shadow

சமயபுரம் கோவில் பிரகாரமண்டபத்தில் வரையப்பட்டுள்ள மாரியம்மனின் விஸ்வரூப ஓவியம்

திருச்சி அருகே சமயபுரத்தில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. தீராத வினைகளையும் தீர்த்து வைக்கும் சக்தியும், நோய் நொடிகளில்லாத ஆரோக்கியமான வாழ்க்கையையும், தன்னை நம்பி வருபவர்களின் வேண்டுதல்களை நிறை வேற்றும் சக்தி படைத்தவள் சமயபுரம் மாரியம்மன் என்று பக்தர்கள் எல்லோரும் நம்பிக்கையுடன் வணங்குகின்றனர். இத்தகைய சிறப்புமிக்க இக்கோவிலில் கடந்த (பிப்ரவரி) மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபி ஷேகத்தையொட்டி பல கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கோவில் புனரமைக்கப் பட்டது. இதனால் கோவில் கோபுரங்கள், சிற்பங்கள் புதிதாக வர்ணம் தீட்டப்பட்டு, புதுப்பொலிவு பெற்றுள்ளன. அதிலும் கோவிலின் உட்பகுதியில் உள்ள பிரகாரத்தின் மேற்பகுதியில் அம்மனின் பல்வேறு விதமான தோற்றங்கள் ஓவியமாக தீட்டப்பட்டுள்ளன. குறிப்பாக ஓவியத்திற்கெல்லாம் முத்தாய்ப்பாக மேற்கு பகுதியில் உள்ள பிரகார மண்டபத்தின் மேல் பகுதியில் அம்மனின் விஸ்வரூப காட்சி வரையப்பட்டுள்ளது. அதனை காணும் பக்தர்கள் மெய்சிலிர்க்கும் வகையில் அந்த ஓவியம் உள்ளது.

மாரியம்மனின் கழுத்து பகுதியில் இடதுபுறத்தில் 14 மற்றும் வலதுபுறத்தில் 12 என்று பல்வேறு தெய்வங்களின் தலை உருவங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியம் சுமார் 48 அடி உயரமும், 32 அடி அகலத்துடனும் வரையப்பட்டுள்ளது. சாதாரணமாக எல்லோராலும் சாமியின் படத்தை வரைய முடியாது. பொதுவாக ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு ஓவியர் மறைந்திருப்பதாக சொல்லப்படுவது உண்டு. ஒவ்வொரு வீட்டிலும் காலை எழுந்தவுடன் வீட்டு வாசலில் கோலமிடும் பெண்கள் கூட ஒரு ஓவியர்தான். ஒரு படத்தை தத்ரூபமாகவும், உயிரோட்டமாகவும் வரைவதில்தான் ஒருவன் மிகச்சிறந்த ஓவியனாகிறான்.

பக்தர்கள் கோவிலுக்குச் சென்று கடவுளை வணங்குவது தங்களின் கவலைகளை போக்குவதற்காகவும், கஷ்டத்தை நீக்கிக் கொள்வதற்காகவும், மனநிறைவை பெறுவதற்காகவும்தான். அந்த வகையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அம்மனை வழிபட்டபின், கோவில் பிரகாரத்தில் மேலே வரையப்பட்டுள்ள விஸ்வரூப மாரியம்மனின் ஓவியத்தை பார்த்ததும் தங்களையே மறந்து சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து விடுகின்றனர். கோவில் சுற்றுப்பிரகாரம் என்பதை ‘சித்திர பிரகாரம்‘ என்று பக்தர்கள் அழைக்க தொடங்கி விட்டனர்.

தத்ரூபமாக அந்த ஓவியத்தை வரைந்த ஓவியரான ரமேஷ் கூறியதாவது;-

நான் நாகை மாவட்டம், சீர்காழியில் பிறந்தேன். எனது தாத்தா, தந்தை ஆகியோர் ஓவியத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு சிறந்து விளங்கினர். அவர்களை தொடர்ந்து நானும் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறேன். சுமார் 30 ஆண்டுகளாக இந்த பணியில் ஈடுபட்டு வரும் நான், தமிழகம் மட்டும் அல்லாமல், இந்தியாவில் பல்வேறு கோவில்களிலும் பல்வேறு விதமாக சாமி ஓவியங்களை வரைந்துள்ளேன்.

12 ஆண்டுகளுக்கு முன்பு சமயபுரம் மாரியம்மன் கோவிலிலும் பல்வேறு தோற்றங்களில் மாரியம்மன் ஓவியத்தை வரைந்தேன். மீண்டும் இந்தாண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தையொட்டி நடந்த திருப்பணியின்போதும், நான் வரைந்த ஓவியங்களில் என் மனம் கவர்ந்த வகையில் அமைந்தது இந்த விஸ்வரூப மாரியம்மன் ஓவியம்தான். இந்த ஓவியத்தை வரைவதற்கு சுமார் 48 நாட்கள் ஆனது. இந்தப்பணியில் எனது சகோதரர் ரவி உள்பட 7 ஓவியர்கள் தினமும் 8 மணி நேரம் பணியாற்றினார்கள்.

இந்தப்பணி சிறப்பாக அமைவதற்கு என்னை சுதந்திரமாகவும், உற்சாகமாகவும், வேலை செய்ய அனுமதித்த கோவில் இணை ஆணையர் தென்னரசும், மணியக்காரர் ரமணியும், அவர்கள் கொடுத்த உற்சாகமும் தான் காரணம். மேலும், அம்மனின் அருள் மிக முக்கியமானது. ஒரு முழுமையான ஓவியனாக என்னை வெளிப்படுத்திக்கொள்ள பெரும்பாக்கியமாக இந்த ஓவியம் அமைந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply