shadow

கோலவிழி அம்மன் கோலாகலம் தருபவள்

2கோலவிழி அம்மன் பெயருக்கு ஏற்ற அழகிய பெரிய கண்களை உடையவள். பாவம் போக்கும் பத்ரகாளியாக இங்கே சென்னைக்கு பக்தர்களைத் தேடி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்தவள் என்று நம்பிக்கை நிலவுகிறது. மயிலை அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோயிலின் காவல் தெய்வம். பிரபலமான மயிலை அறுபத்துமூவர் விழாவினையொட்டி நடைபெறும் ஊர்வலத்தை முன்னெடுத்துச் செல்பவள் இவளே. மயிலையின் கிராம தேவதை இந்த அருள்மிகு பத்ரகாளி என்ற அருள்மிகு கோலவிழி அம்மன்தான் என்கிறார் இங்குள்ள தலைமைப் பூசாரி தனசேகர்.

பலன் தரும் பத்ரகாளி

சென்னை மயிலாப்புரில் உள்ள பிரசித்தி பெற்ற இந்தக் கோலவிழி அம்மன் கோயிலில் சுதைச் சிற்பமாக வடிவெடுத்துள்ளாள் பத்ரகாளி. ஆடை அலங்காரங்கள் வெகு சிறப்பாகச் செய்யப்படுகிறது. இந்த அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது என்றாலும் அருள் மழை பொழிவதில் இவளுக்கு நிகர் யார் உண்டு என்கின்றனர் பக்தர்கள். லட்சோபலட்சம் பக்தர்களை ஈர்க்கும் இந்த பத்ரகாளி இங்கு எழுந்தருளியது விக்கிரமாதித்தன் காலத்திற்கு முன்னர் என்கிறார்கள்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அகோரிகள் வழிபட்ட ஆலயம் என்றும், சித்தர்கள் இன்றும் இங்கு உலா வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. சோழர் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இக்கோயிலில் ஆதிசங்கரர் அம்மனை அமைதிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. வடக்குப் பார்த்து அமர்ந்திருக்கும் காளி என்பது இத்திருக்கோயிலின் விசேஷங்களில் ஒன்று. வேண்டுவனவற்றை எல்லாம் வாரி வழங்கும் மாரியான இவள் அருளுவது அமர்ந்த திருக்கோலத்தில்.

திருக்கோயில் திருவலம்

அகண்ட வாயிற்புறம் கொண்ட இத்திருக்கோயிலுக்குள் நுழைந்தவுடன் தல விருட்சங்களான அரசும் வேம்பும் வரவேற்கின்றன. பிள்ளை அருகில் இருந்தால் தாய் கோபமற்று ஆனந்தமாக இருப்பாள் என்பது சாஸ்திர விளக்கம். இங்கு தாயான அம்மன் குடி கொண்டுள்ள கருவறைக்கருகில் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அதனால் பத்ரகாளி சுதைச் சிற்பமாக பிரமாண்டமான உருவில் இருந்தாலும் உக்கிரம் நீங்கிக் களிப்புடன் வீற்றிருக்கிறாள்.

அம்மன் சன்னிதிக்கு நேரெதிரே பலிபீடமும், சிம்ம வாகனமும் அமைக்கப்பட்டுள்ளன. அமர்ந்த திருக்கோலத்தில் முன்புறம் சிறிய வடிவிலான அம்மனும், பின்புறம் பிரம்மாண்ட கோலத்தில் சுதைச் சிற்பமாகக் கோலவிழி அம்மனும் திருக்காட்சி அளிக்கின்றனர்.

அபிஷேக ஆராதனைகள் சிறிய அம்மனுக்கும், அலங்காரம் ஆராதனைகள் பெரிய அம்மனுக்கும் நடத்தப்படுகின்றன. அமர்ந்த கோலத்தில் இடது காலடியில் அசுரனின் தலையை அழுத்தி, வலது காலை மடக்கிய கோலத்தில் அமர்ந்துள்ளாள் அன்னை.

எண் கரங்களில், சூலம், வாள், உடுக்கை, வேதாளம், கேடயம், அங்குசம், மணி, கபாலம் ஏந்தி அன்னை காட்சி தருகிறாள். ஆடி மாதமானதால் பெண் பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி அம்மனை வழிபட்டுக் கொண்டாடினர்.

ஆன்ம பலம் தருபவள் இந்தக் கோலவிழி அம்மன். வாழ்வில் ஒருமுறை தரிசித்தாலும் வாழ்வாங்கு வாழலாம் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

Keywords: கோலவிழி அம்மன், பத்ரகாளி, மயிலாப்பூர் பத்ர

Leave a Reply