shadow

குடும்பத்தை நேசிப்பவர்களுக்கு கைகொடுக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ்!
p32a
லைஃப் இன்ஷூரன்ஸ் திட்டங்களில் மிகவும் எளிமையான பாலிசி என்றால் அது டேர்ம் இன்ஷூரன்ஸ் தான். இதில் தனிநபர் ஒருவர் குறிப்பிட்ட தொகையை பிரீமியமாக கட்டவேண்டும். பாலிசிதாரர் எதிர்பாராத விதமாக மரணம் அடையும் வரையிலோ அல்லது பாலிசி காலம் முடியும் வரையிலோ செலுத்த வேண்டியிருக்கும்.

இடைப்பட்ட காலத்தில் பாலிசிதாரருக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் காப்பீடு எடுக்கப்பட்டிருந்த மொத்த தொகை அவரின் குடும்பத்தாருக்குக் கிடைக்கும்.

ஏன் டேர்ம் இன்ஷூரன்ஸ்?

இன்றைக்கு ப்பல குடும்பங்கள் ஒருவருடைய வருமானத்தை மட்டுமே நம்பியிருக்கின்றன. வருமானம் ஈட்டும் அந்த நபருக்கு எதிர்பாராத விதமாக நிகழும் சம்பவங்களினால், அவரின் வருமானத்தை அந்தக் குடும்பத்தி னர் இழக்க நேரிடலாம். அந்தப் பொருளாதார இழப்பை ஈடுசெய்ய இந்த பாலிசி உதவும்.  

உதாரணமாக, ஒரு நபரின் வருமானம், செலவு மற்றும் கடன் ஆகியவற்றை கவர் செய்யும் வகையில் பாலிசி கவரேஜ் தொகையை நிர்ணயித்துக் கொள்ளலாம். அதாவது, 30 வயதுடைய திருமணமான ஆண், மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார் என வைத்துக் கொள்வோம். அவர் ரூ.10 லட்சம் வீட்டுக் கடன் வாங்கி இருக்கிறார். (ரூ.25,000 X 12 மாதங்கள் X 28 வருடம் = ரூ.84,00,000. இதனுடன் வீட்டுக் கடன் ரூ.10,00,000-த்தை சேர்த்தால், மொத்தம் ரூ.94,00,000.) ஆக மொத்தமாக அவரின் தேவை ரூ.94,00,000-க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது அவசியம். டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தபின் அவருக்கு எதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், அவரது குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து வீட்டுக் கடன் செலுத்த வேண்டியதில்லை. அதனுடன் அன்றாட தேவைகளையும் யாருடைய உதவியும் இல்லாமல் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.  

இந்த பாலிசியின் மூலமாக கிடைக்கும் தொகையை, தங்களது எதிர்கால பொருளாதார தேவை களுக்கும், கடன்கள் இருப்பின் அவற்றை அடைக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எதற்கெல்லாம் கவரேஜ் கிடைக்கும்?

சில டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் கிரிட்டிகல் இல்னஸ், விபத்துக் காப்பீடு கவரேஜூம் வழங்குகிறது. அதாவது, தீவிர நோயினால் பாதிக்கப்படும்போது சிகிச்சைக்கான தொகையைக் க்ளெய்ம் செய்ய முடியும். அதேபோல, விபத்தினால் மரணம் அடையும்போது கூடுதல் கவரேஜ் கிடைக்கும்.

மாறி வரும் நம் வாழ்க்கை முறையினால் வாழ்வியல் சார்ந்த பல பிரச்னைகள் உருவாகின்றன. குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபர் தீவிர நோயினால் பாதிக்கப் படும்போது பொருளாதார ரீதியாக பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதாவது, தீவிர நோய் பாதிப்பு இருப்பது தெரிந்தால் கிரிட்டிகல் இல்னஸ் கவரேஜ் தொகை கிடைக்கும்.

15 வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது டேர்ம் இன்ஷூரன்ஸ் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் உள்ளது. அதாவது, பாலிசியின் பிரீமிய மானது 50% வரை குறைந்துள்ளது. மேலும், இப்போது டேர்ம் இன்ஷுரன்ஸ் பாலிசி விரிவாக்கப்பட்டு, பல்வேறு சிறப்பு அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது, விபத்துக்காப்பீடு, தீவிர நோய் பாதிப்பு, குணப்படுத்த இயலாத நோய்கள் ஆகியவற்றுக்கு கவரேஜ் கிடைக்கும். இதனுடன் ஆயுள் காப்பீடும் கிடைக்கும்.

பாலிசி எடுப்பதற்குமுன் கவனிக்க வேண்டியவை!

க்ளெய்ம் செட்டில்மென்ட் ரேஷியோ: நீங்கள் பாலிசி எடுக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் க்ளெய்ம் ரேஷியோ தொடர்ந்து அதிகமாக இருக்க வேண்டும். அது போன்ற நிறுவனங்களில் பாலிசி எடுப்பது நல்லது.

நாமினி: பாலிசி எடுக்கும் போது நாமினி யார் என்பதை குறிப்பிடுவது அவசியம். அதாவது, அந்த பாலிசியின் மூலமாக யார் பயன் அடைய வேண்டும் என நினைக்கிறீர்களோ, அவர்களை நாமினியாக நியமிப்பது நல்லது.

உண்மையான தகவல்களை தருவது: பாலிசி எடுக்கும்போது பாலிசிதாரர் தன்னைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் சரியாக கொடுப்பது அவசியம். முக்கியமாக, மருத்துவ ரீதியான தகவல்களை தருவது முக்கியம்.  

மருத்துவப் பரிசோதனை: மருத்துவப் பரிசோதனையில் உடல் ரீதியாக பாலிசிதாரருக்கு பிரச்னை இருப்பது தெரிய வந்தால் பிரீமியம் அதிகரிக்கும். இதனால் பாலிசி எடுக்கும் முடிவை மாற்றிக்கொள்ள கூடாது. இதுபோன்ற சூழ்நிலையில்தான் உங்களுக்கு நிதி சார்ந்த பாதுகாப்பு அதிகம் தேவை.

நாம் இல்லாவிட்டாலும் நம் குடும்பம் எந்த வகையிலும் கஷ்டப்படக் கூடாது என்று நினைப்பவர்கள் டேர்ம் இன்ஷுரன்ஸ் பாலிசியை இளமையிலேயே எடுப்பது அவசியம்.

Leave a Reply