shadow

சக்தி தரிசனம் – மணவாழ்க்கை அருளும் மாவடி தரிசனம்!

கோயில்களின் நகரமாம் காஞ்சியில், சிவனார் ஏகன் அநேகனாக அருளும் திருக்கோயில் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில். இறைவன் பிருத்வி லிங்கமாக அருளும் கோயில், அம்பிகைக்கு அருள்பாலித்த ஆலயம், சகஸ்ரலிங்க தரிசனம் கிடைக்கும் சந்நிதி… இப்படியான இந்தத் திருக்கோயிலின் சிறப்புகளில் குறிப்பிடத்தக்கது மாவடி தரிசனம்!

அம்பிகை மணலால் லிங்கம் அமைத்து, காஞ்சியில் தவமியற்றினாள். அப்போது, கதிரவனின் வெங்கதிர்கள் அம்பிகையைத் தகிக்கக்கூடாதே என்று எண்ணியதுபோல், நான்கு வேதங்களே நான்கு கிளைகளாகப் படர்ந்து விரிந்த மாமரமாகத் தோன்றி, அன்னைக்குக் குளிர்நிழல் தந்தன.

அந்த மாமரத்தின் அடியில்தான் சிவபெருமான் அம்பிகைக்குக் காட்சி தந்து அருளினார். ஆகவே, அவருக்கு ஏகாம்பரம் என்ற திருநாமமும் ஏற்பட்டதாம்.

இந்த அருளாடலின் உன்னதத்தை உலகுக்கு உணர்த்தும்விதமாகத் திகழ்கிறது மாவடி சந்நிதி.

வழிபடுவது எப்படி?

இறைவன் மாமரத்தின் அடியில் அம்பிகைக்குத் தரிசனம் தந்து அருளியதை நினைவுகூர்வதுபோல், ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்ஸவத்தின் 9-வது நாள், `மாவடி சேவை’ என்ற வைபவம் நடைபெற்று வருகிறது. அதேபோல், ஆலயப் பிராகாரத்தில் அமைந்துள்ள `மாவடி’ சந்நிதி தரிசிக்க வேண்டிய ஒன்று. சற்று உயரமான இடத்தில், மாமரத்தின் அடியில் அமைந்துள்ளது இந்தச் சந்நிதி. இந்த மரத்தைப் பிரதட்சணம் செய்து, அம்மையப்பரை வழிபட்டால், கன்னிப் பெண்களுக்கு விரைவில் நல்ல வரன் அமைந்து, திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தலத்தின் பழைமையான மாமரம் பட்டுப்போய்விட, வேளாண் விஞ்ஞானிகளின் உதவியுடன் பழைய மரத்தின் மரபணுக்களைக் கொண்டு ஒரு புதிய மரத்தை உருவாக்கினார்களாம்.

பழைய மரத்தின் ஒரு பகுதியைக் கண்ணாடிப் பேழையில் வைத்துள்ளார்கள்.

எப்படிச் செல்வது?

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ தூரத்தில், `பெரிய காஞ்சி’ பகுதியில் அமைந்திருக்கிறது ஸ்ரீஏகாம்பரநாதர் ஆலயம்.

Leave a Reply