து பாதுகாத்து வெச்சுக்கணும். அப்புறம் டிசம்பர் மாசம் 25-ம் தேதி வாக்குல அதுக வெளிய கிளம்பிரும். அப்ப அந்த தேனீக்கள் பாக்ஸ்ல இருக்குற தேங்காய் சிரட்டையை எடுத்துடணும்.

தேனீக்களுக்கு 42 நாட்கள்தான் ஆயுள். அதுக்குப்பிறகு அந்த தேனீக்கள் வெளியிலபோய் செத்துரும். ஒண்ணு, ரெண்டு பாக்ஸுக்குள்ள செத்தாலும், மத்த தேனீக்கள் இறந்துபோன தேனீயை கொண்டுபோய் வெளியில போட்டுரும். ராணி தேனீக்கு ஒன்றரை முதல் மூன்று வருசம் ஆயுள். அதுக்குள்ள நாமதான் அதோட இனப்பெருக்கத்தை வெச்சு பெட்டிகளை அதிகப்படுத்திப் பாதுகாக்கணும்’’ எனும் மஞ்சுளா, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தேனீ வளர்ச்சி பயிற்சி வகுப்புகளும் எடுத்து வருகிறார்.

‘‘வெறும் ரெண்டு பெட்டியில தேனீ வளர்க்க ஆரம்பிச்சேன். எங்களோட ஒரு ஏக்கர் நிலத்திலும், பக்கத்துல இருக்குற விவசாய நிலத்திலும் இப்போ 400 பெட்டி வச்சிருக்கேன். இங்கேயே தேனை சுத்திகரிச்சு பாட்டிலில் அடைச்சு ‘மஞ்சரி டிரேட் மார்க்’ என்ற பெயர்ல விற்பனை செய்றதோட, தேனில் ஊறிய நெல்லிக்காய், நட்ஸ் போன்ற பொருட்களையும் விற்பனை செய்றோம். ஒரு கிலோ தேன் 380 ரூபாய்க்கு கொடுத்துட்டு இருக்கேன். மாசத்துக்கு 300 கிலோ தேன் எடுக்க முடியுது. பஸ் கண்டக்டர் வேலைபார்க்குற என் வீட்டுக்காரரால எனக்கு ரொம்ப உதவ முடியாதுங்குறதால, ரெண்டு பேரை வேலைக்கு வெச்சிருக்கேன். எல்லா செலவும் போக கைக்கு 50 ஆயிரத்துக்கும் மேல கிடைக்குது’’ என்றவர் அதைத் தன் பெருமையாகப் பேசாமல், பிறருக்கு வழிகாட்டலாகவும் பகிர்ந்ததில் இன்னும் உயர்ந்தார்…

‘‘விவசாயம் செய்ய நீர் இல்ல… ஆட்கள் இல்லனு மறுகுகிற விவசாயிங்க, அவங்க நிலத்துல பூச்செடிகளை வளர்த்து தேன் பெட்டிகள வெச்சு தேனீ வளர்த்தா நல்ல லாபம் கிடைக்கும். நிலம் இல்லாதவங்க குத்தகைக்கு நிலம் எடுத்தும் செய்யலாம். குறிப்பா, வீட்ல இருக்குற பெண்கள், சுயஉதவிக் குழுவா செயல்படும் பெண்களுக்கு இந்த தேனீ வளர்ப்பு நல்ல லாபத்தையும், முன்னேற்றத்தையும் கொடுக்கும்!’’

வெற்றியாளரின் வார்த்தைகள்!

Leave a Reply