shadow

சொல்பேச்சு கேட்கும் ஸ்மார்ட் வீடு

நம் வீட்டுக்கு உயிர் இருக்கிறா? அப்படி இருந்தால் எப்படி இருக்கும். இந்தக் கற்பனை அறிவியல்புனைவு திரைப்படக் கதைபோல் தெரிகிறதா? இதை நடைமுறையில் சாத்தியப்படுத்துவதுதான் நவீனத் தொழில்நுட்பத்தின் வேலை. ஸ்மார்ட்போன் போல் ஸ்மார்ட் வீடுகளும் எதிர்காலத்தில் பெரும் செல்வாக்குப் பெறக்கூடும்.

நம் நகரம் முழுவதையும் எப்படிச் சாலைகள் இணைக்கின்றனவோ அதைப் போல, நம் வீட்டை இணைப்பதற்கும் ஒரு இணைப்பு தேவை. இந்த இணைப்புதான் ஸ்மார்ட் வீடுகளின் அடிப்படைக் கட்டமைப்பு. இந்த இணைப்பு ஒரு பெரிய வலை போன்று, வீட்டில் உள்ள எல்லா ஸ்மார்ட் உபகரணங்களையும், குளிர்சாதனப் பெட்டி, குளிர்சாதன வசதி, மேசைக் கணினி உள்ளிட்டவை, பாதுகாப்பாக ஒரு குடையின் கீழ் கொண்டுவருகிறது. நமது தேவைகளுக்கு ஏற்ப நாம் ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகளையும் பயன்படுத்தலாம். இந்த இணைப்புக்குக் கம்பியுள்ள (wired), கம்பியற்ற (wireless) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். இந்த இரண்டு தொழில்நுட்பங்களிலும் சில குறைகளும் உண்டு என்றாலும் பயன்களும் உண்டு.

திறன் குறைபாடுகள் உள்ள போதிலும், Wi-Fi மற்றும் Bluetooth இணைப்புகள்தான் மிகவும் பிரபலமாக உள்ளன. மிகுந்த தொழில்நுட்ப அறிவு தேவைப்பட்டதால், உற்பத்தியாளர்கள், Wi-Fi பயன்பாட்டை நீண்ட காலமாகத் தவிர்த்துவந்தனர். Bluetooth இணைப்பைச் சிறிய இடப் பரப்பில் மட்டுமே பயன்படுத்த முடியும். இது தவிர ZigBee, Z-Wave ஆகிய கம்பியில்லா வலையிணைப்புகளும் உபயோகத்தில் உள்ளன. இந்த இணைப்புகள், ஸ்மார்ட் உபகரணங்களை இணைப்பதற்கு ரேடியோ அலைகளைப் பயன்படுத்துகின்றன. Insteon எனும் மற்றொரு இணைப்புமுறையும் உள்ளது. இது கம்பியுள்ள, கம்பியற்ற வலை இணைப்புகளைத் தன்னகத்தே உள்ளடக்கியது. இந்த முறையில் எல்லா ஸ்மார்ட் உபகரணங்களும் ஒன்றுக்கு ஒன்று சரியிணையாகச் செயல்படுகின்றன.

நம் உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளை இணைக்கும் நரம்பு மண்டலத்துக்கு, மூளை எப்படிக் கட்டளை மையமாகச் செயல்படுகிறதோ, அதைப் போன்று, நம் வீட்டில் உள்ள இந்த வலையிணைப்பைக் கட்டுப்படுத்த ஒரு மையம் தேவை. நம் வீட்டில் உள்ள உபகரணங்களுக்கு உத்தரவிடுவதற்கும், அவற்றிடமிருந்து வேண்டிய விளைவுகளைப் பெறுவதும் இந்த மையத்தின் பணி. Samsung SmartThings, Wink போன்ற அநேகக் கட்டளை மையங்கள் சந்தையில் விற்கப்படுகின்றன.

Samsung SmartThings, Insteon Hub Pro போன்றவை ஸ்மார்ட்போன்களில் உபயோகப்படும்படியாகத் தங்களுக்கு என்று செயலிகளை (smartphone app) வடிவமத்துள்ளன. இதனுடன் நாம் இன்னும் சில செயற்கை நுண்ணறிவை இணைப்பதன் மூலம், இதனை இன்னும் பயனுள்ளதாக்கலாம். Google Home, Amazon Echo போன்றவற்றை உபயோகப்படுத்துவது இதற்கு ஒரு சிறந்த வழி. இந்த இரண்டிலுமுள்ள குரல்வழி மூலமாகத் தூண்டக்கூடிய ஒலிபெருக்கிகள் மூலமாக நாம் நம் ஸ்மார்ட் வீட்டை மிக எளிதாகக் கட்டுப்படுத்தலாம்.

ஸ்மார்ட் வீட்டைப் பொறுத்தவரை வீட்டுக்குத் தேவையான அடிப்படை இணைப்புக் கட்டமைப்பை வடிவமைப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் வீட்டில் ஸ்மார்ட் உபகரணங்கள் இருக்க வேண்டும் என்பது. ஏனெனில், வைஃபை ப்ளூடூத் போன்ற வசதிகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் உபகரணங்களையே நாம் ஸ்மார்ட் வீட்டில் நமது வசதிக்கேற்ப வெளியிலிருந்துகூட இயக்க முடியும். ஆகவே, ஸ்மார்ட் டிவி, Wi-Fi பழச்சாறு பிழியும் கருவி என்று பலவகையான அழகான தொழில்நுட்பரீதியில் மேம்பட்ட உபகரணங்களைத்தான் பயன்படுத்த வேண்டும். பின் முக்கிய மின்னணுச் சாதனங்களான மேஜைக்கணினி, மடிக்கணினி, ஒலிபெருக்கிகள், தொலைக்காட்சி பெட்டி போன்றவற்றை ஒரே குடையின்கீழ் கொண்டுவரலாம். இவை எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்தபின், ஸ்மார்ட் போன்களில், இந்த ஸ்மார்ட் வீட்டை இயக்குவதற்கான செயலியைத் (smartphone app) தரவிறக்கம் செய்ய வேண்டும்.

இப்போது உங்கள் வீடு உங்களது ஸ்மார்ட் போனின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். ஏசியை அணைக்க மறந்துவிட்டோமே, கம்ப்யூட்டரை ஷட் டவுண் பண்ணினோமா போன்ற பல சந்தேகங்களைப் பற்றிய கவலையை நீங்கள் துறந்துவிடலாம். ஏனெனில், இப்போது உங்கள் வீட்டுக்கான கட்டளையை உங்கள் மூளை நினைத்த மாத்திரத்தில் நீங்கள் எங்கே இருந்தாலும் பிறப்பிக்க முடியும். உயிருள்ள செல்ல நாய்க்குட்டிபோல் உங்கள் வீடும் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்படும். நீங்கள் சொல்வதை எல்லாம் வீடு கேட்கும்போது அதற்கு உயிருள்ளது என்பதை நம்புவீர்கள் அல்லவா?

Leave a Reply