shadow

டெமோ-வைத் தொடர்ந்து பி டி டி?

ராண்டை பூர்த்தி செய்திருக்கிறது Demonitisation (demo-டெமோ) எனப்படும் பண மதிப்பு நீக்க நடவடிக்கை. அடுத்தது என்ன அதிரடி குண்டை வீசப்போகிறாரோ என்ற அச்சத்தில் காத்திருக்கின்றனர் மக்கள்.

கடந்த வாரம் கோவாவில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பணமதிப்பு நீக்க நடவடிக்கை அதாவது டெமோ, கறுப்புப் பணத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட நடவடிக்கையே. அடுத்து surgical strike – எனப்படும் துல்லியத் தாக்குதல் மேற்கொள்ளப்படும்,’’ என்று அறிவித்திருக்கிறார்.

மோடியின் அடுத்த நடவடிக்கை பி டி டி யாக இருக்கலாம் என சிலர் தெரிவிக்கின்றனர். வங்கி பரிவர்த்தனை வரி (Banking Transaction Tax) என்பதன் சுருக்கம்தான் பி டி டி.! ஏற்கெனவே உள்ள அனைத்து வரி விதிப்புகளுக்கும் மாற்றாக பி டி டி யைக் கொண்டு வரலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதைப் பரிந்துரைத்தவர் புணேயைச் சேர்ந்த அனில் போகில் என்ற பொறியியல் பட்டதாரி.

பொருளாதார நிபுணர்கள் பலர் இருக்க பொறியியல் பட்டதாரி, அதுவும் அரசில் எவ்வித பொறுப்பிலும் இல்லாத ஒருவர் பரிந்துரைப்பதையா பிரதமர் செயல்படுத்துவார் என்ற கேள்வி அனைவருக்கும் எழுவது நியாயமே.

யார் இந்த அனில் போகில்?

புணேயைச் சேர்ந்த இவர், `அர்த்தகிராந்தி’ எனும் தன்னார்வ அமைப்பை செயல்படுத்தி வருகிறார். பாஜகவுக்கு நெருக்கமான இந்த அமைப்பு 1999-ம் ஆண்டு பி டி டி முறையை செயல்படுத்தலாம் என்று ஆலோசனை வழங்கியது. அடுத்து 2014-ம் ஆண்டு பொதுத்தேர்தல் சமயத்தில் அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை சந்தித்து, பாஜகவின் தேர்தல் அறிக்கையில் முக்கியமாக இடம்பெற்றிருந்த கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான யோசனையை முன்வைத்தது. சுமார் ஒரு மணி நேரம் அனில் போகில் குழுவினருடன் ஆலோசனை நடத்தியுள்ளார் மோடி. இக்குழு அப்போது பரிந்துரைத்ததுதான் கடந்த ஆண்டு அமலுக்கு வந்த பணமதிப்பு நீக்கம் என்கிற டெமோ.

இதனால்தான் கோவாவில் பிரதமர் குறிப்பிட்ட துல்லியத் தாக்குதல் பி டி டி- யாக இருக்குமோ என்ற எண்ணம் வலுப்பெற்றுள்ளது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மட்டுமே கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை முழுமை பெற்று விடாது என்று பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் ஓராண்டு நிகழ்ச்சியில் பேசுகையில் அனில் போகில் குறிப்பிட்டுள்ளார். டெமோ-வுடன் ஐந்து அம்ச செயல் திட்டங்களை வகுத்துத் தந்ததாகவும் அதில் ஒன்றுதான் பி டி டி என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது மேற்கொள்ளப்பட்டது பணமதிப்பு நீக்க நடவடிக்கையே அல்ல. இது கரன்சிகளின் புழக்கத்தை சீராக்கும் நடவடிக்கை (de-currencyfication) என்கிறார் அனில் போகில்.

நாட்டிலுள்ள மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர். உயர் மதிப்பிலான ரூ. 500 மற்றும் ரூ. 1,000 நோட்டுகளின் புழக்கம் 85 சதவீத அளவுக்கு இருந்தது. இதனால் பணப் புழக்கம் அதிகரித்தது. இது ஊழலுக்கும், கறுப்புப் பண உருவாக்கலுக்கும் வழிவகுத்தது. இதனால் அரசாங்கத்துக்கு இணையாக தனி பொருளாதாரமே உருவாகி அது சமூக விரோதிகள், தேச துரோக சக்திகளால் நிர்வகிக்கப்பட்டது. உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் அதிகம் இருந்ததால் கள்ள நோட்டு புழக்கமும் அதிகமாக இருந்தது. இத்தகைய சூழலில் பணத்தை செல்லாதவை என்று அறிவிப்பது ஒன்றே வழி. அதைத்தான் மோடி அரசு செய்தது என்று தனது பரிந்துரைக்கான விளக்கத்தை அளிக்கிறார் போகில்.

அரசின் நடவடிக்கையால் பல ஆண்டுகளாக முடங்கியிருந்த பணம் வங்கிக்கு திரும்பியுள்ளது. இப்போது பணம் எங்கே செல்கிறது, யாரிடம் உள்ளது என்பதை எளிதில் கண்டுபிடிக்க வழி ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் சேமிப்பு அதிகரித்துள்ளதால், கடன் வழங்கும் நடவடிக்கை அதிகரிக்கும். டிஜிட்டல் பரிவர்த்தனையும் பெருகி வருவது வெளிப்படையான பரிவர்த்தனைக்கு வழியேற்படுத்தியுள்ளது. இவை அனைத்துமே பொருளாதாரத்தில் நன்மையை ஏற்படுத்தும் சாதக அம்சம் என்றும் போகில் சுட்டிக் காட்டியுள்ளார்.

முன்னர் 500 ரூபாய் நோட்டுகளின் அளவு மொத்த கரன்சியில் 47 சதவீத அளவுக்கு இருந்தது. தற்போது 22 சதவீத அளவுக்கு புதிய 500 ரூபாய் நோட்டு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக வெளிவந்துள்ள 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளின் அளவு 72 சதவீதம் மட்டுமே. முன்பு உயர் மதிப்பிலான நோட்டுகள் 85 சதவீதம் இருந்தன. இது தற்போது 13 சதவீதம் குறைந்துள்ளது. மொத்த கரன்சியின் மதிப்பு ரூ. 13.3 லட்சம் கோடியாகும். இது 2016 செப்டம்பரில் ரூ.16.6 லட்சம் கோடியாக இருந்ததாம். கறுப்புப் பண பதுக்கல் குறைந்துள்ளது, தீவிரவாத நடவடிக்கைகளுக்கான நிதியும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கள்ள நோட்டுகளும் குறைந்துள்ளன.

அரசு தற்போது வெளியிட்டுள்ள 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை படிப்படியாக நிறுத்திவிட வேண்டும். உயர் மதிப்பிலான கரன்சியாக ரூ. 50 மற்றும் ரூ. 100 மட்டுமே இருக்க வேண்டும். இத்துடன் பி டி டி-யை அமல்படுத்த வேண்டும் என போகில் வலியுறுத்தியுள்ளார்.

வங்கி பரிவர்த்தனை வரி?

வங்கி பரிவர்த்தனை வரி என்பது ஒரு முனை வரி விதிப்பாகும். அதாவது வங்கி மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து சேவைகளுக்கும் வரி விதிக்கப்படும். அதாவது சேமிப்பு அல்லது பணத்தை எடுக்கும்போதும் வரிவிதிக்கப்படும். 2 சதவீதம் மட்டும் வரி விதித்தால் போதும். காசோலை மற்றும் மின்னணு பரிவர்த்தனை அனைத்துக்கும் இவ்விதம் வரி விதித்தால் போதும். வரியை அரசு வசூலித்து எந்த மாநிலத்திலிருந்து பரிவர்த்தனையாகிறதோ அந்தந்த மாநிலத்துக்கு வரியை பிரித்து தந்துவிடலாம். சுங்கம் மற்றும் இறக்குமதிக்கு மட்டும் தனியாக வரி விதித்தால் போதும். தற்போதுள்ள தனி நபர் வருமான வரி உள்ளிட்டவற்றை வசூலிக்க வேண்டியதில்லை.

சாதக அம்சங்கள்

இதனால் பல்வேறு வகையான சாதகம் இருப்பதாக பட்டியலிடுகிறார் போகில். இதை செயல்படுத்தும்போது ரூ. 50-க்கு மேலான மதிப்பிலான கரன்சிகளை முற்றிலுமாக புழக்கத்திலிருந்து நீக்கி விடலாம். இதனால் கறுப்புப் பணம் ஒழிவதோடு லஞ்சம், ஊழலும் ஒழியும். வரி ஏய்ப்புக்கு வாய்ப்பே இருக்காது. வரி விதிப்பில் உள்ள சில அம்சங்களை சாதகமாக்கிக் கொள்ளும் போக்கை தவிர்க்கலாம் என்கிறார்.

தற்போது வருமான வரி செலுத்துவோர் 1.25 கோடி. இது மொத்தமக்கள் தொகையில் 1 சதவீதம் மட்டுமே. பி டி டி மூலம் அனைத்து பரிவர்த்தனையும் வரி விதிப்புக்குள்ளாகும். இதனால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.

செலவிடும் அளவு அதிகரிக்கும்: தற்போது ஆண்டு ஊதியம் ரூ. 2.5 லட்சத்திலிருந்து அதிகம் பெறுவோர் 10 சதவீத வரி செலுத்துகின்றனர். இதனால் அவர்களது வருமானத்தில் 10 சதவீதம் வரியாக போகிறது. அதுவே 2 சதவீத பி டி டி.யாக இருப்பின் அவர்கள் வருமானம் 98 சதவீதமாக இருக்கும். செலவு செய்யும் தொகை அதிகரிக்கும். இது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என தனது பரிந்துரையை நியாயப்படுத்துகிறார் போகில்.

பாதக அம்சம்

கிராமப்புற பொருளாதாரத்தை இது வெகுவாக பாதிக்கும் என்று பொருளாதார அறிஞர்கள் எச்சரிக்கின்றனர். ரூ. 50 –க்கும் மேலான உயர் மதிப்பிலான கரன்சிகளை அழித்துவிட்டால், பெரும்பாலும் பண பரிவர்த்தனை மூலம் நிகழும் கிராமப்புற பொருளாதாரம் முடங்கிப் போகும். விவசாயத்துறை முற்றிலும் பண பரிவர்த்தனை மூலமே நடைபெறுவதால் விவசாயம் பெருமளவு பாதிக்கும் என்று வேளாண் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஒரே பணிக்காக தொடர்ந்து பரிவர்த்தனை செய்யும்போது பிடிடி மூலம் செலுத்தும் வரி 16 சதவீதத்தைத் தொடும் என்றும் குறிப்பிடுகின்றனர். சண்டீகரில் 3 ஆயிரம் பேருக்கு ஒரு வங்கிக் கிளை உள்ளது. அதுவே மணிப்பூரில் 33 ஆயிரம் பேருக்கு ஒரு கிளை என்றுள்ளது. இத்தகைய இடைவெளி நிலவுவதால் பி டி டி. அமல்படுத்தினால் குழப்பம் உருவாகும் என்கின்றனர் வங்கியாளர்கள்.

செலவுகள் மீதான வரி விதிப்பு என்ற நடைமுறை ஒரு சில நாடுகளில் மட்டுமே உள்ளது. எந்த வகையான செலவாக இருந்தாலும் வரி செலுத்தியாக வேண்டும். இந்த நடைமுறை அமலுக்கு வந்தால் கன்னியாகுமரியில் உள்ள கந்தன் செலுத்தும் வரி அளவையே இந்தியாவின் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானியும் செலுத்துவார். இது சரியாக இருக்குமா என்ற வாதத்தை சில தணிக்கையாளர்கள் முன் வைக்கின்றனர்.

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி என்பதை ஏற்றுக் கொள்வது கடினமாக இருந்தாலும் அதில் உள்ள நன்மைகளைக் கருத்தில் கொண்டு அதை ஏற்கலாம். ஆனால் இதுபோன்ற அபத்தமான சிந்தனைகளை செயல்படுத்தினால் அது பொருளாதார கட்டமைப்பையே சிதைத்துவிடும் என்று பொருளாதார அறிஞர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பண மதிப்பு நீக்கம் அதன் நோக்கத்தை முழுமையாக எட்டாத நிலையில் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் மற்றொரு விஷப் பரிட்சையில் அரசு இறங்காது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதிக்குப் பிறகு பிரதமர் மோடியின் மனதின் குரல் – வானொலி உரை பிரபலம். எப்போது எத்தகைய அதிரடி அறிவிப்பை வெளியிடுவாரோ என்று வானொலி உரையை கேட்போரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

டெமோ – ஜிஎஸ்டி – அடுத்தது பிடிடி என்றால் மக்கள் தாங்குவார்களா?

Leave a Reply