shadow

தெய்வச் சிலைகளை பிரதிஷ்டை செய்வது எப்படி?

temple‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பார்கள். தங்களின் மனக்குறைகளையும், ஆதங்கங்களையும், தங்களது பிரார்த்தனைகளையும் சொல்வதற்கு சொந்தமாகவோ அல்லது பொதுவாகவோ ஒரு கோயிலைக் கட்ட வேண்டும் என்ற ஆவல் மனிதர்களுக்கு நிச்சயம் இருக்கும்.

அப்படி கோயில் கட்ட வேண்டுமென்றால், அதற்கு பிரதிஷ்டை செய்ய வேண்டிய சிலைகள் நல்ல முறையிலும், விதவிதமாகவும் எங்கு கிடைக்கும் என்னும் கேள்வி நம் முன்னால் வந்து நிற்பது இயற்கை. ஆனால், அது பற்றி எந்தக் கவலையும் படதேவையில்லை என்று சொல்லும் வண்ணம் திரும்பிய பக்கமெல்லாம் சிலைகளும், சிலைகளை வடிக்கும் சிலைக்கூடங்களுமாக காட்சியளிக்கிறது வரலாற்றுச் சிறப்பு மிக்க மாமல்லபுரம்.

அங்கே சிற்பக் கூடம் ஒன்றை நிறுவி சிற்பங்களை வடித்துத் தருகிறார் க்ரியேட்டிவ் பாஸ்கர். கல்லிலே கலைவண்ணம் காணும் சிற்பியாக இருந்தாலும், ஒரு சாதாரண தொழிலாளியைப்போல் தன் சகாக்களோடு சிலைகளை வடிக்கும் பணியில் இருந்த க்ரியேட்டிவ் பாஸ்கரை சந்திதோம்.

அவருடன் நாம் மேற்கொண்ட நேர்காணலில் இருந்து….

சிற்பக்கல்லூரியில் சேர வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?

எனக்கு சொந்த ஊர் அம்மாப்பேட்டை. ரெண்டு அண்ணன், ஒரு அக்கா, ஒரு தம்பி. நான் கொஞ்சம் சரியா படிக்க மாட்டேன். அதனால, இங்க சிற்பக் கல்லூரியில சேர்ந்து டிப்ளமோ படிச்சிட்டு. பி.எஃப்.டி.ஐ படிக்க ஆரம்பிச்சிட்டேன். படிப்பு முடிஞ்சதும், எங்க மாமாகிட்ட கொஞ்ச நாள் வேலை பார்த்தேன். அப்போ அவரைப் பார்க்க விக்டர் லேண்டர்ங்கிற வெளிநாட்டுக்காரர் வந்தார். அவருக்கு இங்கிலாந்து நாட்டின் ஒரு பகுதியான அயர்லாந்துல ஒரு ‘பார்க்’ அமைக்க வேண்டி இருந்துச்சு.

விக்டோரியா ஸ்கொயர்ங்கிர அந்த பார்க்கில வைக்கிறதுக்காக 8 அடி 6 அடி உயரத்துல விநாயகர் சிலைகள் செய்யவேண்டி இருந்தது. கிட்டதட்ட அவருடைய பார்க்கில் வைக்கிறதுக்காக ஏழு விநாயகர் சிலைகள் மற்றும் ஃபாஸ்ட்டிங் புத்தர் சிலை, 16 அடி உயரத்துல ஒரே ஒரு விரல் சிலை என பல சிலைகளை அந்தப் பார்க்கில் அமைத்தோம். இதில் விநாயகர் தபேலா வாசிப்பது, கிதார் வாசிப்பது, புல்லாங்குழல் வாசிப்பது என பல விதமான ரூபங்களில் வடிவமைத்தேன். இதற்கு முன்பு யாரும் இப்படி வித்தியாசமான வடிவங்களில் விநாயகர் சிலைகளை வடிவமைக்க வில்லை.

இந்த சிலைகளை வடிவமைக்க கிட்டதட்ட 16 ஆண்டுகள் ஆயிற்று. ஃபாஸ்டிங் புத்தர் சிலை (உண்ணா நோன்பிருக்கும் புத்தர் சிலை) பாகிஸ்தான் மியூசியத்துல இருக்கு அதை அப்படியே பெரியளவுல வடிவமைச்சேன்.

உங்களுக்கு வர்ற ஆர்டர்கள் எப்படி…? எந்த மாதிரியான சிலைகள் உங்களிடம் அதிகம் விற்பனையாகுது?

அடிக்கடி ஆர்டர் வரும்னு சொல்ல முடியாது. எனக்குனு ரெகுலர் கஸ்டமர்ஸ் இருக்காங்க. அவங்க கொடுக்கிற ஆர்டர்களுக்கு ஒர்க் பண்ணிக் கொடுக்கவே சரியா இருக்கு. ரொம்ப அதிகமா விற்பனையாகிறது விநாயகர் மற்றும் புத்தர் சிலைகள்தான்.

சிலைகள் எல்லாவற்றையும் நீங்களே வடிவமைக்கிறீர்களா?

நான் மட்டும் இவ்வளவு பெரிய வேலைகளைச் செய்துவிட முடியாது. நான் ஒரு அவுட் லைன் போட்டு தருவேன். என்னுடன் பணிபுரியும் சிற்பிகள் அதையொட்டி வடிவமைப்பார்கள். ஒவ்வொரு நிலையிலும் அவற்றைக் கண்காணித்து வருவேன். என்கிட்ட 60 சிற்பிகள் இருக்காங்க. அவங்களுக்கு கேன்டீன் வசதியும் செய்து இருக்கிறோம். இது தொழில் கிடையாது. அவங்க எல்லாரும் கலைஞர்கள். ரொம்ப சென்சிட்டிவானவங்க. அதனால அதட்டியெல்லாம் வேலை வாங்க முடியாது. அவங்க மனசும் உடம்பும் மகிழ்ச்சியா இருந்தாதான் ஒரு கிரியேட்டிவ் மூடோட வேலை பார்க்க முடியும்.

சிலைகளை வடிக்க கல்லைத் தேர்வு செய்யும் விதம் பற்றி சொல்லுங்கள்?

காஞ்சிபுரம், சித்தாமூர் மற்றும் சங்கரபுரம் பகுதிகளிலிருந்து கிடைக்கும் கருங்கல்லில்தான் சிலைகளை வடிக்கிறோம். இந்த வகை கல்லில்தான் மேட் ஃபினிஷிங் போன்று அப்படியே செதுக்கலாம். சிலைகளின் உடை, உடல் அலங்காரங்களை வேறுபடுத்திக் காட்ட முடியும். கல்லின் உடல் பகுதியைத் தேய்க்கத் தேய்க்க கருமை நிறமாகவும் உடை மற்றும் ஆபரணங்களை மேட் ஃபினிஷிங்கில் அப்படியேவும் செதுக்கிட முடியும். இதனால் சின்னச்சின்ன நுட்பமான நகை அணிகலன்களைச் செதுக்க முடியும்.

கோயில் ஒன்றுக்கு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்றால், எத்தனை நாளில் பணியை முடிப்பீர்கள்? எவ்வளவு செலவாகும்?

அது அவர்களுக்குத் தேவைப்படும் சிலைகளைப் பொறுத்தது. உதாரணமாக 3 அடி உயர விநாயகர் சிலையை கிட்டத்தட்ட 30 நாட்களில் செய்து தருவோம். இப்போதைய நிலவரம் 90 ஆயிரம் ரூபாய் வருகிறது.

கோயிலில் தெய்வ சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு முன் செய்யவேண்டியவைகள் என்ன?

பண்டை நாட்களில் பொதுவாக சிலைகளை எங்களிடம் இருந்து பெற்றுச் சென்றதும், 48 நாட்கள் தண்ணீரில் வைத்திருப்பார்கள். அதன் பிறகு தானியங்களில் 48 நாட்கள் வைத்திருப்பார்கள். அதன்பிறகு 48 நாட்கள் துணியில் வைத்திருப்பார்கள். ராஜாக்கள், பிரபுக்கள், செல்வந்தர்கள், தங்கத்தில் காசுகளில் வைத்திருப்பார்கள். அதன் பிறகு, பிரதிஷ்டை செய்வார்கள்.

தெய்வச் சிலைகளில், ‘கண்திறப்பு நிகழ்ச்சி’ என்பது மிக முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இது எப்போது நடைபெறும்?

கும்பாபிஷேகத்துக்கு 2 நாட்கள் முன்பாக கண் திறப்பார்கள். இந்த நிகழ்ச்சி நடைபெறும் வரை சிலையில் எந்தவிதத்திலும் பின்னப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உளியினால் சிற்பத்துக்கு கண்பார்வை வரச்செய்வோம். இது 10 முதல் 15 நிமிடங்களில் முடிந்துவிடும். அதன் பிறகு அந்த அந்த தெய்வங்களுக்குரிய பீடத்தில் பிரதிஷ்டை செய்வார்கள். அதன் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறும்.

முழுக்க முழுக்க நீங்கள் வடித்த சிலைகளே இடம் பெற்றுள்ள கோயில் ஒன்றை சொல்லுங்கள்…?

சென்னை , மாடம்பாக்கம் சேஷாத்ரி சுவாமிகள் திருக்கோயில்.

Leave a Reply