shadow

சண்டக்கோழி 2′ விமர்சனம்

விஷால், மீரா ஜாஸ்மின் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிப்படம் ‘சண்டக்கோழி’. இந்த படத்தின் இரண்டாம் பாகமாக ‘சண்டக்கோழி 2’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை பார்க்காமல் இரண்டாம் பாகத்தை பார்க்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

தேனி அருகே உள்ள ஏழு ஊர்கள் இணைந்தும் நடத்தும் திருவிழா ஒன்று ஏழு ஆண்டுகளாக ஒரு பிரச்சனையால் நடக்காமல் உள்ளது. இந்த திருவிழாவை மீண்டும் நடத்த அந்த பகுதியின் பெரியவர் பெரும் முயற்சி செய்து அனுமதி வாங்கியுள்ளார். ஆனால் ஒரு ஊரை சேர்ந்த வரலட்சுமி மட்டும் தனது கணவரை கொலை செய்துவிட்டு மீதி இருக்கும் ஒருவரை தன்னிடம் ஒப்படைத்தால் மட்டுமே திருவிழாவை நடத்த முடியும் என்கிறார். அவரது தரப்பை சமாதானப்படுத்தி திருவிழா நடத்த வரலட்சுமி தரப்பு ஒப்புக்கொண்டாலும் திருவிழா முடியும் ஏழு நாட்களுக்குள் அந்த நபரை கொலை செய்ய முயற்சி செய்யும் வரலட்சுமி குரூப்புக்கும், அந்த நபரை காப்பாற்றுவதாக வாக்குறுதி கொடுத்த ராஜ்கிரண் தரப்புக்கும் இடையே நடக்கும் ஏழு நாள் போர்தான் இந்த படத்தின் மீதிக்கதை

முதல் பாகத்தின் பாலு கேரக்டரில் மீண்டும் விஷால் நடித்துள்ளார். முதல் பாகத்தில் பார்த்த அதே கோபம், ஆக்ரோஷம், காமெடி, ரொமான்ஸ் இந்த படத்திலும் உள்ளது. தந்தை ராஜ்கிரண் கொடுத்த வாக்கை காப்பாற்ற போராடும் மனப்பான்மை, தந்தை உயிருக்கு ஆபத்தாக இருந்தபோதிலும் திருவிழாவை பொறுப்புடன் நடத்த முயற்சிப்பது, கீர்த்தி சுரேஷுடன் வெட்கம் கலந்த காதலுடன் வலம் வருவது என விஷால் நடிப்பில் அசத்தியுள்ளார்.

கீர்த்திசுரேஷா இப்படி என அசர வைத்துள்ளார். ஒரு அசல் மதுரைக்கார பெண்ணாகவே மாறியுள்ளார். பாவாடை தாவணி காஸ்ட்யூம் அவருக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது. முதலில் விஷாலை யார் என தெரியாமல் கலாய்ப்பது, தெரிந்த பின்னர் அதிர்ச்சி அடைவது, பின் விஷால் தன்னை வேண்டாம் என்று கூறும்போது ஆத்திரம் அடைவது என ஒரு கலகலப்பான, ரொமான்ஸ் மற்றும் செண்டிமெண்ட் என ஒரு கலவையான கீர்த்திசுரேஷை பார்க்க முடிகிறது.

வரலட்சுமி வில்லி வேடத்தில் கலக்கியுள்ளார். கணவரை கொலை செய்த குரூப்பில் மீதியுள்ள ஒருவரை கொலை செய்ய அவர் போடும் திட்டங்கள், அந்த திட்டங்கள் விஷாலால் தோல்வி அடையும்போது அடையும் ஆத்திரம், கிளைமாக்ஸில் விஷாலுடன் மோதும் ஆக்ரோஷம் என அவருடைய நடிப்பு அடுத்த லெவலுக்கு உள்ளது. இனி வரலட்சுமிக்கு பல நெகட்டிவ் வேடங்கள் தேடி வர வாய்ப்பு உள்ளது.

ராஜ்கிரண் இதே பாணியில் பல படங்கள் நடித்துவிட்டாலும் அவரை மீண்டும் ஒருமுறை பெரிய மனிதர் கேரக்டரில் பார்க்க சலிக்கவில்லை. ராஜ்கிரண் காட்டும் கெத்து வேறு எந்த நடிகருக்கும் வருமா? என சந்தேகம் தான்

முனிஷ்காந்த், கஞ்சா கருப்பு இருவரும் படத்தை கலகலப்பாக நகர்த்த உதவியுள்ளனர். குறிப்பாக முனிஷ்காந்தை இயக்குனர் நன்றாக பயன்படுத்தியுள்ளார்.

படத்தின் 75% காட்சிகள் திருவிழாவில் நடப்பதால் பிரமாண்டமான திருவிழா செட் போட்டுள்ளனர். அது செட் என்றே தெரியாமல் நிஜ திருவிழாபோல் அதை படம் பிடித்த கேமிராமேன் சக்திவேலின் ஒளிப்பதிவு சூப்பர். இருப்பினு திருவிழா காட்சிகளின் நீளத்தை எடிட்டர் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்

இந்த படத்தின் இன்னொரு ஹீரோ என யுவன்ஷங்கர் ராஜாவை கூறலாம். கம்பத்து பொண்ணு’ பாடல் உள்பட அனைத்து பாடல்களும் கேட்கும் வகையில் உள்ளது. அதேபோல் பின்னணி இசையில் பட்டையை கிளப்பியுள்ளார். குறிப்பாக வரலட்சுமியின் காட்சிகளுக்கு என அவர் அமைத்துள்ள தீம் மியூசிக் அபாரம்

இயக்குனர் லிங்குசாமி முதல் பாகத்தின் சாயல் இல்லாமல் இரண்டாம் பாகத்தை வித்தியாசமாக நகர்த்தியுள்ளார். முதல் பாகத்தின் லால் கேரக்டரை சரியான ஒரு காட்சியில் இணைத்துள்ளதும் சூப்பர். ஆக்சன், ரொமான்ஸ், காமெடி என சம அளவில் கலந்த திரைக்கதையால் படம் எந்த இடத்திலும் போரடிக்கவில்லை. குறிப்பாக ஆங்காங்கே ஒருசில டுவிஸ்டுகள், திருப்பங்கள் படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது. இருப்பினும் ஒருசில காட்சிகள் நம்ப முடியாமலும் லாஜிக் இல்லாமல் இருக்கின்றது. மொத்தத்தில் ஒரு நல்ல கமர்ஷியலான ஜாலியான படம் பார்க்க விரும்புபவர்கள் குடும்பத்துடன் சென்று இந்த படத்தை ரசிக்கலாம்

ரேட்டிங்: 3.5/5

Leave a Reply