shadow

பசுமைச் சுவர் பெற என்ன செய்ய வேண்டும?

கிராமங்களில், சிறு நகரங்களில் வீட்டுக்குள் தோட்டம் அமைப்பது வழக்கம். தங்கள் அன்றாடத் தேவைகளுக்கான காய்கறிகளைக் கொய்வதற்காக மட்டுமல்லாமல் வீட்டைப் பசுமையாக வைத்திருப்பதற்காகவும்தான் தோட்டம் அமைப்பார்கள். அந்தத் தோட்டத்தின் செடி, கொடிகள் அப்படியே வீட்டின் கூரை, சுவர்கள் வரை படர்ந்திருக்கும். சில வீடுகளில் செடி, கொடிகள் சுவர் முழுவதும் படர்ந்து ஆக்கிரமித்திருக்கும். இதனால் வீடு பசுமையாகக் காட்சியளிக்கும்.

வீட்டுக்குள்ளும் இதமான சூழ்நிலை நிலவும். கிராமங்களிலும், நகரங்களில் தோட்டங்கள் உள்ள வீடுகளிலும் இப்படித் தானாகப் படர்ந்த செடி, கொடிகள்தான் இன்று ‘கிரீன் வால்ஸ்’ என்ற பெயரில் ஹைடெக் தொழில்நுட்பமாகக் கட்டுமானங்களில் பின்பற்றப்படுகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் இந்தத் தொழில்நுட்பத்துக்குத் தனி மவுசு உள்ளது. அதுசரி, அதென்ன ‘கிரீன் வால்ஸ்’ தொழில்நுட்பம்?

கட்டுமானத்தில் பசுமையான முறையில் சுவர்கள் மற்றும் மேற்கூரைகளை அமைப்பது தான் கிரீன் வால்ஸ் தொழில்நுட்பம். எளிமையாக அகற்ற முடியும் என்பது இதன் சிறப்பு. இந்தத் தொழில்நுட்பத்தில் பசுமையான செடிகளை அமைக்கத் தொட்டி போன்ற கொக்கி அமைப்புகளைப் பயன்படுத்துகிறார்கள்.

இந்தத் தொழில்நுட்பத்தில் கட்டுமான சுவர்கள் மற்றும் கூரைப் பகுதிகளில் தாவரங்களைச் சுவரின் இருபுறமும் நடுகின்றனர். பசுமை இல்லங்களில் பயன்படுத்தும் தாவரங்களைத்தான் இதற்காகப் பயன்படுத்துகிறார்கள். சுவரில் துளை போட்டுத் தாவரங்களை நட முடியாது. தாவரங்களை நட்டுப் பராமரிப்பதற்காகக் கட்டுமானப் பணிகளின்போதே சுவர் மற்றும் கூரைகளில் மணல் அடுக்குகளை உருவாக்க வேண்டும். அதில்தான் தாவரங்களை நடுகிறார்கள்.

ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட வீடுகளிலும் இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த முடியும். இதற்குத் திருக்காணிகள் முறை போதுமானது. சுவரில் கொக்கி போன்ற அமைப்புகளைப் பயன்படுத்தி தொட்டி மூலம் தாவரங்களை வளர்க்கிறார்கள்.

மாடி வீடுகளிலும் வளர்க்கலாம்

தொட்டிகள் மட்டுமல்ல, இரும்புக் கம்பிகள், கண்ணாடி பிளாஸ்டிக், பிளாஸ்டிக் தொட்டிகளைக் கொண்டும் இந்த முறையில் செடிகளை வளர்க்கலாம். மழை, புயல் ஆகியவற்றையும் இப்படி வளர்க்கும் தாவரங்கள் தாங்கிக் கொள்கின்றன. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் அடுக்குமாடிக் கட்டிடங்களைக்கூடக் கட்டுகிறார்கள். இந்த முறையில் கட்டப்படும் வீடுகள் முழுவதும் பச்சைப் பசேலெனக் காட்சியளிக்கும்.

புதிதாக வீட்டைக் கட்டும்போதே கிரீன் வால்ஸ் முறையில் கட்ட முடிவுசெய்துவிட்டால், சில செலவுகள் மிச்சமும் செய்யலாம். அதாவது, வீட்டின் மூன்று பக்கங்களில் கிரீன் வால்ஸ் அமைத்தால் சிமெண்ட் பூச்சு, வண்ணம் பூசுவது மிச்சம். எனவே இதன் மூலம் கட்டுமானச் செலவையும் குறைக்க முடியும். சுவர்களும் கூடையும் பசுமையாக இருப்பதால், மேற்பரப்பு மிகவும் எளிமையாகக் குளிர்விக்கப்படுகிறது. எனவே வீட்டுக்குள்ளும் இந்தச் சூழல் நிலவும். வெப்பம் மிகுந்த நாட்களில் இந்தத் தொழில்நுட்பம் மிகவும் பயனளிக்ககூடியது.

Leave a Reply