shadow

சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாகரை வணங்கினால் என்னென்ன நன்மைகள்?

சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், விநாயகரை மனதார வணங்குவோம். கஷ்டங்களையும் நஷ்டங்களையும் போக்கி அருள்வார் கணபதிபெருமான்.

முருகனுக்கு கந்த சஷ்டி மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அதேசமயம் மாதந்தோறும் வரும் சஷ்டியும் விரதமிருந்து அனுஷ்டிக்கப்படுகிறது.

சிவனாருக்கு மாசியில் மகாசிவராத்திரி என்று கோலாகலமாக பூஜைகள் நடப்பது தெரியும்தானே. அதேநேரம், மாதந்தோறும் வருகிற சிவராத்திரியிலும் விரதம் இருப்பார்கள் பக்தர்கள்.

மார்கழியின் வைகுண்ட ஏகாதசி மிகப்பிரசித்தம். ஆனாலும் மாதந்தோறும் வருகிற ஏகாதசி திதியின் போது பக்தர்கள் விரதமிருந்து, பெருமாளை ஸேவிப்பார்கள்.

அதேபோல், விநாயக சதுர்த்தியின் போது, நாடு முழுவதும் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு இருக்கும். மண் பிள்ளையாரை வாங்கிச் சென்று, பூஜித்து, பிறகு மண் பிள்ளையார விசர்ஜனம் செய்வார்கள். ஆனாலும் மாதந்தோறும் வருகிற சங்கடஹர சதுர்த்தி நன்னாளில், விநாயகரைத் தரிசிப்பதும் அவருக்கு அருகம்புல் மாலை சார்த்துவதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

இன்று சங்கடஹர சதுர்த்தி (3.4.18). இந்த நாளில், அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் செல்லுங்கள். அபிஷேகப் பொருட்களை வழங்குங்கள். விநாயகருக்கு ஒரு வஸ்திரமும் அருகம்புல் மாலையும் வெள்ளெருக்கு மாலையும் சார்த்தி, பிரார்த்தனை செய்யுங்கள்.

சங்கடஹர சதுர்த்தி நாளில், ஆனைமுகனைத் தரிசித்து வேண்டிக்கொண்டால், கஷ்டங்களும் நஷ்டங்களும் காணாது போகும். வாழ்வில் உயர்வு அனைத்தும் தந்தருள்வார். காரியத் தடைகள் யாவும் விலகும். நினைத்ததெல்லாம் நிறைவேற்றித் தந்தருள்வார் கணபதி பெருமான்!

Leave a Reply