shadow

சென்னையின் ஏறுமுகம் தொடருமா?

சென்னை ரியல் எஸ்டேட் கடந்த சில ஆண்டுகளாக இறங்குமுகமாகவே இருந்தது. பண மதிப்பு நீக்கம், மணல் தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் இந்தச் சரிவு ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஓரளவு ரியல் எஸ்டேட் ஏற்றம்பெற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த வளர்ச்சி முக்கியமானது. இந்நிலையில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் நைட் ப்ராங்க் அறிக்கை சென்னையின் ரியல் எஸ்டேட் முடிவடைந்த 2017 அரையாண்டிலும் சென்னை ரியல் எஸ்டேட் ஏறுமுகம் கண்டுள்ளதாக சொல்கிறது.

ஏற்றமும் இறக்கமும்

இந்திய அளவில் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ரியல் எஸ்டேட் தேக்கம் கண்டுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவு பெரும் சரிவைக் கண்டுள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. புதிய திட்டங்கள் 46 சதவீதமாகவும் வீடு விற்பனை 23 சதவீதமாகவும் சரிவடைந்துள்ளது. 2016 முதல் அரையாண்டில் 1, 35,016 வீடுகளாக இருந்த விற்பனை இந்த அரையாண்டில் 1,20,756 ஆக சரிவடைந்துள்ளது.

பண மதிப்பு நீக்கம், சிமெண்ட் விலை ஏற்றம், திட்டத்துக்கான ஒப்புதல் பெறுவதில் உள்ள காலதாமதம் போன்றவை இதற்குப் பின்னாலுள்ள காரணங்களாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் பணமதிப்பு நீக்க காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டின் முதல் அரையாண்டு சில நகரங்களைப் பொறுத்தவரை புதிய திட்டங்களில் முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால் சில நகரங்கள் பின்னடவைச் சந்தித்துள்ளன. உதாரணமாக இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நகரமான மும்பையில் 2016 இரண்டாம் அரையாண்டில் சுமார் 10,000 வரையிலான வீட்டுத் திட்டங்கள்தான் தொடங்கப்பட்டுள்ளதாகஅறிக்கை சொல்கிறது.

ஆனால் இந்த அரையாண்டில் அது சுமார் 17,000-மாக உயர்ந்திருக்கிறது. பெங்களூரூவும் அதுபோல் ஏற்றம் கண்டுள்ளது. ஆனால் புனே ஹைதராபாத், அகமதாபாத் நகரங்கள் 2016 இரண்டாம் அரையாண்டைக் காட்டிலும் பின்தங்கியுள்ளன. சென்னை சிறிய அளவிலான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

வீடு விற்பனையைப் பொறுத்தவரை இந்தியாவின் பெரும்பான்மையான நகரங்கள் கடந்த 2016 இரண்டாம் அரையாண்டைக் காட்டிலும் முன்னேற்றம் கண்டுள்ளன. அதிகபட்சமாக மும்பை சுமார் 25,000-மாக இருந்த அதன் விற்பனை இந்த அரையாண்டில் சுமார் 33,000-மாக உயர்ந்திருக்கிறது. பெங்களூரூ, சென்னை, புனே, ஹைதராபாத், அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களும் சிறிய அளவிலான வளர்ச்சியைக் கண்டுள்ளன.

சென்னை நிலவரம்

சென்னை ரியல் எஸ்ட்டேட்டைப் பொறுத்தவரை தமிழக அரசு வழிகாட்டி மதிப்பு குறைத்தது, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் நடைமுறையாக்கப்பட்டது ஆகிய மாற்றங்கள் சாதகமான மனநிலையை வாடிக்கையாளர் மத்தியில் விளைவித்திருப்பதாகச் சொல்கிறது. சென்னையின் ரியல் எஸ்டேட் வளர்ச்சி மிக்க பகுதியாக இருக்கும் தென்சென்னைப் பகுதிதான் இம்முறையும் அதிக வீடுகளை விற்பனை செய்துள்ளது.

தென் சென்னை வீடு விற்பனை கடந்த 2016 இரண்டாம் அரையாண்டின் 58 சதவீத விற்பனையிலிருந்து 8 சதவீதம் கூடி 66 சதவீதமாக ஏற்றம் கண்டுள்ளது. ஆனால் மேற்குச் சென்னையின் வீடு விற்பனை 2016 இரண்டாம் அரையாண்டை விட 8 சதவீதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. இதன் மூலம் கடந்த இரு ஆண்டுகளாக வளர்ந்துவரும் மேற்கு சென்னை ரியல் எஸ்டேட் இந்த அரையாண்டில் சற்று பின்தங்கியுள்ளது.

மத்திய சென்னை வீடுகளின் விற்பனை 11 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாகவும் சரிவடைந்துள்ளது. வட சென்னை அதே 4 சதவீதமாக நீடிக்கிறது.புதிய திட்டங்கள் தொடங்குவதிலும் தென்சென்னை முன்னிலையில் உள்ளது. மேற்குச் சென்னை 7 சதவீதம் அளவு பின்தங்கியுள்ளது. வட சென்னையும் மத்திய சென்னையும் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை.

ஆனால் தமிழகக் கட்டுமானத் துறைக்கு இது இக்கட்டான காலகட்டம். மணல் தட்டுப்பாடு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. லாரி உரிமையாளார் சங்கமும் கட்டுநர்களும் இதற்காகப் போராடி வருகிறார்கள். இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் வழிகாட்டி மதிப்பு குறைக்கப்பட்டு பத்திரப் பதிவுக் கட்டணத்தை தமிழக அரசு அதிகரித்திருக்கிறது.

இது போதாதென்று ஜி.எஸ்.டி வரி விதிப்பு நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டுமானத் துறையைப் பாதித்துள்ளது. இம்மாதிரியான பல்வேறு சவால்களுக்கு இடையில் தமிழக ரியல் எஸ்டேட் ஓரளவு மீண்டிருக்கிறது. இந்தப் பிரச்சினைகள் தொடர்ந்தால் உள்நாட்டு உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தத் துறையின் ஏற்றமும் தொடராது.

Leave a Reply