shadow

தேக்கமடைகிறதா கட்டுமானத் தொழில்

1ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு, ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாகப் பாதித்திருக்கிறது. கறுப்புப் பணம் அதிகம் புழங்குவதாகக் கருதப்படும் ரியல் எஸ்டேட் துறையை இந்த அறிவிப்பு விட்டுவைக்குமா? ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு, ரியல் எஸ்டேட் துறையில் சில சாதக, பாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்களிடம் பொதுவாகப் பேசப்பட்டதிலிருந்து திரட்டப்பட்ட தகவல்கள் இதோ:

பணிகளில் தேக்கம்

கடந்த சில ஆண்டுகளாகக் கட்டிய வீடுகளை விற்க முடியாமல் ரியல் எஸ்டேட் துறை தடுமாறி வருகிறது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு மூலம் புதிதாக வீடுகளை வாங்க உத்தேசித்துள்ளவர்களும் அந்த முடிவைக் கைவிட்டுவிடுவார்கள். ஏனென்றால் ரொக்கத்தைக் கையாள்வதில் தற்போது கட்டுப்பாடு உள்ளதால், இந்தச் சூழ்நிலையில் யாரும் வீடு, மனை வாங்க விரும்ப மாட்டார்கள். கட்டுமானக் கூலிகளுக்குச் சம்பளம், தினசரிச் செலவு என ரொக்கம் அதிகம் புழங்கும் துறை ரியல் எஸ்டேட்.

புதிய அறிவிப்பு கடிவாளமாக வந்துவிட்ட நிலையில், வீட்டுக் கட்டுமானப் பணிகளில் தொய்வு ஏற்படலாம். கட்டுமானத் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும். இன்னொருபுறம் கட்டப்படும் வீடுகளை வாடிக்கையாளர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படும். அதேசமயம் நேரடி ரொக்கத்தைத் தவிர்த்து வீட்டுக் கடன்கள் மூலம் பெறப்படும் நிதிப் பரிவர்த்தனைகள் 90 சதவீதம் அளவுக்குக் குறைய வாய்ப்பிருக்காது.

திண்டாட்டம்

அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து வீடு வாங்குவது தொடர்பான விசாரிப்புகள்கூடப் பெருமளவு குறைந்துவிட்டதாக ரியல் எஸ்டேட் துறையினர் சொல்கிறார்கள். புதிதாக வீடு வாங்குவதற்கான முன்கூட்டிய பதிவும் முற்றிலும் குறைந்துவிட்டது. குறிப்பாக மனை விற்பனை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. பரிவர்த்தனைகள் அப்படியே நின்றுவிட்டதால் தரகர்கள் பொறுத்திருந்து பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

குறையும் விலை

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பிறகு நாடு முழுவதும் பல இடங்களில் கணிசமான அளவு வீடுகளின் விலை குறைந்துள்ளது. டெல்லி, குர்ஹான் மண்டலத்தில் சுமார் 25 சதவீதம் வரை வீடுகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. எதிர்காலத்தில் இந்த வீழ்ச்சி 40 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மனைகளின் விற்பனையும் இதேபோல வீழ்ச்சியடைந்துள்ளது. வீடு, மனைகளின் விலை வீழ்ச்சியை வாடிக்கையாளர்கள் வரவேற்கும் நிலையில், புரோமோட்டர்கள் கவலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

பங்குச் சந்தையில் வீழ்ச்சி

மோடியின் அறிவிப்புக்குப் பிறகு பங்குச் சந்தைகளில் ரியல் எஸ்டேட் பங்குகளும் குறையத் தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக ரியல் எஸ்டேட்டில் அதிகப் பங்குகளை வைத்திருக்கும் டி.எல்.எஃப்., ஓப்ராய், இந்தியா புல்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகம் வீழ்ச்சியடைந்துள்ளன. இந்த நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் துறையில் பெரும் முதலீட்டைச் செய்துள்ளன. எனவே இந்த நிறுவனங்கள் நஷ்டத்துக்கு ஆளாகலாம் என்கிறார்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்கள்.

விரைவான அனுமதி

ரியல் எஸ்டேட் துறையினர் எதிர்கொள்ளும் முக்கியமான சவால்களில் ஒன்று, வீட்டுத் திட்டங்களுக்கு அரசு அதிகாரிகளிடமிருந்து அனுமதி வாங்குவது. திட்டங்களுக்கு அனுமதி பெறுவதில் பெரிய அளவில் லஞ்சம் கைமாறும். இந்த அறிவிப்பின் மூலம் இந்தத் துறையில் இதுபோன்ற குற்றங்கள் நடப்பது குறையும் என்கிறார்கள் இந்தத் துறையில் நீண்ட காலம் உள்ளவர்கள். இதன் மூலம் திட்டங்களுக்கு விரைவாக அனுமதி கிடைத்து, திட்டங்களை விரைந்து முடிக்க வாய்ப்பும் ஏற்படும்.

அதிகரிக்கலாம் முதலீடு

கறுப்புப் பண ஒழிப்பின் மூலம் அந்நிய நேரடி முதலீடு இந்திய ரியல் எஸ்டேட் துறையில் விரைவில் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கறுப்புப் பணம் புழங்கும் துறை என்ற முத்திரையின் காரணமாக, இந்தத் துறையில் முதலீடு செய்யப் பலரும் அச்சம் அடைந்திருப்பார்கள். ஆனால், இந்தத் துறையில் முதலீட்டாளர்கள் மத்தியில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்பட்சத்தில் முதலீடும் அதிகரிக்கலாம்.

Leave a Reply