shadow

பகவான் ஸ்ரீகிருஷ்ணரை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

krishnaகிருஷ்ணன், கண்ணன் என்றாலே ஒரு காலை மடித்து குழலூதும் கிருஷ்ணன், மாடுகளுடன் கிருஷ்ணன், யாசோதா கிருஷ்ணன், ராதே கிருஷ்ணன், ஆலிலை கிருஷ்ணன் என விதவிதமான காட்சிகள் நம் மனக் கண் முன்னே வரும். கீதோபதேச கிருஷ்ணரும், விஸ்வரூபதரிசனனும் கூட பலருக்கு மனதில் தோன்றும்.

கிருஷ்ண பக்தி நிறைந்த தேசம் நம் பாரதம். இவரை மகா விஷ்ணுவின் சக்தி வாய்ந்த அவதாரமாகவே மக்கள் கருதுகின்றனர். வழிபடுகின்றனர். கிருஷ்ண ஜெயந்தி இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் கோலாகலமான திருவிழா. இவரின் பிறப்பு, வாழ்க்கை காலமே இவற்றினை அறிவது நம் கண்ணுக்குத் தெரியாத ஓர் உயர் சக்தி இயக்கத்தினை புரிய வைக்கும். இவரது காலத்தினைப் பற்றிய ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி இவரது பிறப்பு கி.மு. 3228-ல் ஜூலை 19/20 எனக் கூறப்பட்டுள்ளது.

பண்டைய நூல்களின் படி பாரதத்தில் ஒரு அவதாரக் குழந்தை தேவகி, வசுதேவன் தம்பதியருக்கு ஜெயிலில் பிறந்தது. ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தது. இப்பிறப்பின் ரகசியம் அறிவோம்.

பூமா தேவியால் பூமியில் கொடுங்கோல் அரசர்களால் விளையும் தீமைகளையும், கொடுமைகளையும் தாங்க முடியவில்லை. எனவே பூமாதேவி பிரம்மனிடம் சென்று முறையிட்டாள். பிரம்மனும் பூமா தேவியும் மகா விஷ்ணுவிடம் சென்று உதவி வேண்டினர். மகா விஷ்ணுவும் அதர்மங்களை அழிக்க நானே பூமியில் அவதரிப்பேன் என்றார்.

அந்த கால கட்டத்தில் பூமியில் கம்சன் என்ற ஒரு கொடுங்கோல் மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். அவனால் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகினர். ஓர் முறை வானில் அசரீரீ ஒலித்தது. அது சொன்ன செய்தியாவது ‘கம்சனின் தங்கை தேவகிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தை கம்சனை கொல்லும்’ என்பதேயாகும். இதனைக் கேட்ட கம்சன் அஞ்சினார். ஒரு முனிவரும் அதே வார்த்தைகளை உறுதி படுத்தினார். கம்சன் தன் தங்கை தேவகியையும் அவளது கணவன் வசுதேவனையும் சிறையிலிட்டான். முதலில் பிறந்த ஆறு குழந்தைகளையும் கொன்றான்.

ஏழாவதாய் உருவான கரு வயிற்றில் ஏழாவது மாதத்தில் மற்றொரு தாயின் வயிற்றுக்கு இறை சக்தியால் மாற்றப்பட்டது. அக்குழந்தையே முன்னால் பலராமனாக கிருஷ்ணரின் மூத்த சகோதரர் ஆனது. தேவகியின் வயிற்றில் எட்டாவது குழந்தை உருவானது. மகா விஷ்ணு தேவகி, வசுதேவன் முன்பு காட்சி அளித்து நானே உங்கள் எட்டாவது மகனாக பிறப்பேன் என்றார். குழந்தையும் பிறந்தது. தன்னை கோகுலத்தில் உள்ள யசோதை, நந்த கோபனிடம் வளர்த்து அங்குள்ள பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்து விடுமாறு இறைவன் கூற வசுதேவனும் அவ்வாறே செய்தார்.

கிருஷ்ணர் யசோதையிடம் சேர்ந்தார். பெண் குழந்தை தேவகியிடம் வளர்ந்தது. பெண் குழந்தையினை கொல்ல கம்சன் முனைந்த பொழுது குழந்தை வானில் விஸ்வரூப துர்க்கையாய் மாறியது. கம்சனைப் பார்த்து உன்னை கொல்லக் கூடியவன் கோகுலத்தில் இருக்கின்றான். உன்னால் என்னை கொல்ல முடியாது எனக் கூறி தெய்வம் மறைந்தது.

கோகுலத்தில் ஸ்ரீகிருஷ்ணர் வளர்ந்தார். அவர் வாழ்வு முழுவதும் சம்பவங்களும், பிரமிப்புகளும் தான் நிகழ்ந்தன. மிகச் சிறு குழந்தையாக இருந்த பொழுதே தன்னை கொல்ல வந்த அரக்கி புட்டனாவினை அழித்தார். பாலகிருஷ்ணனாய், வெண்ணை திண்ணும் கிருஷ்ணனாய் கோகுலத்தினை மயங்க வைத்தார். வெண்ணை உண்ட தன் வாயினை யசோதா திறந்து காட்டு என்ற பொழுது வாயில் அண்ட சாரங்களையும் கண்டு விக்கித்துப் போக வைத்தார். தீய காளிங்க நாகத்தினை அடக்கி யமுனை நதியினை காத்தார்.

கொட்டும் கடும் மழை, புயலில் கோவர்த்தன மலையினை தன் ஒற்றை விரலால் தூக்கி மக்களுக்கு குடையாய் பிடித்தார். மாமன் கம்சனை அழித்தார். கிருஷ்ணரின் வாழ்வு முழுவதும் அதர்மத்தினை எதிர்த்து அழிப்பதுதான் வேலையாக இருந்தது. குருஷேத்திர யுத்தத்தில் அர்ஜூனன் மனவலிவு இழந்த போது கிருஷ்ணர் அருளிய ‘கீதோபதேசம்’ எக்காலத்திற்கும் மனிதனுக்கும் பொக்கிஷம். இந்த உபதேசம் அர்ஜூனனுக்கு மட்டுமல்ல. ஒட்டு மொத்த மனித சமுதாயத்திற்கும் ஆனது. யுத்த முடிவில் கவுரவர் அழிந்தனர். பாண்டவர் வெற்றி பெற்றனர்.

கிருஷ்ணர் ராஜாவாக பல காலம் ஆட்சி செய்தார். கிருஷ்ணர் கி.மு.3102-ம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று தன் உடலை நீங்கினார் என சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

* கிருஷ்ணருக்கு மனைவிமார்கள், மக்கள் அநேகர் இருந்தனர். என்றாலும் ராதையின் பக்தியின் உயர்வினைக் கொண்டு அவர் ராதே கிருஷ்ணா என்றே குறிப்பிடப்படுகின்றார்.

* கிருஷ்ணர் தனது குரு சன்டிபானியின் இறந்த மகளை உயிர்பித்தவர். இதனை தன் குருவிற்கு குருதட்சனையாக செய்தவர்.

* கம்சனால் கொல்லப்பட்ட தேவகி, வசுதேவனின் குழந்தைகளை உயிர் பெறச் செய்தவர்.

* தனக்கு சிவன் போல்பிள்ளை வேண்டுமென தவம் இருந்தவர்.

* கீதோபதேசத்தினை முதலில் கேட்டது அர்ஜூனன் மட்டுமல்ல. பாண்டவ கொடிசின்னத்தில் இருந்த ஆஞ்ச நேயரும், பாரதப்போரை த்ரிதுராஷ்டிரனுக்குச் சொல்லிக் கொண்டிருந்த சஞ்சயனும் ஆகும்.

* பாண்டவர்களின் தாய் கிருஷ்ணனின் அத்தை குந்தி தேவி கிருஷ்ணரின் தந்தை வசுதேவனின் சகோதரி.

* கிருஷ்ணரே கர்ணனிடம் முதலில் அவன் பிறப்பின் ரகசியத்தினைக் கூறுகின்றார்.

* மகாபாரதத்தில் கிருஷ்ணர் ஆயுதம் ஏந்தி யுத்தம் புரியவில்லை.

* கிருஷ்ணரின் கையில் உள்ள ஆயுதம் சுதர்சன சக்கரம்.

* சிசுபாலனை கொல்வதற்கு முன்னால் 100 முறை கிருஷ்ணர் அவரை மன்னித்தார்.

Leave a Reply