shadow

சுவருக்குள் இருப்பது என்ன? கண்டுபிடிக்க உதவும் செயலி

கட்டுமானத் துறையில் புதிய புதிய கண்டுபிடிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. பல கண்டுபிடிப்புகள் கட்டிடங்கள் கட்டப்படுவதற்கு உதவியாக இருக்கும். உதாரணமாகச் செங்கல்லை முறையாக அடுக்கிப் பூச ஸ்மார்ட் செங்கல் சாதனம் சென்ற ஆண்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இவை அல்லாமல் கட்டுமானம் முடிந்த பிறகு பயன்பாட்டுக்கான சாதனங்களிலும் பல புதிய பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சென்ற மாதம் ஸ்மார்ட் போன் பூட்டு சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இந்த வகையில் கட்டி முடிக்கப்பட்ட வீட்டில் சுவரில் உள்ளே உள்ள எலக்ட்ரிக்கல் வயர் செல்லும் குழாய், தண்ணீர் செல்லும் குழாய் போன்றவற்றில் ஏதாவது பழுது ஏற்படும்போது சரியான இடத்தில் குழாயைக் கண்டுபிடிக்க புதிய சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுவரில் துளையிடும்போதும் இடிக்கும்போதும்கூட உள்ளே செல்லும் குழாயைக் கண்டுபிடித்து எடுக்க இந்தச் சாதனம் உதவும்

வாலாபாட் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச் சாதனத்தை இஸ்ரேலைச் சேர்ந்த வெய்யால் இமெஜிங் என்னும் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. வாலாபாட் என்பது ஸ்மார்ட் போன் அளவிலான சாதனம். இந்தச் சாதனத்தை ஸ்மார்ட் போனுடன் இணைத்துக்கொள்ள வேண்டும். போனிலிருந்து யூஎஸ்பி வழியாக இயங்குவதற்கான மின்சாரத்தை வாலாபாட் எடுத்துக்கொள்ளும். வாலாபாட் சாதனத்துக்கான தனி செயலி கிடைக்கும். அதை தரவிறக்க செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்தச் செயலி எடுத்துக்கொண்டு கண்டுபிடிக்க வேண்டிய சுவர்ப் பகுதியில் வைத்துப் பார்க்கும்போது உள்ளே என்ன இருக்கிறது என்பதை ஸ்மார்ட் போன் செயலி வழியாகக் காண முடியும். சுவருக்குள் இருக்கும் குழாய், சட்டம், எலிகள் போன்ற உயிருள்ளவற்றையும் காட்டக்கூடிய ஆற்றல் இந்தச் சாதனத்துக்கு உண்டு. அப்படிக் கண்டுபிடிக்கப்படும் பொருளை நீங்கள் ஒளிப்படமாக சேமித்துக்கொள்ளவும் முடியும்.

வாலாபாட் சுவரில் நான்கு அங்குல ஆழத்திலுள்ள பொருள்களைக் கண்டுபிடித்துக் காட்டும். கான்கிரீட் சுவர், மரப் பலகை என எதையும் ஊடுருவிக் கண்டுபிடிக்கக்கூடியது வாலாபாட். இந்தத் தொழில்நுட்பம் முதலில் மருத்துவத் துறையில் பயன்பட்டு வந்துள்ளது. வாலாபாட் சாதனம் முதலில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கு அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. பிறகு இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்டபோது வாலாபாட்டின் ஆரம்ப விலை 99 யூரோ. அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து விலை 100 யூரோ கூட்டப்பட்டு இப்போது 199 யூரோவுக்குக் கிடைக்கிறது. அமேசான் போன்ற இணையத்திலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

Leave a Reply