நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் கூறிய புறநானூறு பாடலும் அதன் விளக்கமும்

இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புறநானூற்று பாடல் ஒன்றை வாசித்தார். அந்த பாடலும், அதன் விளக்கத்தையும் த?ற்போது பார்போம்

பாடல்:

காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே
மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
5 அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
10 யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே

விளக்கம்:

விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், ஒருமா அளவுகூட இல்லாத நிலத்தில் விளைந்த நெல்கூட பல நாட்களுக்கு யானைக்கு உணவாகும். ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால் , யனை தின்பதைவிட யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும். அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும். அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்பினால், யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடையாமல் உலகமும் (தன் நாடும்) கெடும்.

பட்ஜெட் தாக்கல் செய்த தினத்தில் ‘வரி’ குறித்து மிகப்பொருத்தமான பாடலை தேர்வு செய்து அமைச்சர் கூறியதாக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Leave a Reply