shadow

சிவனருள் கைகூடும்!

sivanசென்னை திருநின்றவூர் அருகேயுள்ள புலியூர் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் கோயிலில், ஆனி உத்திரத்தன்று ஸ்வாமி அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும். அப்போது, கல்யாண வரம் பிரார்த்திக்கும் கன்னிப் பெண்களுக்கு தாலிச் சரடும், குழந்தைப்பேறு வேண்டுவோருக்கு எலுமிச்சம் பழமும் வழங்கப்படுகின்றன. அவற்றை வீட்டில் வைத்து, இறைவழிபாடு செய்து வந்தால், விரைவில் நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை.

சேலம் நகரில் அருள்பாலிக்கும் சுகவனேஸ்வரர், சுரபுரநாதர், வீரட்டேஸ்வரர், பீமேசுவரர் மற்றும் திருவேலிநாதர் ஆலயங்களை பஞ்சாட்சர கோயில்களாகப் போற்றி வழிபடுகின்றனர்.

நாமக்கல் குகைக்கோயிலில் சிவன் பாதி விஷ்ணு பாதியாக காட்சியளிக்கும் ஈஸ்வரன், நாகத்தைக் கையில் ஏந்தியபடி அபூர்வ கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

சிவகங்கை மாவட்டம், பிரான்மலை அற்புதமான ஸ்தலம். திருக்கொடுங்குன்றம் என்பது இதன் தேவாரப் பெயர். இந்த மலையின் உச்சியில் மருதுபாண்டியர் காலத்துக் கோட்டையும் அதில் பீரங்கியும் உள்ளன. வள்ளல் பாரி ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதி இது. அவன் முல்லைக்குத் தேர் கொடுத்த இடம் இவ்வூரிலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது.

பொதுவாக சிவாலயங்களில் அருள்மிகு நடராஜருடன் பதஞ்சலி, வியாக்ரபாதர், காரைக்கால் அம்மையார் ஆகியோர் காட்சியளிப்பர். ஆனால் மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில், நடராஜ பெருமான் ஜுரதேவருடன் இருக்கிறார். மயில் வடிவம் எடுத்து சிவன் நடனம் ஆடியதால் இங்குள்ள நடராஜரை மயூர தாண்டவ நடராஜர் என்கிறார்கள். இக்கோயிலின் கருவறையின் கோஷ்ட சுவரில் நடராஜருக்கு அருகில் மூன்று கால்களுடன் வித்தியாசமான கோலத்தில் அருள்கிறார் ஜுரதேவர்.

சென்னை -திருவொற்றியூர் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். இங்குள்ள தியாகராஜர் ஆலயத்தில், பாம்பரசர்கள் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். கருவறையில் அருளும் சிவபெருமான் வாசுகி என்ற பாம்பை தன் மேனியில் கொண்டிருப்பதால், படம்பக்க நாதர் என்று அழைக்கப்படுகிறார். ஆதிசேஷனும் இந்தத் தலத்தில் ஆயிரம் லிங்கம் அமைத்து வழிபட்டுள்ளான். இந்த ஆலயத்தில் உள்ள சகஸ்ரலிங்கத்தைத் தரிசித்து வழிபடுவதால், சிவனருள் கைகூடும்; சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்.

Leave a Reply