shadow

தளம் புதிது: கிறுக்கலை ஓவியமாக்கும்

கூகுள் தளம் நீங்கள் வரையும் கோடுகளை ஓவியமாக்கித் தருவதற்காகக் கூகுள் நிறுவனம் சுவாரசியமான இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ‘ஆட்டோடிரா’ எனும் அந்தத் தளம், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கிறுக்கல்களைக்கூட அழகான சித்திரங்களாக மாற்றிக்காட்டுகிறது.

இணையத்தில் ஆட்டோகரெக்ட் எனும் வசதியை நீங்கள் அறிந்திருக்கலாம். குறிப்பிட்ட வார்த்தையை டைப் செய்யத் தொடங்கும்போதே, அது எந்த வார்த்தையாக இருக்கலாம் எனும் அனுமானத்தில் தொடர்புடைய வார்த்தை முன்வைக்கப்படும். பொருத்தமான வார்த்தை எனில், அதையே தேர்வு செய்து கொள்ளலாம். ஸ்மார்ட்ஃபோனிலும் இந்த வசதியைக் காணலாம்.

ஏறக்குறைய இதே வசதியைக் கூகுள் இப்போது சித்திரங்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இதற்கான உருவாக்கப்பட்டுள்ள ஆட்டோடிரா தளத்தில் உள்ள டிஜிட்டல் பலகையில் தூரிகையைத் தேர்வு செய்து வரையத் தொடங்க வேண்டும். உருவத்தை வரையும்போது, தளம் அதன் போக்கை ஊகித்து, தொடர்புடைய சித்திரங்களைப் பரிந்துரைக்கும். பொருத்தமானதைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

உதாரணத்துக்கு, பறவைக்கான மூக்கை வரைந்தால் அழகான பறவை சித்திரத்தைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

நாம் வரையும் கோடுகளுக்கு ஏற்ப முழு சித்திரங்களுக்கான பரிந்துரை, மேலே தோன்றிக்கொண்டே இருக்கின்றன. மிகவும் சுவாரசியமான சேவை. அவசரமாக ஏதேனும் வரைய வேண்டும் எனில், இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இணைய முகவரி: //www.autodraw.com/

Leave a Reply