shadow

செரிமானத்திற்கு உதவும் கணையம் குறித்து சில தகவல்கள்

2சாது மிரண்டால் காடுகொள்ளாது’ என்பது, எதற்குப் பொருந்துமோ இல்லையோ கணையத்துக்குப் பொருந்தும். செரிமான மண்டலத்தின் இதயம் என்றுகூட இதனைச் சொல்லலாம். எந்தவோர் உணவாக இருந்தாலும், அது என்ன வகை என்பதை உணர்ந்து, அதற்கு ஏற்ப என்சைம்களை உற்பத்திசெய்து, செரிமானத்துக்கு உதவுவது, கணையத்தின் முக்கியப் பங்கு.

கணையத்துக்கு, தமிழ்ப் பேரகராதியில் என்ன பொருள் தெரியுமா? வளைந்த தடி. மேற்கத்திய இலக்கியங்களில் இதனை ‘மீன்’ என்றும் சொல்கிறார்கள். வளைந்த தடி போலவும் மீன் போலவும் இருக்கும் கணையம், பஞ்சு போன்று மென்மையானது. இதனை மருத்துவர்கள் எளிதில் தொட்டுப்பார்க்க முடியாது. முதுகுத்தண்டுக்கு அருகில், இரைப்பைக்குப் பின்புறம் அமைந்திருக்கிறது கணையம். இதன் தலைப் பகுதி, இரைப்பையில் இருந்து உணவு டியோடினத்துக்குச் செல்லும் பகுதியில் அமைந்திருக்கிறது. சுமார் 18 – 25 செ.மீ அளவுக்கு நீளமாக இது படுத்திருக்கிறது. இது அமைதியாக இருந்தாலும், செரிமான மண்டலத்தில் உணவு ஜீரணம் ஆக அதிகபட்ச பங்களிப்பை வழங்கும் நம்பர் ஒன் உறுப்பாக இருக்கிறது. கணையம் மட்டும் ஒழுங்காகச் செயல்படவில்லை எனில், எந்த உணவையும் செரிக்க முடியாது.

ஆரோக்கியமான கணையம், ஒரு நாளைக்கு சுமார் ஒரு லிட்டர் கணைய சுரப்பை (ஜூஸ்) உற்பத்தி செய்கிறது. கணையம், வெறும் என்சைம்களைச் சுரப்பதோடு மட்டும் நின்றுவிடுவது இல்லை. இயற்கையாகவே மிகச்சிறந்த சென்சார் வேலையையும் செய்கிறது.

ஆட்டோமேட்டிக் சிஸ்டம் போல இயங்குகிறது. நாம் சாப்பிடும் உணவைப் பொருத்து ஜூஸை உற்பத்திசெய்யும். அது மட்டும் இல்லாமல், எவ்வளவு உணவு வருகிறதோ அதற்கு ஏற்ப என்சைமை உற்பத்திசெய்யும். உணவு எப்போது இரைப்பையில் இருந்து சிறுகுடலுக்கு வருகிறதோ, அந்தச் சமயம் சரியாகக் கணைய சுரப்பும் வந்துவிடும்.

கணைய என்சைம்கள் நாம் சாப்பிடும் எதையும் அரித்து, கரைத்து, துகள்களாகச் சிதைக்கும் திறன் வாய்ந்தவை. நாம் அமிலத்தன்மை உள்ள பொருளை சாப்பிட்டால், பைகார்பனேட் சுரப்பை உற்பத்தி செய்யும். கார்போஹைட்ரேட் நிறைந்த இட்லி, தோசை போன்றவற்றைச் சாப்பிட்டால், அதற்கு ஏற்ப அதனை செரிக்க அமைலேஸ் என்சைமை சுரக்கும். புரதச்சத்து எனில், ட்ரிப்சின் என்சைமையும், கொழுப்புச்சத்து எனில், லைபேஸ் என்சைமையும் தானாகவே சுரக்கும். எந்த உணவாக இருந்தாலும் பிரித்து மேயும் வல்லமைகொண்ட என்சைம்களை உற்பத்திசெய்யும் கணையத்தின் சுவர்கள், மிகவும் பாதுகாப்பானவை. இந்தக் கணையச் சுவர்கள் ஏதாவது ஒரு காரணத்தால் பாதிக்கப்பட்டால், கணையத்துக்குள் தனக்குத் தானே செரிமானம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படும். ஒரு மீனை அரைகுறையாகச் சுட்டால், எப்படி இருக்குமோ அப்படி ஆகிவிடும் கணையம்.

கணையம் எப்படிப் பாதிக்கப்படுகிறது?

பித்தக்குழாய், இரைப்பை, கணையம் மூன்றும் சிறுகுடலின் ஆரம்பப்பகுதியில் சங்கமிக்கின்றன என முன்பே சொல்லியிருந்தேன். பித்தக்குழாயில் இருந்து சிறு சிறு மணல் போன்ற குட்டிக்கற்களோ, பித்த நீரோ சிறுகுடலுக்குச் செல்லாமல், குழாயை அடைத்துக்கொண்டால், கணையம் திணற ஆரம்பித்துவிடும். இது தவிர, மதுவும் புகைப்பழக்கமும் கணையத்தைப் பாதிக்கும் முக்கியமான காரணங்கள் ஆகும்.

உடலில் உள்ள சுரப்பிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஏதாவது ஒரு நாளம் வழியாக உடலில் ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு என்சைம் சுரந்தால் அதை ‘நாளமுள்ள சுரப்பிகள்’ என்பார்கள். நாளம் இல்லாமல் சிக்னல் அடிப்படையில் சுரந்து ரத்தத்தில் நேரடியாகக் கலந்து அனுப்புவதை ‘நாளமில்லா சுரப்பிகள்’ என்பார்கள். இந்த இரண்டு வகை சுரப்பிகளையும் கொண்ட ஓர் உறுப்பு கணையம். உணவை செரிக்க, கணையத்தில் சுரக்கும் என்சைம்கள் நாளமுள்ள சுரப்பிகள் வழியாகப் பயணிக்கும். கணையத்தில் நடக்கும் மற்றொரு செயல்பாடு, நாளமில்லா சுரப்பிகளால் ஆல்ஃபா, பீட்டா, காமா போன்ற செல்களால் சுரக்கப்படும் ஹார்மோன்கள். இதில், தலையாய ஹார்மோன்தான், பீட்டா வகை செல்களால் உற்பத்திசெய்யப்படும் இன்சுலின். ஆல்ஃபா வகை செல்களால் உற்பத்தி செய்யப்படுபவை குளுக்ககான்.

குளுக்ககான், உடலில் உள்ள மாவுச்சத்து, கொழுப்புச்சத்து போன்றவற்றில் இருந்து சர்க்கரையை எடுத்து, ரத்தத்தில் சேர்க்கும் வேலையைச் செய்கிறது. இன்சுலின் ஹார்மோன் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைக்க உதவுகிறது. ஒரு மனிதன் நடமாட வேண்டும் எனில், ரத்தத்தில் குறிப்பிட்ட அளவு சர்க்கரை இருக்க வேண்டும். அதற்கு, குளுக்ககான், இன்சுலின் இரண்டு ஹார்மோன்களும் சீராகச் சுரப்பது அவசியம்.

சமீப மருத்துவ ஆராய்ச்சிகளில் மிகப்பெரிய யுத்தம் ஆராய்ச்சியாளர்களிடையே நடந்து கொண்டிருக்கிறது. ஒருவருக்கு சர்க்கரை நோய் வருகிறது எனில், உடலில் இன்சுலின் ஹார்மோன் குறைவதால் சர்க்கரை நோய் வருகிறதா அல்லது உடலில் குளுக்ககான் ஹார்மோன் அதிகரிப்பதால் சர்க்கரை நோய் வருகிறதா எனத் தீவிரமாக ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள். ‘இன்சுலின் ஹார்மோனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போலவே குளுக்ககான் ஹார்மோனுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’ என்கிறார்கள். கணையம் சரியாகச் செயல்பட்டால், இந்த இரண்டு ஹார்மோன்கள் பற்றியும் நாம் கவலைப்படத் தேவை இருக்காது.

ஆக, கணையத்தில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் பலவகையான சிக்கல்கள் ஏற்படும் என்பது புரிகிறதா? நாளமுள்ள சுரப்பிகளில் கோளாறு ஏற்படும்போது செரிமானத்திலும், நாளமில்லா சுரப்பிகளில் கோந்ளாறு ஏற்பட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவிலும் பிரச்னை ஏற்படும். கணையத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டால், மெள்ள மெள்ள கழுத்துப் பகுதி கறுமையாக மாறும். கணைய அழற்சி, கணையத்தில் ஏற்படும் புற்றுநோய் போன்றவற்றை அடுத்த இதழில் பார்ப்போம்.

Leave a Reply