shadow

சென்னை வந்த ராகுல் காந்தி பாதுகாப்பில் கோட்டை விட்டதா சென்னை போலீஸ்?

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடந்த 8-ந் தேதி சென்னை வந்தபோது அவருக்கு போதுமான பாதுகாப்பு அளிக்க மாநில அரசு தவறியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில் ராகுல் பாதுகாப்பில் சென்னை போலீசார் கோட்டை விட்டு விட்டதாகவும் இதுகுறித்து மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் தமிழக போலீசிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ராகுல்காந்தி செல்லும் வழியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் யார்? யார்? எதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி ஏற்பட்டது? என்பது போன்ற கேள்விகளை மத்திய உளவு பிரிவினரும், ராகுல் பாதுகாப்பு அதிகாரிகளும் கேட்டுள்ளனர்.

இசட்பிளஸ் பாதுகாப்பில் உள்ளவர்களுக்கு எந்த மாதிரியான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தனியாக விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அது எதுவும் ராகுல் பாதுகாப்பில் கடைபிடிக்கப்படவில்லை. இதுபற்றி மத்திய அரசுக்கு உளவு பிரிவு அதிகாரிகள் விரிவான அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளனர். இதன் பிறகே மத்திய அரசு தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

இதற்கிடையே ராகுல் பாதுகாப்பில் 3 துணை போலீஸ் கமி‌ஷனர்கள் கோட்டை விட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

கலைவாணர் அரங்கம் வழியாக ராகுல் செல்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த வழியில் 3 துணை கமி‌ஷனர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவர்கள்தான் ராகுல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியவர்கள். ஆனால் இந்த பாதை வழியாக ராகுல் வருவது தெரிந்தும், பொது மக்களையும், தி.மு.க.வினரையும், 3 போலீஸ் அதிகாரிகளும் எப்படி செல்ல அனுமதித்தார்கள்? என்பதே மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது. இதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் சென்னை போலீசுக்கு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply