shadow

ஜெயலலிதா மரணம் அடையும்போது குற்றவாளி இல்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஒருவர் தனது விடுதலை நேரத்தில் மரணமடைந்து விட்டால் அதற்கு பிறகு வழங்கப்படும் எந்த நீதிமன்ற தீர்ப்பும் அவரைக் குற்றவாளியாக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது

சென்னை மெரீனாவில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்றபோது இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக அரசின் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவகம் கட்ட எந்தத் தடையுமில்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரும்போது ஜெயலலிதா உயிருடன் இல்லை. உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஒருவர் தனது விடுதலை நேரத்தில் மரணமடைந்து விட்டால் அதற்குப் பிறகு வழங்கப்படும் எந்த நீதிமன்ற தீர்ப்பும் அவரைக் குற்றவாளியாக்க முடியாது என்று கபூர் Vs தமிழ்நாடு என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தால் ஏற்கெனவே நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுவிட்ட நிலையில் மறைந்துவிட்ட ஜெயலலிதாவைத் தற்போதும் குற்றவாளிதான் என்று கூறும் வாதத்தை ஏற்கமுடியாது’ எனக் கூறியுள்ளனர்.

இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வான வழக்கறிஞர் இன்பதுரை கூறியதாவது: இந்த தீர்ப்பின் அடிப்படையில் இனி யாராவது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைக் குற்றவாளி என்று பேசினால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனைக்கு ஆளாவார்கள். அரசியல்ரீதியாக அவரைப் பிடிக்காதவர்கள், சொத்துக்குவிப்பு வழக்கின் குற்றவாளி எனத் தொடர்ந்து பேசி வந்தனர். நீதிமன்றத் தீர்ப்பு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது” என்று கூறினார்.

Leave a Reply