shadow

சரித்திரம் பேசும்… பிரம்மதேசம்!

2அந்த கால மன்னர்கள் வேதம், சாஸ்திரங் களை நன்கு கற்று அதில் புலமை பெற்றிருந்த அந்தணர்களுக்காக நாடெங்கும் சில சிற்றூர்களை தானமாக வழங்கி அவர்களைக் குடியமர்த்தினார் கள். நீர்வளமும் வயல்வெளிகளும் நிறைந்த இந்த ஊர்கள் பிராமணர்கள் வசிக்கும் இடங்களாக இருந்ததால், பிரம்மதேசம் என்றும், அக்ரஹாரங்கள் என்றும் அழைக்கப்பட்டன. சில ஊர்கள் சதுர்வேதிமங்கலம் என்றும் அழைக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் பிரம்மதேசம் என்ற பெயரில் பல ஊர்கள் உண்டு. திருவண்ணாமலை, விழுப்புரம், திருநெல்வேலி மாவட்டங் களில் பிரம்மதேசம் என்ற பெயரில் ஊர்கள் உள்ளன. இங்கே நாம் தரிசிக்கப்போவது திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பிரம்மதேசம். இந்தப் பெயரில் பல ஊர்கள் இருப்பதால், நாம் தரிசிக்கப் போகும் இந்த ஊரை, ‘நாட்டேரி பிரம்மதேசம்’ என்று பக்கத்தில் உள்ள மற்றோர் ஊரின் பெயரையும் சேர்த்துக் குறிப்பிடுவது வழக்கம்.

வாணர்களின் தலைநகரம்

தொண்டைநாட்டின் ஒரு பகுதியை ‘வல்லநாடு’ என்று பெயரிட்டு ‘வாணர்கள்’ என்னும் சிற்றரசர்கள் ஆண்டு வந்தனர். ராணிப்பேட்டைக்கு அருகில் உள்ள தேவாரப் புகழ்பெற்ற ‘திரு வல்லம்’ (தற்போது திருவலம்) எனும் திருத்தலம், வாணர்களின் தலைநகராக விளங்கியது. அதற்கருகே வாணம்பாடி என்ற பெயரில் உள்ள ஓர் ஊரும், சோளங்கிபுரம் எனும் ஊருக்கு அருகில்
உள்ள ‘பானாவரம்’ என்ற ஊரும் வாணர்கள் அரசாட்சியை நினைவுறுத்தும் சாட்சிகளாகத் திகழ்கின்றன. அந்த வாணர்களின் குலத்தில் தோன்றியவனே வந்தியத்தேவன் என்ற வீரன். இவன் இரண்டாம் பராந்தகன் எனும் சுந்தர சோழனின் மகளும், ராஜராஜ சோழனின் சகோதரியுமான குந்தவியை மணந்தான்.

சுந்தரசோழன் காலத்தில் சோழசாம்ராஜ்யம் காஞ்சி வரை பரந்துவிரிந்து திகழ்ந்தது. சுந்தரசோழனின் மூத்தமகன் ஆதித்திய கரிகாலன், காஞ்சியில் பொன்னாலேயே ஒரு மாளிகை கட்டிக் கொண்டு, அங்கேயே தங்கி ஆண்டுவந்தான். அப்போது அவன், தந்தை சுந்தரசோழனின் ஆணைப்படி, பார்த்தவேந்திராதி வர்மன் எனும் பல்லவர் குலத்தில் தோன்றிய வீரனோடு மதுரைக்குச் சென்று பாண்டியனுடன் போர்புரிந்து பாண்டியனின் தலையைக் கொய்தான் என வரலாறு விவரிக்கும்.

ஆக, சோழர்கள் காலத்தில் சிற்றரசன் பார்த்தவேந்திராதிவர்மன், வந்தியத்தேவன் போன்ற வீரர்கள் இப்பகுதியை ஆண்டிருக் கின்றனர். ராஜேந்திர சோழன் காலத்தில் கூட வந்தியத்தேவன் பிரம்மதேசம் பகுதியில் ஆட்சி செய்திருக்கிறான். சிறிது காலம் பிரம்மதேசத்தில் தங்கியிருந்த ராஜேந்திரச்சோழன் கி.பி.1044-ம் ஆண்டு இவ்வூரிலேயே இறந்தான். அவனுடைய பட்டத்தரசி வீரமாதேவியும் அவனுடன் உடன்கட்டை ஏறினாள்.

அவன் மகனான ராஜாதிராஜதேவன் தன் பெற்றோரின் ஆன்மாக்கள் சாந்தியடையும் பொருட்டு இவ்வூரில் தன் மாமனும் சேனாதி பதியுமான மதுராந்தகனைக் கொண்டு ஒரு புனர்பந்தல் (தண்ணீர் பந்தல்) நிறுவினான்.

ராஜேந்திரன் திருவாதிரை நட்சத்திரத்தில் தோன்றியவன். அவன் வாழ்நாளில் 32 கோயில்களைக் கட்டினான். பல கோயில்களுக்கு திருப்பணி செய்தான். கங்கை கொண்டான், கடாரம் வென்றான் என்று அவனுக்குப் பட்டப்பெயர்கள் உண்டு. கங்கையையும், கடாரத்தையும் கைப்பற்ற கி.பி.1015-ல் காஞ்சியிலிருந்து அவன் புறப்பட்டதாக திருவாலங்காடு, கரந்தை செப்பேடுகள் தெரிவிக்கின்றன. அப்போது கங்கைப்புரத்தில் வசித்து வந்த பிராமணர்களை காஞ்சியிலும், பிரம்மதேசத்திலும் அவன் குடியேற்றினானாம்.

சந்திரன் வழிபட்ட சந்திரமெளலீஸ்வரர்

இங்ஙனம் வரலாற்று சிறப்புமிக்க நாட்டேரி பிரம்மதேசத்துடன் ஒட்டாமல் சற்று ஒதுங்கியே காட்சியளிக்கிறது, அருள்மிகு சந்திரமெளலீஸ்வரர் கோயில். முதற்சோழர்கள் காலத்தில், காஞ்சிக்குத் தென்பகுதியை (கி.பி. 948 முதல் 980 வரை) பல்லவன் கம்பவர்மன் அரசாண்டான். அவன் காலத்தில் முழுவதும் மணல் கற்கள், கற்கள் கொண்டு இக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது. சுமார் 40 வருடங்களுக்குமுன், இந்தக் கோயிலுக்குச் சென்றிருந்தபோது, கோயில் இருக்கும் பகுதியை ‘மடவிளாகம்’ என்று கூறக்கேட்டிருக்கிறேன். தற்போது வடமணப்பாக்கம் எனும் சிற்றூருக்கருகில் இக்கோயில் அமைந்துள்ளது.

அக்னி, சந்திரன், ரோமச முனிவர் ஆகியோர் கிருத, திரேதா, துவார யுகங்களில் இவரைப் பூஜித்ததாக இங்குள்ள கல்வெட்டுகள் சொல்கின்றன. அதுமட்டுமா? பல்லவர்கள், கங்கர்கள், சோழர்கள், ராஷ்டிரகூடர்கள், பிற்காலச் சோழர்கள் ஆகியோரின் ஆட்சியில் மிகப்பொலிவோடு இக்கோயில் இருந்ததற்கு கல்வெட்டுச் சாட்சிகள் நிறைய உண்டு.

காவிரிப்பாக்க ஆளுங்கணத்தார், பல்லவ மன்னன் கம்பவர்மன் காலத்தில் இவ்விறைவ னுக்கு 11 கழஞ்சு பொன்கொடுத்தார்களாம்.

கங்கர்கள் ஆட்சியில் இவ்வூருக்கு ‘ராசமல்ல சதுர் வேதிமங்கலம்’ என்று பெயர். கோயிலில் ஒழுங்காக பூஜைகள் நடைபெற்றன. ராஷ்டிரகூட கன்னரத் தேவன் ஆட்சியில், இக்கோயிலில் நான்கு காலபூஜைகள் நடைபெற்றதாம். கோயிலில் விளக்கேற்ற பல கட்டளைகள் ஏற்பட்டன. சிற்றரசன் பார்த்தவேந்திராத வர்மன் ஆட்சியில் ரிஷப வாகனத்தில் இறைவன் வீதி உலா வந்தார்.

முதலாம் ராஜராஜன் ஆட்சியில் இக்கோயிலில் தேவாரப் பதிகங்கள் ஓதப்பெற்றன. முதலாம் ராஜேந்திரன் ஆட்சியில் திருப்பதி சென்று தரிசனம் செய்துவிட்டு வரும் யாத்ரீகர்களுக்கு துவாதசி, பூசம், வியாழன் நாட்களில் உணவு வழங்கப்பட்டது. கோயிலுக்கருகில் இரண்டு பெரிய ஏரிகள் இருந்தன. அவை குந்தவைப் பேரேரி, சுந்தரசோழப் பேரேரி என்று பெயரிடப்பட்டு நீர் நிறைந்து காணப்பட்டன.

ஆண்டு தோறும் ஊரை நிர்வகிக்க தற்காலத்தில் உள்ளது போல் பஞ்சாயத்து முறை இருந்தது. அவர்கள் ‘சம்வத்சர வாரியப் பெருமக்கள்’ என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் கிராமத்தை நிர்வகித்ததோடு நில்லாமல் கோயில் நிர்வாகத்தையும் கவனித்து வந்தனர். கோயிலில் விளக்கெரிக்கத் தவறினால் அதற்கு தண்டனை உண்டாம். அதேபோல், பழுக்கக் காய்ச்சிய இரும்பைக் கையில் ஏந்தி சத்தியம் செய்து, தாங்கள் உண்மையைத்தான் கூறுகிறோம் என்று சொல்வது உண்டாம். இதற்கு ‘மழு ஏந்துதல்’ என்று பெயர். இப்படி, பல அரிய கல்வெட்டுக்களை தன்னகத்தே கொண்டு விளங்கும் இக்கோயிலுக்குச் சுற்றுபுற மதில் கூட கிடையாது. பெரும்பாலும் கோயில் பூட்டியே கிடக்கிறது!

கோயிலுக்கு வடக்குப் புறம் சிதைந்த நிலையில் ஒரு கோபுர வாயில். அதில் சுதைச்சிற்பங்கள் ஏதும் இல்லை. கோயிலுக்கு மதிலும் இல்லை. அதைத்தாண்டிச் சென்றால் கோயிலின் நீண்ட பிராகாரத்தை அடையலாம். நமக்கு எதிர்புரம் உட்கோயிலுக்குச் செல்ல ஒரு வாயில் இருக்கிறது. பஞ்ச கோஷ்டங்கள் எல்லாம் தெய்வங்கள் இல்லாமல் வெற்றிடமாக திகழ்கின்றன.

கருவறை விமாமனம் உயர்ந்த நிலையில், 3 தளங்கள் கொண்டு உன்னதமாக விளங்குகிறது. பூதகண வரிசைகள் மரஸ்தாரத்தில் செதுக்கப்பட்டுள்ளன. விநாயகர், முருகன், நடராஜர் சந்நிதிகளையும் தரிசிக்க முடிகிறது. தினமும் சூரியனின் ஒளிக் கீற்று கருவறையில் உள்ள லிங்கத் திருமூர்த்தி மீது விழுவதாகச் சொல்லப்படுகிறது. இது மிகவும் அரிதான விஷயம்.

இங்கு உறையும் ஈசனை பொந்தைப் பெருமானடிகள், பொந்தை ஆழ்வார், பொந்தை ஈஸ்வரர் என்று குறிப்பிடுகின்றன கல்வெட்டுகள். ‘பொந்தை’ என்றால் பனைமரத்தைக் குறிக்கும். ஆகையால் இக்கோயிலின் தலமரமாக பனைமரம் கருதப்படுகிறது. கோயிலுக்கு வெளியே மூன்று பனைமரங்கள் செழித்து வளர்ந்துள்ளதை இன்றும் காணலாம். 1996-ம் ஆண்டு முதல் இக்கோயில் இந்தியத்தொல்பொருள் ஆய்வுத்துறையினரால் எடுத்துக்கொள்ளப்பட்டு, இடிந்த நிலையிலிருந்த இக்கோயிலை முழுவதும் பிரித்து களப்பணி செய்யப்பட்டு, அவர்களால் பராமரிக்கப்படுகிறது.

இக்கோயிலின் கருவறை வடக்குப்புறத்தில் அமைந்த கல் வெட்டில் ‘த்ரைராஜ்ய கடிகாமத்யஸ்த மூவாயிரவர்’ என்றும் ‘கடிகை ஏழாயிரவர்’ என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதில் இருந்து, இங்கு ஒரு பெரிய பல்கலைக்கழகம் இருந்தது என்றும், அங்கே 3000 முதல் 7000 மாணவர்கள் வரை வேதம் பயின்றனர் என்றும் தெரிகிறது.

சங்கரநாராயணர் தரிசனம்!

இந்த பிரம்மதேசம் ஊருக்குள்ளேயே அருள்மிகு சங்கர நாராயணர் கோயில் அமைந்திருக்கிறது. நாராயணனாகிய பெருமாள் வழிபட்ட சிவலிங்கம் ஆதலால் இந்தப்பெயர். மேற்குப் பார்த்த திருவுருவம், பாணம், நாகாபரணத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. லிங்கத் திருமேனிக்கு நேர் எதிராக, நான்கு திருக்கரங்களோடு, மேல் இரு கரங்களில் சக்கரம், சங்கு ஏந்தியும், கீழ் இரு திருக்கரங்களை அபய, வரத முத்திரைகளோடு வைத்துக் கொண்டும் பெருமாள் காட்சியளிக்கிறார்.

இக்கோயிலில் அம்பாளின் திருநாமம் சிவகாமசுந்தரி. பஞ்ச கோஷ்ட மூர்த்தியர் மிகச்சிறப்பாக உள்ளனர். குறிப்பாக இங்கு அருளும் தட்சிணாமூர்த்தியின் வடிவம் காண்போரைப் பரவசப்படுத்தும். கல்லால மரத்தினடியில், உத்குடிகாசன கோலத்தில், இடதுகாலை மடித்து பாதத்தை முயலகனின் கை மீது வைத்த நிலையில், நான்கு திருக்கரங் களோடு அருள்கிறார். மேலிருகரங்களில் அட்சமாலையும் நாகமும் திகழ, கீழிரு கரங்களில் ஒன்று சின்முத்திரைக் காட்ட, மற்றொன்றில் சிவஞானபோதம் எனும் ஓலைச்சுவடி விளங்குகிறது. சடையில் கங்கையுடன் கூடிய இந்த மூர்த்தியை மிக அற்புதமாகப் படைத்திருக்கிறார் சிற்பி.

இக்கோயிலில் உள்ள வில்வம் மிகவும் அபூர்வமானது. 2006-ம் ஆண்டில் இக்கோயில் திருப்பணி செய்யப்பட்டு மிகப்பொலிவோடு விளங்குகிறது.

இக்கோயிலைத் தவிர, பிரம்மதேசத்தின் ஒருபகுதியான புதூரில் பிரம்மகோடீஸ்வரர் கோயிலும், கன்னிகேஸ்வரர் கோயிலும் உள்ளன. நாட்டேரியில் ஸ்ரீநிவாஸப் பெருமாள் கோயிலும், காசிவிஸ்வநாத ஸ்வாமி கோயிலும் உள்ளன. காஞ்சி மஹா பெரியவருக்கு மிகவும் உகந்த இசையலூர் கிராமம் பிரம்ம தேசத்துக்கு அருகில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரத்தையடுத்த பெருங்கட்டூரிலிருந்து ஆற்காடு செல்லும் சாலையில், (காஞ்சியில் இருந்து) சுமார் 25 கி.மீ தூரத்தில் உள்ளது இவ்வூர். நீங்களும் ஒருமுறை, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தலத்துக்குச் சென்று திருக்கோயில்கள் யாவற்றையும் தரிசித்து வரம்பெற்று வாருங்கள்.

Leave a Reply