shadow

தமிழ்ப் பல்கலை.யுடன் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம்: யாழ் பல்கலை. துணைவேந்தர் பேட்டி

tamil universityதஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்படவுள்ளது என்றார் இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வசந்தி அரசரத்தினம்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் பங்கேற்ற பிறகு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு மாணவர்களின் எண்ணிக்கை 3,500 ஆக இருந்தது. போருக்குப் பிறகு மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. இப்போது, ஏறத்தாழ 8,500 பேர் படிக்கின்றனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உள்ள 10 புலங்களில் 54 துறைகள் இடம்பெற்றுள்ளன. இதில், மூன்றாண்டு காலப் பொறியியல் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. அடுத்து, பொறியியல் மற்றும் உயிரித் தொழில்நுட்பவியல் துறை தொடங்கப்பட்டு, இப்போது மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

கலைப் புலத்தில் தமிழ்வழியில் மொழிபெயர்ப்புக் கல்வி, ஊடகக் கல்வி போன்ற படிப்புகள் அண்மையில் தொடங்கப்பட்டன. அடுத்து, சுற்றுலா குறித்த படிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்தியாவில் மைசூருவில் உள்ள மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். அடுத்து, தமிழ், மொழியியல் துறைகள் தொடர்பாக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதற்குப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் ஒப்பந்தம் செய்துகொள்ளப்படவுள்ளது என்றார் அவர்.

Leave a Reply