shadow

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்ணான நயன்தாரா தனது குடும்பத்தில் உள்ள அப்பா ஆர்.எஸ்.சிவாஜி, அம்மா சரண்யா பொன்வண்ணன் மற்றும் தங்கை ஜாக்குலின் ஆகியோர்களுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அவர் வீட்டின் அருகே மளிகை கடை வைத்திருக்கும் யோகிபாபு, நயன்தாராவை ஒருதலையாக காதலித்து வருகிறார்.

குடும்ப பொறுப்பு காரணமாக சம்பளம் போதாமல் தவிக்கும் நயன்தாரா, முதலாளியின் தொல்லை காரணமாக வேறு வேலைக்கு செல்கிறார். இந்த நிலையில், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு செல்லும் அம்மா சரண்யா பொன்வண்ணனுக்கு புற்றுநோய் இருப்பதும் அதை சரி செய்ய மிகப்பெரிய தொகை வேண்டும் என்பதையும் தெரிந்து அதிர்ச்சி அடைகிறார் நயன்தாரா

இந்த நிலையில்தான் தற்செயலாக, போதைப்பொருள் கும்பல் ஒன்றிடம் சிக்கிக் கொள்கிறார் நயன்தாரா. போலீசாரின் கெடுபிடியால் போதை பொருளை கடத்த முடியாமல் தவிக்கும் அந்த கும்பல் ஜாக்குலினை பிடித்து வைத்துக் கொண்டு, நயன்தாராவிடம் போதைப் பொருளை எடுத்து கொடுத்து ஜாக்குலினை அழைத்து செல்லுமாறு மிரட்டுகிறது.. ஜாக்குலினை காப்பாற்றுவதற்காக போதைப் பொருளை சரியான இடத்தில் கொண்டு சென்று சேர்க்கும் நயன்தாராவுக்கு இதையே தொழிலாக செய்தால் அம்மாவை காப்பாற்ற பணம் கிடைத்துவிடும் என்று யோசிக்கின்றார். இதனால் அம்மாவை காப்பாற்ற போதைப் பொருளை கடத்த முடிவு செய்யும் நயன்தாராவுக்கு ஏற்படும் பிரச்சனைகள், திடீர் திருப்பங்கள் ஆகியவையும் இவை அனைத்தையும் நயன்தாரா எப்படி சமாளித்தார் என்பதும் தான் இந்த படத்தின் மீதிக்கதை

கடந்த சில வருடங்களாக வலிமையான கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா, இந்த படத்தில் ஒரு அப்பாவி அதே சமயம் அழுத்தமான கேரக்டரை ஏற்று நடித்துள்ளார். ஒரு அமைதியான, அம்மாஞ்சியான தோற்றத்துடன் வந்து கில்லாடி வேலைகளை பார்க்கும் நயன்தாராவின் நடிப்பு உண்மையிலேயே சூப்பர். குறிப்பாக யோகி பாபுவுடன் அவரது கதாபாத்திரம் வரும் காட்சிகள் ரசிர்களுக்கு துள்ளலை கொடுக்கிறது.

நயன்தாராவின் சாந்தத்தை பார்த்து காதலில் விழுந்த யோகி பாபு, நயன்தாராவின் மறுபக்கத்தை அறிந்து அதில் சிக்கிக் கொண்டதாக வரும் காட்சிகளில் நடிப்பில் பின்னி பெடலெடுக்கின்றார். கல்யாண வயசு பாடலை ரசிக்கும் வகையில் மாற்றியதில் யோகிபாபுவின் பங்கு பெருமளவு இருக்கிறது.

சரண்யா பொன்வண்ணன் யதார்த்தமான கதாபாத்திரத்தில் வந்து ரசிக்க வைக்கிறார். ஜாக்குலினின் கதாபாத்திரம் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. முதல் படம் போல இல்லாமல், ரசிகர்களை கவரும்படியாகவே ஜாக்குலின் நடித்திருக்கிறார். அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருப்பவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஹரிஷ் பேரிடி, சரவணன், மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், அறந்தாங்கி நிஷா என மற்ற கதபாத்திரங்களும் படத்திற்கு வலுவூட்டியிருக்கின்றன.

தனது முதல் படத்திலேயே டார்க் காமெடி ஜானரில் ரசிகர்களை ஓரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கிறார் நெல்சன் திலீப்குமார். அவருக்கு பாராட்டுக்கள். தனது அம்மாவை காப்பாற்ற போதை பெருள் கடத்தலில் ஈடுபடும் நயன்தாரா அதில் சந்திக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி கதை நகர்கிறது. காமெடி கலந்த த்ரில்லர் படமாக திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. எனினும், படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருந்தால் படம் இன்னும் ரசிக்கும்படியாக இருந்திருக்கும்.

அனிருத் இசையில் பாடல்கள் செம ஹிட்தான். திரையில் பார்க்கவும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

மொத்தத்தில் `கோலமாவு கோகிலா’ கொண்டாட்டம்.

ரேட்டிங்: 4/5

Leave a Reply