shadow

2தீபாவளி பண்டிகை விற்பனையில் ஆன்லைன் நிறுவனங்களும், நேரடி வர்த்தக நிறுவனங்களும் மும்முரமாக இருந்த நேரத்தில் ஆன்லைன் தங்க நகை வர்த்தக நிறுவனமான புளூஸ்டோன் பெங்களூருவில் ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. அந்த முயற்சிக்கு கிடைக்கும் வரவேற்பு எப்படி இருக்கும் என்பது அடுத்த சில மாதங்களில் தெரிந்துவிடும். ஆனால் அந்த முயற்சி இந்திய மக்களின் தங்க நகை மோகத்துக்கு பலன் கொடுக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம். அது என்ன முயற்சி என்கிறீர்களா… தங்கக் காசு ஏடிம்.

வங்கிக்கு நடையாய் நடந்து தேய்ந்த கால்களுக்கு ஓய்வு கொடுத்தவை ஏடிஎம் இயந்திரங்கள். ஏடிஎம் இயந்திரங்கள் வந்த பிறகு வாடிக்கையாளர்களுக்கு நேரமும் மிச்சமானது. இதைப் பின்பற்றி பணம் செலுத்தும் இயந்திரங்கள், காசோலை இயந்திரங்கள் எல்லாம் வந்தன. வங்கிச் சேவையின் ஒரு பகுதியாக தங்கக் காசுகள் விற்கவும் செய்கின்றன சில வங்கிகள்.

அந்த தேவையை நிறைவு செய்யவும், அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு எப்போது வேண்டுமானாலும் தங்கக் காசுகளை அளிக்கும் ஏடிஎம் இயந்திரங்களாக இவை செயல்பட உள்ளன. தற்போது பெங்களூருவில் இந்த இயந்திரத்தை ஆன்லைன் தங்க நகை விற்பனை நிறுவனமான புளூஸ்டோன் நிறுவியுள்ளது. பணத்தின் மதிப்புக்கு தங்கக் காசுகளை இந்த இயந்திரம் கொடுக்கும். இந்த தீபாவளி பண்டிகையையொட்டி இந்த ஏடிஎம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பணம் கொடுக்கும் ஏடிஎம் இயந்திரத்தைப் பயன்படுத்துவது போலவே எளிதாக இதை பயன்படுத்தலாம்.

பண்டிகை நாள்களில் தங்கம் வாங்கினால் அதிர்ஷ்டம் என்று நம்புபவர்கள் பலரும் தீபாவளி அன்று நகைக் கடைகளுக்குச் செல்வார்கள். அட்சய திருதியை அன்று நகைக்கடைகளில் சொல்லொண்ணா கூட்டம் கூடுகிறது. இதனால் இது போன்ற நம்பிக்கை அல்லது தேவைகளுக்கு இனிமேல் நகைக் கடைகளை தேடி அலைய தேவையில்லை. தங்கக் காசுகளை இந்த இயந்திரத்தில் எடுத்துக் கொள்ளலாம். இதனால் நேரமும் அலைச்சலும் மிச்சம். தவிர ரொக்கமாகவும், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாகவும் பணம் செலுத்தும் வசதியும் உள்ளன.

ஒரு கிராம் முதல் 20 கிராம் வரையிலான தங்கக் காசுகள் கிடைக்கும். 1 கிராம், 2 கிராம், 5 கிராம், 10 மற்றும் 20 கிராம் மதிப்புகளில் வாங்கலாம். தங்கத்தின் அன்றைய சந்தை மதிப்பில் விலை கணக்கிடப்படும். அத்துடன் தங்கத்தின் தூய்மை மற்றும் நேர்மைத்தன்மை குறித்த சான்றிதழையும் உடனடியாக இந்த இயந்திரம் அளித்து விடும்.

அதுபோல விலையும், தங்க நகை நேரடி விற்பனையோடு போட்டி போடுவதாக இருக்கும் என்று புளூ ஸ்டோன் தலைமைச் செயல் அதிகாரி அர்விந்த் சிங்கால் குறிப் பிட்டுள்ளார். பெங்களூருவில் நிறுவப்பட்டுள்ள இந்த இயந்திரத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இதர நகரங்களிலும் தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே துபாய் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த ஏடிஎம் இயந்திரங்கள் இருந்தாலும், இந்தியாவில் தங்கம் வாங்குவது என்றால் அதற்கு நகைக் கடைகள்தான் நம்பகமான இடம் என்கிற பொதுவான கருத்து உள்ளது. அல்லது டிசைன்களைப் பார்த்த பிறகுதான் விற்பனை நடக்கும். ஆனால் தங்கக் காசுகளுக்கு அதிலிருந்து விதிவிலக்கு உண்டு. அதிர்ஷ்டமோ, முதலீட்டு நோக்கமோ தங்க காசு சேர்ப்பது என்று வந்துவிட்டால் நம்பிக்கையான தங்கம் ஏடிஎம் மெஷினில் கிடைத்தால் வேண்டா மென்றா சொல்லப் போகிறோம்?

Leave a Reply